இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்ட தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அனைத்து இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்டவாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
முஹம்மது நபிகள் குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இஸ்லாமிற்கு சேவை செய்ய வேண்டிய இஸ்லாமியர்கள், இது போன்ற விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், “இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் நேரடி அவமதிப்புக்கு காரணமாகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
“இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மூலம் எந்த ஒரு முடிவையும் எட்டுவது அல்ல, மாறாக இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேலி செய்வதும் அவதூறு செய்வதும் தான். சில நியாயங்களைச் சேகரிக்க, இந்த தொலைக்காட்சி சேனல்களுக்கு அவர்களின் விவாதங்களில் இஸ்லாமிய முகங்கள் தேவை… நாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி சேனல்கலையும் புறக்கணித்தால், அது அவர்களின் டிஆர்பியை எதிர்மறையாக பாதிப்பதோடு, இந்த விவாதங்களின் மூலம் அவர்கள் அடைய விரும்பிய முடிவை அடையத் தவறிவிடுவார்கள்.” என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்டவாரிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ்.க்யூ.ஆர் இலியாஸ், “சில தொலைக்காட்சி சேனல்கள் ஒரு பிரச்சினையை உண்மையாக புரிந்து கொள்ள அல்லது ஒரு முடிவுக்கு வருவதற்கு இதுபோன்ற விவாதங்களை நடத்துவதில்லை. அவை சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் துருவப்படுத்துவதற்காக நடத்தப்படுகின்றன. நூபுர் ஷர்மா விவாதத்தைப் போலவே, அவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம், மதம் மற்றும் குறிப்பிட்ட ஆளுமைகளை இழிவுபடுத்துகிறார்கள். நபியை அவமதித்ததன் மூலம், அவர் இந்திய இஸ்லாமியர்களை மட்டும் குறிவைக்கவில்லை. மாறாக, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களை குறிவைத்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாதது மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது. இதுபோன்ற விவாதங்களில் பங்கேற்பதன் மூலம், அவர்களுக்கு (டிவி சேனல்கள் மற்றும் இந்த விவாதங்களுக்கு) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது, அதை நாங்கள் இனி செய்ய மாட்டோம்.” என்று கூறியுள்ளார்.
நுபுர் சர்மா சர்ச்சை குறித்து வாரியம் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளதாகவும், வெறும் இடைநீக்கம் பாஜகவால் எடுக்கப்பட்ட “போதுமான நடவடிக்கை அல்ல” என்று இலியாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணமான கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் இந்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து பிரதமரிடமிருந்தோ, உள்துறை அமைச்சரிடமிருந்தோ ஏன் எந்த அறிக்கையும், பதிலும் வரவில்லை. ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?” என்று இலியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: The Indian Express
மதுரை ஆதீனத்திற்கு வாத்தி ரெய்டு | கொந்தளித்த actor Vijay ரசிகர்கள் | BJP | VHP | Aransei Explainer
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.