அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மேற்கு வங்காள மாநிலத் தலைவர் அன்வர் பாஷா தனது ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஓவைசியின் கட்சி ஓட்டுகளைப் பிரித்து பாஜகவின் வெற்றிக்கு உதவுவதாக அன்வர் பாஷா குற்றம்சாட்டியுள்ளார்.
மதத்தைப் பயன்படுத்தி நாட்டைப் பிரிப்பதற்குச் சில சக்திகள் முயன்று வருவதாகவும், அவர்கள் காவி நிறத்தில் வந்தாலும், பச்சை நிறத்தில் வந்தாலும் அப்படிப்பட்ட பிரிவுக்கு மேற்கு வங்கத்தில் இடம் இல்லை என்று அன்வர் பாஷா கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் மக்கள் தொகையில் 30% இஸ்லாமியர்கள் என்று கூறியுள்ள அன்வர் பாஷா, பீகாரைப்போல் இந்த மாநிலத்தில் ஓட்டுகளைப் பிரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 24 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றிபெற்றது.
ஏஐஎம்ஐஎம் போட்டியிட்ட இடங்களில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணிக்கு வர வேண்டிய வாக்குகளை அந்தக் கட்சி பிரித்து விட்டதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
ஆனால், பீகாரில் இஸ்லாமியர்களின் நலனுக்காகக் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் குரல் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ஓவைசி, எந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட தன் கட்சிக்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
ஏஐஎம்ஐஎம் போட்டியிட்ட 24 தொகுதிகளில் வெற்றி பெற்ற தொகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான தொகுதிகளில், அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் மிகவும் சொற்பமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.