Aran Sei

`மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி

credits : muslim village

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனைத்துத் தொகுதிகளிலும் நிறைவு பெற்றுள்ள நிலையில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களையும் காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களையும் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியதை, தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் மூன்றாவது அணியாகக் களமிறங்கிய ராஷ்ட்ரிய லோக் சமதா, பகுஜன் சமாஜ் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) சுமார் 6 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான சீமாஞ்சலில் மட்டும் 14 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் ஏஐஎம்ஐஎம் வெற்றி பெற்றுள்ளது.

பீகாரில் 2015-ம் ஆண்டு முதல் முறையாக தேர்தலைச் சந்தித்த ஏஐஎம்ஐஎம் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது. கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றிய ஏஐஎம்ஐஎம் இந்தச் சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளைப் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றி குறித்து பேசிய ஏஐஎம்ஐஎம் அசாதுதின் ஓவைசி ”எங்களுக்கு, இது ஒரு சிறந்த தருணம். பீகார் மக்கள் அவர்களின் வாக்குகள் மூலம் எங்களைக் கௌரவித்துள்ளனர். பீகாரில் எங்கள் கட்சியை வலுப்படுத்த எங்கள் தலைவர்களும் தொண்டர்களும் நிறைய முயற்சிகளை மேற்கொள்வோம். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களால் முடிந்தவரை பாடுபடுவோம்” என சீமாஞ்சல் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓவைசி ”எங்களுடைய வெற்றிக்கு முழுக் காரணமும் பெண் வாக்காளர்கள்தான். நான் என்னுடைய பொது வாழ்வில் பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். இங்கு நடந்த பொதுக் கூட்டங்களில்தான் பெண்களின் பங்களிப்பு அசாதாரணமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக எதிர்ப்பு வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக விழுவதைத் தடுக்க பாஜகவின் மறைமுகக் கூட்டாளியாக ஓவைசி செயல்பட்டார் எனக் காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தது. இதற்குப் பதிலளித்த அவர் மகராஷ்ட்ராவில் காங்கிரஸ், சிவசேனாவின் மடியில் அமர்ந்துகொண்டு மதச்சார்பின்மை பற்றிப் பாடம் எடுப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தியா டுடே நடத்திய விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரே, மதச்சார்பற்ற வாக்காளர்களின் வாக்குகளை பாஜகவின் மறைமுக ஆதரவுடன் ஓவைசி சீர்குலைத்தார் எனக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த ஓவைசி ”மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது காங்கிரஸ்தான் எனும் போலியான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள்தான் மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததே காங்கிரசில் இருந்த ஆளுமையற்ற தலைவர்களால்தான் எனக் கூறிய அவர் ”பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் அரசியல் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துள்ளதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் வெற்றி தோல்விகளைக் கணக்கில் கொள்ளாமல் தொடர்ந்து தேர்தலில் களமிறங்குவோம்” என ஓவைசி கூறியுள்ளார்.

`மோடியை எதிர்க்கும் ஆண்மையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது’ – அசாதுதின் ஓவைசி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்