உத்தரபிரதேசம் ஆக்ரா நகரில் உள்ள முகலாயர் சாலைக்கு மகாராஜா அக்ரசென் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆக்ரா நகரத்தின் மேயர் நவீன் ஜெயின் அறிவித்துள்ளார்.
இன்று(நவம்பர் 26), இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசியுள்ள நவீன் ஜெயின், “இங்குள்ள கம்லா நகர் பகுதியில் உள்ள முகாலயர் சாலைக்கு அருகில் வசிக்கும் மகாராஜா அக்ரசேனை பின்பற்றுபவர்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் மகாராஜா அக்ரசென் பின்பற்றுபவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, செப்டம்பர் 27 அன்று ஆக்ரா நகர் நிர்வாகக் சபையில் ஒரு முன்வரைவு நிறைவேற்றப்பட்டது என்றும் அதைத்தொடர்ந்து, சபை உறுப்பினர்கள் முன்வரைவை நிறைவேற்றினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“விகல் சோக்கிலிருந்து கம்லா நகர் வரை செல்லும் இச்சாலைக்கு முகலாயர் சாலை என்று எப்படி பெயரிடப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், தற்போது மகாராஜா அக்ரசேன் சாலை என்று பெயரிடப்பட்டதால், எதிர்கால சந்ததியினர் இதனால் உத்வேகம் பெறுவார்கள்” என்று ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சுஷ்மா ஜெயின், “இப்பெயர் மாற்றம் மகாராஜா அக்ரசேனைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் கிடைத்த மரியாதை. முகலாயர் சாலை என்ற பெயர் அடிமைத்தனத்தின் சகாப்தத்தை குறிக்கிறது. ஆனால், அச்சாலைக்கு மகாராஜா அக்ரசென் என்று பெயர் மாற்றிய பிறகு, வரும் தலைமுறையினர் அவரால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
பெயர்களை மாற்றுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நகரின் மற்ற வளர்ச்சி பணிகளில் ஆக்ரா நகர் சபை கவனம் செலுத்த வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்து மத இதிகாசங்களின்படி, ராமரின் மகனான குஷ்ஷன்-னின் வம்சாவழியைச் சேர்ந்தவர் மகாராஜா அக்ரசென்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.