முப்படைகளுக்கு ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் காரணமாக, பல மாநிலங்களில் இன்று (20/6/2022) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் 17.5 முதல் 21 வயதுள்ள 45 ஆயிரம் பேர், 4 ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். இதன்மூலம் இளைஞர்களுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாகும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் ஆன்லைன் முறையில் நடக்கவுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வி தகுதியே, அக்னிவீரர்களுக்கும் பொருந்தும். அதன்படி, புதிய தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மட்டங்களில் பயிற்சி வழங்கப்படும். பல்வேறு துறைகளில், புதிய திறன்களுடன் வேலைவாய்ப்புகளை இந்த திட்டம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பர். இதற்காக மாத சம்பளம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரத்துடன் படிகளும் வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர், 25 சதவீத வீரர்களுக்குப் பணி நீட்டிக்கப்பட்டு, ஆயுதப்படைகளில் 15 ஆண்டுக்காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். ஆயுதப்படையில் சேர முடியாதவர்களுக்கு 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ராணுவத்தின் செலவு குறையும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், இன்று(20/6/2022) 80க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், டெல்லி பகுதிக்குச் செல்லும் 71 பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்து ஜந்தர் மந்தரில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் பல பகுதிகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
“இளைஞர்களுக்கு எதிரான அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை குறிவைத்து மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராகவும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்துவார்கள்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
போராட்டத்தின் எதிரொலியாக ஜார்க்கண்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Thenewindianexpress
பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath | Bulldozer Baba
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.