அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதிலிருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் “அக்னிபத்” திட்டத்தை ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பீகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக்னிபத் திட்டம்: சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம்
பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா போன்ற வட மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டம் நேற்று தெலங்கானாவுக்கும் பரவியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பீகார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் தேர்வாகி 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக பணியாற்றிவிட்டு ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களுக்கு சிஏபிஎஃப் எனப்படும் மத்திய ஆயுதப் படை, மற்றும் அசாம் ரைஃபில்ஸில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் சேர 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். அடுத்தடுத்த பேட்ஜ்களில் வெளியேறுவோருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதிலிருந்து 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் அதிகபட்ச வயது வரம்பை 21 லிருந்து 23 ஆக உயர்த்தியுள்ளதாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, இந்த திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட வீரர்களில் 25% பேர் மட்டுமே முழு பதவிக்காலத்திற்கும் தக்கவைக்கப்படுவார்கள். மேலும் அக்னிபத் திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : india today
ராணுவ ஆட்சிக்கான அடித்தளம் தான் Agnipath | Dr Kantharaj
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.