Aran Sei

போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறுபவர்கள் “கோமாளிகள்” என திரைபட நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளனர் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தியாவின் 72வது குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடந்த வன்முறைக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் எனப் பல எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த வன்முறைக்கு காரணம் பாஜக தான் என்பதை நடிகர் சித்தார்த் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

உண்மை சரிபார்ப்பு – செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை அகற்றவில்லை, காலிஸ்தான் கொடியை ஏற்றவும் இல்லை

இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாபர் மசூதி இடிப்பை மறைமுகமாக சூட்டிக்காட்டியுள்ள நடிகர் சித்தார்த், ”சட்ட விதிகளை மீறி ஒரு கட்டடத்தை சூறையாடிய குண்டர்களை நாம் மதித்து, அன்பு செலுத்தி கொண்டாடினோம். அந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை முன்னின்று நிகழ்த்திய கயவர்கள் இன்று நமக்கு அமைதியாக போராட்டம் செய்வது பற்றி பாடம் எடுக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

”போராட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும் என சில கோமாளிகள் எப்போதும் கூறுவார்கள். அவர்களை புறம் தள்ளுங்கள். நாம் பாசிசம், வெறுப்பு அரசியல், ஒற்றை கடவுள் சிந்தனை, பாமர மக்களுக்கு விரோதமான பரப்புரை என மிகவும் பிற்போக்கான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்” என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

போராட்டம் மோதலாக வெடித்தது தொடர்பாக ட்விட் செய்துள்ள சித்தார்த், ”போராட்டம் அமைதியாக நடந்தது. போராடியவர்களை தீவிரவாதிகள், துரோகிகள், கூலிப்படையினர் என்றனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. அதிகாரத்தில் உள்ளோரின் கால்சட்டை ஈரமானது. போராட்டம் தொடர்வது சிக்கலை ஏற்படுத்தியது, தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தை வன்முறையாக்கினர். எப்போதும் போல்” என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசு தின டிராக்டர் பேரணி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : அதிர்ந்த தலைநகரம்

”உலகத்தின் மிகப்பெரிய முட்டாளுக்கு கூட மான் கி பாத்துடன் (Man ki bath ஐ Monkeybath என்று கிண்டல் செய்யும் தொனியில் சித்தார்த் பதிவில் குறிப்பிட்டுள்ளார்) உரையாடுவது பயனற்றது என்பது தெரியும்” என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். ஒவ்வொரு பதிவின் முடிவிலும் ”ஜெய் ஸ்ரீராம்” என சித்தார்த் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி வன்முறைக்கு மத்திய அரசே பொறுப்பு – மம்தா பானர்ஜி, சரத் பவார் குற்றச்சாட்டு

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதிமுக அரசை விமர்சித்தும், அந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டத்திலும் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்