“வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதன் பின்னணியில் உள்ளவர்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக் கூறி ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யுயு லலித், எஸ்ஆர் பட் ஆகியோர் அடங்கிய அமர்வு ஹர்ப்ரீத் மன்சுகானியிடன் சில கேள்விகளை முன்வைத்தது. அதில், “நீங்கள் மனுவில் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுக்களால் ஒட்டுமொத்த சூழலும் கறைபடியும் எனக் கூறியுள்ளீர்கள். அதனை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களும் இருக்கலாம். இது ஏற்கத்தக்கதாகவும் இருக்கலாம்.
ஆனால், இந்த மனுவில் இடம்பெற்றுள்ள அனைத்துமே அச்சுறுத்தும் வகையில் உள்ளன. நீங்கள் இரண்டு சம்பவங்களை மட்டுமே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுபோன்று 58 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பெரும்பாலான சம்பவங்களுக்கான விவரம் இல்லையே. யார் பேசியது? வழக்குப் பதியப்பட்டதா என்ற விவரமும் இல்லை. இதன் நிமித்தமாக உங்கள் நீதிமன்ற உதவி ஏதும் தேவைப்படுகிறதா? இந்த பெருங் குற்றச்சாட்டு தொடர்பாக நீங்கள் மேலும் தகவல்களை இணைத்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்” என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது மனுதாரர், “வெறுப்புப் பேச்சுக்கள் நம் நாட்டில் லாபம் தரும் தொழிலாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு அரசியல் கட்சி ஒன்று நிதியுதவி செய்ததைக் குறிப்பிடலாம். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதன் பின்னணியில் உள்ளவர்களை அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த சூழலையும் கெடுக்கும் வெறுப்புப் பிரசாரங்களை தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு விசாரணை நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, நேற்று உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு முன்னர், கடந்த ஆண்டு டெல்லி, உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த தர்ம சன்சத் கூட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டதாக தொடர்பான வெவ்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்புப் பேச்சுகள் இடம் பெற்றதென்றால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு இரண்டு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : NDTV
பேட்டியும் கிடையாது ஒன்னும் கிடையாது | நா*சேகராக மாறிய H. Raja | Aransei Roast | BJP | DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.