தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டதையடுத்து பல ஆண்டு காலம் இருந்த இழிவு துடைக்கப்பட்டது; முதலமைச்சருக்கு நன்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தண்டோரா போடுவதற்குக் கடுமையான தடை விதிக்கவேண்டும். மீறி ஈடுபடுத்துகிறவர்களைத் தண்டிக்கவேண்டும்” என உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு 03.08.2022 அன்று கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த சமூக இழிவு துடைக்கப்பட்டுள்ளது; கடந்த 15 ஆண்டுகளாக நான் எழுப்பிவந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் 2006 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. முந்தைய ஆட்சியில் பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு பி டி ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அகாலமாக மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் 25. 5.2006 அன்று அறிமுகப்படுத்தி அதன் மீது பேசிய அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ‘திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டும் வழக்கம்’ ஒழிக்கப்படுவதாக அறிவித்தார். ‘திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 1971இல் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த அதிமுக அரசு மீண்டும் அதை உயிர்ப்பித்தது. தற்போது அது மீண்டும் ஒழிக்கப்படுகிறது’ என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் 25.7.2006 அன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் மீது பேசுகிற வாய்ப்பை நான் பெற்றேன். அப்படி பேசுகிற நேரத்தில், “ திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்கள். அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளிலே தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையிலே, நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையிலே வைத்திருப்பதை இந்த உலகிற்குச் சொல்கின்ற ஒரு முறையாக இருக்கின்றது. எனவே அந்த தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தை நீங்கள் வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் “ என நான் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றித் தந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஏனோ இந்த வேண்டுகோளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்.
அதன் பின்னர் தமிழ்நாடு அரசால் பேராசிரியர் நன்னன் தலைமையில் சமூக சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். அக்குழுவின் முதல் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டு மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதாக செய்தி வெளியானது.அவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூப்பிட்டுப் பாராட்டினார். அந்த நேரத்திலும் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பலவிதங்களில் நான் முன்வைத்து வந்தேன். கடந்த நாளன்று காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்ட செய்தி 01.08.2022 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியானது. அப்போது நான் உடனே தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் பதிவு செய்தேன். அதைப் பல நண்பர்களும் வழிமொழிந்து பதிவுகளை வெளியிட்டார்கள். அதன் காரணமாகவே இப்போது தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு வெளியாகி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழிவைப் போக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள் இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல் சட்டப் பாதுகாப்பு கொண்ட அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் முன் வைத்த கோரிக்கை அவருடைய வழியில் சமத்துவ ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்டுவதில் தலைவர் கலைஞரையும் விஞ்சுகிறவராக முதலமைச்சர் திகழ்கிறார். ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்த சமூக இழிவை ஒழித்த அவருக்கு ஒட்டுமொத்த ஆதிதிராவிட சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Kallakurichi Sakthi School க்கு சீல் வைக்கணும் Dr Sharmila Interview | New CCTV footage
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.