மதுரை மாநகராட்சியில் 3,000 தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் நேற்று (மே 30) வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் மதுரை தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது.
மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் 1900 தொழிலாளர்களும் பொறியியல் பிரிவில் 1,900 தொழிலாளர்களும், ஒப்பந்த முறையில், 2,200 அவுட் சோர்ஸிங் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகமும் அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
மதுரை: காலவரையற்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய 6,000 தூய்மைப் பணியாளர்கள்
மேல வாசல் ஹவுசிங் போர்டு பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராததால் மதுரை மாநகராட்சியில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் மலைபோல் தேங்கின.
சாலைகள், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிந்தன. பொறியியல் பணியாளர்கள் பணிக்கு வராததால் மாநகராட்சி பாதாளச் சாக்கடைகளில் ஆங்காங்கே அன்றாட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், அவை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி துர்நாற்றம் ஏற்பட்டன. நீரேற்று நிலையங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதனால், மாநகராட்சியின் பணிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தால் சாக்கடை உடைந்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கழிவுநீர் தேங்கியது. அதனால், மனு அளிக்க வந்த மக்கள் சாக்கடை நீரைக் கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் தீண்டாமை: மதுரை மாவட்டம் முதலிடம் – ஆர்டிஐ தகவல்
மாநகராட்சி ஆணையாளர் கா.க.கார்த்திகேயன், தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் கூறியது: ”தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும், இந்த விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொகப்பூதிய பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு முன்களப் பணியாளர்கள் என்கிற முறையில் அறிவித்த கொரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் பணி செய்வதற்கு போதுமான பணி கருவிகளை ஆண்டுதோறும் வழங்க வேண்டும்; குப்பை வண்டிகள், பேட்டரி வாகனங்கள் பழுதடைந்தால் அதை நிர்வாகமே சரி செய்து கொடுக்க வேண்டும்;
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரிந்த நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த சேமநல நிதி மற்றும் சிறப்பு சேம நல நிதியை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எல்சிவி ஓட்டுநர்களுக்கு வங்கிமூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். நிரந்தரத் தன்மை கொண்ட பாதாளச் சாக்கடை, கழிவு நீர் வெளியேற்றம், தெருவிளக்கு, குடிநீர், டிரைவர்கள் பிரிவுகளிலும் ஒப்பந்தமுறையைக் கைவிட வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : hindu tamil
நாக்க அடக்கி பேசுங்க Annamalai Journalist Protest Against Annamalai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.