காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியைப், பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், மூன்று ராணுவ வீரர்களை ஜம்மூ & காஷ்மீர் காவல்துறை கைது செய்திருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
பந்திபோரா மாவட்டத்தின், மூத்த காவல் கண்காணிப்பாளர் ராகுல் மாலிக், இந்த வழக்கின் முக்கியத்துவத்தின் காரணமாக, பெயர் வெளியிட முடியாத மூன்று நபர்கள்மீது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 341 (தவறான கட்டுப்பாடு), பிரிவு 363 (கடத்தல்) மற்றும் 511 ஆகிய பிரிவுகளின் கீழ், அஜாஸ் பகுதி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது, எனத் தெரிவித்ததாக தி வயர் தெரிவித்துள்ளது.
”என்னை விடுதலை செய்யுங்கள்” – துபாய் இளவரசி ஷேக்கா லத்திபா காணொளி மூலம் கோரிக்கை
கடந்த வாரம், பந்திபோரா மாவட்டத்தின், சாஃபபோரா பகுதியில் சிறுமியைக் கடத்த முயன்ற மூவரும் ”ராணுவ வீரர்கள்”, என முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Locals in Bandipora have alleged that 3 army men tried to abduct & molest a 9 year old girl.Her family is now being pressurised to withdraw the FIR.Its a complete travesty of justice & an impartial probe must be set up immediately so that they are given the harshest punishment.
— Mehbooba Mufti (@MehboobaMufti) February 16, 2021
பிப்ரவரி 10 ஆம் தேதி, தனியார் பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்த சிறுமியிடம், மாருதி ஆல்டோ காரில் வந்த ஒருவர், 500 ரூபாய் வழங்கியதாகவும், அதைச் சிறுமி வாங்க மறுத்துவிட்டதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாக, தி வயர் குறிப்பிட்டுள்ளது.
”என் மகள் அங்கிருந்து ஒட முயன்றபோது, காரிலிருந்து இறங்கிய ஒரு ராணுவ வீரர், அவரது கையைப் பிடித்தார். என் மகள் உதவிக்காக அழுதாள்” எனச் சிறுமியின் தந்தை அப்துல் மஜித், தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என் மகளின் அழுகுரல் கேட்டு அந்தப்பகுதியில் சென்றவர்கள், குற்றம்சாட்டப்பட்டவரை பிடித்ததோடு, காரையும் சூழ்ந்து கொண்டார்கள் என்றும், “நான் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த என் ஓட்டுனர் நண்பர் ஒருவர், என் மகளை அடையாளம் கண்டு எனக்குத் தெரிவித்தார்” என்றும், மஜித் தெரிவித்ததாக, தி வயர் கூறுகிறது.
தி வயர் இணையதளத்திடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய, கால்நடை வியாபாரியான அப்துல் மஜித், எனது வீட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் சம்பவம் நடைபெற்ற இடத்தை அடைந்தபோது, அங்குப் பெரிய கூட்டம் திரண்டிருந்தது, என்றும் “காரில் ஒரு சீக்கியர், உள்ளூர் காஷ்மீரி உள்ளிட்ட நான்கு நபர்கள் இருந்தனர்” எனக் கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற இந்தியாவுடன்தான் நாங்கள் இணைந்து செயல்பட சம்மதித்தோம் – மெஹபூபா முஃப்தி கருத்து
”காரைச் சோதனையிட்டதில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வாகன நம்பர் பிளேட்டுகள் இருந்தது. முதலில் அவர்கள் ராணுவத்தில் பணிபுரிவதை மறுத்துவிட்டனர். பின்னர் ஒரு ராணுவ அதிகாரி, மற்ற பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். இதன்பிறகே அவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்க அங்குத் திரண்டிருந்த மக்கள் முடிவு செய்தனர்” என மஜித் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், தனது குடும்பத்தைச் சிதறடித்திருப்பதோடு, தனது மகள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறியுள்ள மஜித், ”எனது மகள் வீட்டை விட்டு வெளிய செல்ல அஞ்சுவதோடு டியூசனுக்கும் செல்ல மறுக்கிறாள். இதற்குப் பிறகு அவள் பள்ளி செல்வாளா என்றும், எனக்குத் தெரியவில்லை” எனவும் கூறியதாக தி வயர் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் வைரலாகும் ”தீஷா ரவி ஜோசப்” – இந்துவா? அல்லது கிறிஸ்துவரா? என்பதே அபத்தம்
சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளில், சில ராணுவ அதிகாரிகள் மஜித்தின் வீட்டில், “தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்” எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை தொடர்பாக, பேசியுள்ள மஜித், “எங்களிடம் மறைக்க ஒன்றுமில்லை. நான், என் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு அவர்களிடம் (ராணுவ அதிகாரி) என் வீட்டை வேண்டுமானால் எரித்துக் கொள்ளுங்கள் எனக் கூறினேன். வழக்கை வாபஸ் பெற எனக்கு அழுத்தம் கொடுக்க முயன்று வருகின்றனர்” எனத் தெரிவித்தாக, தி வயர் கூறியுள்ளது.
கட்டுமான பணிகளில் வேலை பார்ப்பதன் மூலம், அன்றாட வாழ்க்கைய ஓட்டிவருவதாகக் கூறிய மஜித், “என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கவே நான் சிரமப்பட்டு வருகிறேன். ராணுவ வீரர்கள், அங்கு வேலை நிமித்தமாக வந்திருந்தால், அவர்கள் ஏன் என் மகளின் கையைப் பிடிக்க வேண்டும். இந்த மாதிரியான நடைமுறை மேற்கொள்ளும் அளவிற்கு என் மகள் என்ன தவறு செய்தால்” எனக் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, தனது ட்விட்டரில், ”வழக்கைத் திரும்பப் பெறக்கோரி சிறுமியின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. உடனடியாக ஒரு பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Locals in Bandipora have alleged that 3 army men tried to abduct & molest a 9 year old girl.Her family is now being pressurised to withdraw the FIR.Its a complete travesty of justice & an impartial probe must be set up immediately so that they are given the harshest punishment.
— Mehbooba Mufti (@MehboobaMufti) February 16, 2021
சிறுமியின் குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்படும், பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களைப் பதிவு செய்யும், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354, முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை என தி வயர் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் 100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை – அனைத்து நகரங்களிலும் புதிய உச்சத்தில் எரிவாயு விலை
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வடக்கு காஷ்மீரின் யூரி பகுதியில், 35 வயது பெண்மணியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்ப்பட்ட நிலையில், இது இரண்டாவது நிகழ்வாகும்.
இது தொடர்பாக, ஸ்ரீநகர் பாதுகாப்பு தளத்தின் செய்தி தொடர்பாளர், ராஜேஷ் காலியாவை தொடர்புக்கொண்டபோது, இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ”தகவல்கள் எனக்குக் கிடைத்தவுடன் நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என அவர் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.