Aran Sei

தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்

Image Credit : scroll.in

ருவநிலை செயல்பாட்டாளரான 21 வயது தீஷா ரவி டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீஷா ரவி பெங்களூருவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி. அவர் இந்தியாவில் “எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் (Fridays for Future India)” என்ற இயக்கத்தைத் தொடங்கி சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு ஆதரவு திரட்டி வந்தார். FFF ஸ்வீடன் பருவநிலை செயல்பாட்டளர் கிரேட்டா துன்பெர்கால் தொடங்கப்பட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.

இந்திய “எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்”, சுற்றுச் சூழல் தாக்கம் ஆய்வு (EIA) அறிவிப்பு 2020 தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தது. சென்ற ஜூலை மாதம், அது உருவாக்கிய ஒரு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், FFF இந்தியாவின் இணையதளம், டெல்லி போலீசால் தற்காலிகமாக முடக்கப்பட்டது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான தகவல் தொகுப்பு (டூல்-கிட்) ஒன்றை எடிட் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தீஷா ரவி ஞாயிற்றுக் கிழமையன்று, டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டம் – ” கைது செய்யப்பட்ட 21 வயது மாணவி தீஷா ரவிக்கு போலீஸ் காவல் சட்ட விரோதமானது “

அவரது கைது தொடர்பாக பல தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

தீஷா ரவி கைது : எதேச்சதிகார அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் குரல் கொடுக்க வேண்டும் : ப.சிதம்பரம்

அகிலேஷ் யாதவ் – சமாஜ்வாதி கட்சித் தலைவர் இது தொடர்பாக இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

 

“மக்கள் மத்தியில் வெறுப்பையும் பிளவையும் உருவாக்கும் வகையில் ‘டூல்-கிட்’களை வெளியிட்டு, இந்தியாவின் தேசிய மற்றும் சமூக ஒற்றுமையை உடைக்க முய்றிசப்பவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பதுதான் கேள்வி. இந்த “டூல்-கிட் உருவாக்கியவர்கள்” மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக அரசாங்கம் சொல்ல வேண்டும்”

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தவீந்தர் சிங் பற்றிய செய்தியை ட்வீட் செய்து “செயல்பாட்டாளர்கள் சிறையில், குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதிகள் பிணையில்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சிபிஐ எம்எல் கட்சியின் கவிதா கிருஷ்ணன் “கிரேட்டா துன்பெர்க் பகிர்ந்த டூல்-கிட் தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகைப்பதற்கான விஷயம் இல்லை என்று நான் எச்சரித்தது சரியாகி விட்டது.” என்று ட்வீட் செய்துள்ளார்.

“இந்தியாவில் செயல்பாட்டாளர்களை வேட்டையாடுவதற்கான, இப்போதைய அற்ப சாக்கு இதுதான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிபிஐ எம்எல் தலைவர் திபாங்கர் “போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான அவரது ட்வீட் மோடி அரசாங்கத்தை இவ்வளவு கலங்கடித்து விடும் என்று கிரேட்டா துன்பெர்க் எதிர்பார்திதருக்க மாட்டார்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

“கிரேட்டா துன்பெர்க் டூல்-கிட் வழக்கில் இப்போது முதல் கைது நடந்துள்ளது. செயல்பாட்டாளர் தீஷா ரவியை உடனடியாக விடுதலை செய்!” என்றும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் கவுடா “விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கும், பூமியை பாதுகாக்க போராடும் ஒரு செயல்பாட்டாளர் அற்ப காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கம் நிலை தடுமாறுகிறதா? இது போன்ற கட்டியமைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளும், வழக்கமான சமூக ஊடக அணி திரட்டலை சதித் திட்டமாக பார்ப்பது, இவை ஜனநாயகத்தை மேலும் சேதப்படுத்தாதா?” என்று கூறியுள்ளார்

குஜராத் சட்டப் பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி “அமைதியான போராட்டங்களுக்கான ட்வீட்டுகளால் அச்சுறுத்தப்படும், முதுகெலும்பில்லாத அரசாங்கம், வேலன்டைன்ஸ் டே அன்று கம்புகளுடன் சுத்தும் கும்பல்களை முழுவதுமாக பாதுகாக்கிறது.” என்று ட்வீட் செய்துள்ளார்

“தீஷா ரவிக்கு முழு ஆதரவு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்