Aran Sei

‘என் அம்மாவை தூக்கிலிடாதீர்கள், காப்பாற்றுங்கள்’ – குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கும் சிறுவன்

சுதந்திரத்திற்கு பின்னான இந்தியாவில், முதன்முதலாக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட ஒரு பெண்ணைத் தூக்கிலிட உத்தரப்பிரதேச சிறைச்சாலை தயாராகி வருகிறது.  ஷப்னம் அலி என்ற பெண்ணிற்கு, 2008 ஆம் ஆண்டில் ஒரு குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்பெண்ணின் 12 வயது மகனான முகமது தாஜ், தனது தாயின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது தாஜ், “நான் என்னுடைய தாயை நேசிக்கிறேன். குடியரசுத் தலைவரிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்தான் உள்ளது. அவர் என் தாய் தூக்கிலிடப்படுவதில் இருந்து காக்க வேண்டும்.” என்று கோரியுள்ளார்.

பெண்ணுக்கு மரண தண்டனை – 70 ஆண்டுகளில் முதல்முறையாக நிறைவேற்றப்படவுள்ளது

“குடியரசுத் தலைவர் மாமா(President Uncle),  தயவுசெய்து என் தாய் ஷப்னம்மை மன்னியுங்கள்.” என்று எழுதப்பட்ட ஸ்லேட்டை கையில் ஏந்தி, நாற்காலியின் மேல் நின்றபடி, “அவரை மன்னிப்பது குடியரசு தலைவரின் பொறுப்பாகும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்று தாஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வளர்ப்பு பெற்றோரான உஸ்மான் சைஃபி என்ற பத்திரிகையாளருடன் வசித்து வரும் முகமது தாஜ், தொடர்ச்சியாக அவரின் தாயை சிறையில் சென்று சந்தித்து வருகிறார்.

“நான் என் அம்மாவை காணச் செல்லும் போதெல்லாம், அவர் என்னைக் கட்டிப்பிடித்து, ‘நீ எப்படி இருக்கிறாய் தாஜ்? நீ என்ன செய்கிறாய்? உன் பள்ளி எப்போது திறக்கிறது? நன்றாக படிக்கிறாயா?’ என்று கேள்விகள் கேட்பார்.” என்று தாஜ் கூறியுள்ளார்.

போராட்டத்தை ஒருங்கிணைத்தவருக்கு மரண தண்டனை – ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அரசு

“தாஜிற்கு சிறந்த கல்வியை கொடுக்கவும், ஒரு நல்ல மனிதனாக வளர்க்கவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அவனுடைய தாய் அவரின் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டலாம். ஆனால், தாஜ் குற்றவாளி அல்ல.” என்று உஸ்மான் சைஃபி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள நீதிமன்றம் ஷப்னம் அலி தூக்கிலிடப் போகிற தேதி மற்றும் நேரத்தை இன்னும் இறுதி செய்யவில்லை. அதேநேரம், நம் நாட்டில் பெண்களுக்கான தூக்குமேடை உள்ள ஒரே சிறைச்சாலையான மதுரா சிறைச்சாலையில் ஷப்னம் அலி தூக்கிலிடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி, தனது பெற்றோர், சகோதரர்கள், மைத்துனர் மற்றும் தனது சகோதரரின் 10 மாத குழந்தை உட்பட ஏழு பேரை வெட்டிக் கொன்ற குற்றத்திற்காக ஷப்னம் மற்றும் அவரது காதலர் சலீம் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது’ – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஷப்னம் அலி ஆங்கிலம் மற்றும் புவியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். அவர் திருமணம் செய்ய விரும்பிய சலீம் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். அதனால், ஷப்னமின் குடும்பத்தார் இவர்களின் காதலை ஏற்கவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டபோது ஷப்னம் கர்ப்பமாக இருந்தார். அதனை தொடர்ந்து, சிறையில் உள்ள குற்றவாளிகளுக்குப் பிறந்த குழந்தைகள் ஆறு வயதிற்கு மேல் சிறையில் இருக்க முடியாது என்ற விதியால், முகமது தாஜ் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மரண தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, அனைத்து சட்டரீதியிலான முயற்சிகளையும் ஷப்னம் அலி எடுத்துவிட்டதாக உத்தரபிரதேச அரசு கூறுகிறது. 2016 ஆம் ஆண்டு, அவரது கருணை மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘என் அம்மாவை தூக்கிலிடாதீர்கள், காப்பாற்றுங்கள்’ – குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கும் சிறுவன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்