பாதிரியார் ஸ்டான் சாமி மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்து, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளால் அவரை வருத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பீமா கொரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி, மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் (ஜூலை 5) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.
நேற்று (ஜூலை 6), தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவ கவுடா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இணைந்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களுக்காக வாழ்வை அர்பணித்த பழங்குடியின உரிமை போராளி ஸ்டான் சாமி – கைது முதல் மரணம் வரை
அக்கடிதத்தில், “பாதிரியார் ஸ்டான் சாமியின் மறைவை ஒட்டி, தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியினரான நாங்கள் அனைவரும் இணைந்து மிகுந்த மனவேதனையுடன், ஆழ்ந்த வருத்தங்களுடன் தார்மீகக் கோபத்துடனும் இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம். பாதிரியார் ஸ்டான் சாமி மீது பொய்யான வழக்குகளைத் தொடுத்து, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளால் அவரை வருத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவராகிய தங்களை வேண்டுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஸ்டான் சாமியின் மரணத்திற்கு அவர்கள்தான் பொறுப்பு. இவரின் மரணம் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.” என்று இக்கடிதத்தில் எதிர்கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.