புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மின்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 2 ஆயிரம் பேர் ஒட்டுமொத்தமாக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக புதிய மின் இணைப்புகள் வழங்குதல், தெருவிளக்குகள் பழுதுபார்த்தல், மின் அளவீடு செய்தல், மின்கட்டண வசூல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக மின்துறையில் நாள்தோறும் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை கட்டணம் வசூலிக்கப் படும். ஆனால் கடந்த 4 நாட்களாக மின்கட்டணம் வசூலிக்கப்படாததால் இதுவரை ரூ.16 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது ஒப்பந்த ஊழியர்களை கொண்டு மின்தடைகள் மட்டுமே சரிசெய்யப்படுகிறது. பெரும்பாலும் காலைநேரங்களில் மின்துறை ஊழியர்கள் தெருவிளக்குகள் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்வது வழக்கம். தற்போது நடந்து வரும் போராட்டத்தால் இது முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
தொழிற்பேட்டைகளிலும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்வதிலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மிகப்பெரிய அளவிலான மின் விபத்துகள் நேர்ந்தால் அதை சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய தெருக்கள் மின்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் பழுதான விளக்குகள் சரிசெய்யப்படாமல் நகரின் பிரதான வீதிகள், குடியிருப்புகளில் உள்ள தெருக்கள் நேற்று இருளில் மூழ்கின. வீடுகளிலும் சீரான மின் வினியோகம் இல்லாததால் அந்தந்த பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்தனர். மின் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 100-க்கும் குறைவான ஒப்பந்த ஊழியர்களை கொண்டு காலதாமதமாக சரிசெய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ஒன்றிய அரசின் பவர் கிரிட் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் 25 பேரின் உதவியும் பெறப்பட்டு உள்ளது. அவர்களது மேற்பார்வையில் பெரிய அளவிலான பழுதுகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பணி ஓய்வு பெற்று மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ள பொறியாளர்களைக் கொண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பா விட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “அரசு வேடிக்கை பார்க்காது மின்துறை தனியார் மயமானாலும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த முடிவானது பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.
எக்காரணத்தை முன்னிட்டும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது. சிலர் வேண்டுமென்றே செயற்கையாக மின்தடை ஏற்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. அதனை அரசு வேடிக்கை பார்க்காது. அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேசி தீர்க்கலாம் அவ்வப்போது ஏற்படும் மின்தடையை போக்கிட அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எனவே பொதுமக்கள் இந்த காலகட்டத்தில் சற்று அமைதி காக்க வேண்டும். இப்போது டெண்டர் கோரப்பட்டிருந்தாலும் மின்துறை ஒரே நாளில் தனியார் மயமாகிவிடாது. ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் பேசி தீர்த்துக்கொள்ளலாம். அவர்களது நலனை காக்கும் நல்ல முடிவுகளை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Source : dailythanthi
Vetrimaran Latest Viral Speech about BJP in Thol Thirumavalavan மணிவிழா | Dravidan Politics
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.