உலகிலேயே, மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள் அனைத்து பெண்களுக்கும் இலவசமாக கிடைக்கச் செய்திருக்கும் முதல் நாடாகியிருக்கிறது ஸ்காட்லாந்து.
“மாதவிடாய் வறுமையை ஒழிக்கும் கடைசி நாடாக ஸ்காட்லாந்து இருக்காது. ஆனால், மாதவிடாய் வறுமையை ஒழிக்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்தை மாற்றுவதை நம்மால் சாதிக்க முடியும்” எனக் கூறி இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனோன். 121 வாக்குகள் பெற்று, சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த $3.2 கோடி (சுமார் ரூ 240 கோடி) ஒதுக்கப்பட்டிருக்கிறது. இனி ஸ்காட்லாந்து பள்ளிகளிலும், மருந்தகங்களிலும் பிற சமூகக் கூடங்களிலும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள் இலவசமாக கிடைக்கும்.
இந்தியாவில் மாதவிடாய் தயாரிப்புகள்!
கடந்த சில ஆண்டுகளில், மறைவில் பேசப்பட வேண்டிய விஷயமாக இருக்கிற மாதவிடாய் குறித்து பொதுத்தளங்களில் பேசவும், அது தொடர்பான கொள்கைகளை, அணுகுமுறைகளை மாற்றவும் இந்தியாவில் ஏகப்பட்ட பிரச்சாரங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ‘பேட் மேன்’, ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகியன. இந்த ஆண்டு சுதந்திர தின உரையில், தன்னுடைய ஜன்அவுஷாதி மருந்தகங்களின் வழியே ஐந்து கோடி பெண்கள் ஒரு ரூபாய்க்கு சேனிடரி நாப்கின்கள் வாங்கியிருப்பதாக நரேந்திர மோடி பெருமையாக பேசிக் கொண்டார்.
ஆனாலும், “பெண்கள் சேனிடரி நாப்கின்களை பயன்படுத்தலாமா? முன்னோர்கள் சொன்னது போல துணியை பயன்படுத்துவது தான் பாதுகாப்பு” என பெண்களின் உடற்கூற்றியலை பற்றி அடிப்படையான அறிவு இல்லாதவர்கள் விவாதிக்கும் அளவு தான் ஒரு சமூகமாக இந்தியா முன்னேறியிருக்கிறது.
கொரோனா முழு அடைப்பின் தொடக்க காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும் என நிலை இருந்த போது, பெரும்பாலானோர் சானிடரி நாப்கினை அத்தியாவசிய பொருளாக கருதவில்லை. சானிடரி நாப்கின்கள் தயாரிப்பில் முடக்கம் ஏற்பட்ட செய்தியை சமூக வலைதளத்தில் ஒரு செய்தி நிறுவனம் பகிர்ந்திருந்த போது, ‘சானிடரி நேப்கின்கள் தயாரிப்பது எல்லாம் இப்போது அவசியமா? இதைப் போன்ற தேவையில்லாத செய்திகளை எல்லாம் எதற்கு பதிவு செய்கிறீர்கள்’ எனும் தொனியில் பலர் பின்னூட்டங்களை பதிவு செய்திருந்தனர். இந்தியா எனும் நாட்டின் கூட்டு மனப்பான்மையை பிரதிபலிக்கும் குரல்களே இவர்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது, சானிடரி நாப்கின் அவசியப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறாமல், ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கு 12% வரியும் விதிக்கப்பட்டிருந்தது. “ஆணுறைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருக்கும் போது, சானிடரி நாப்கின்கள் எப்படி ஆடம்பரம்” என கேள்விகளை மக்கள் கேட்க தொடங்கினர். அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 12% வரிக்கு சாதகமாக “பொருளாதார” காரணங்களை சொல்லி விளக்கிக் கொண்டே இருந்தது, அதற்கு எதிரான போராட்டங்களை எல்லாம் கட்டுப்படுத்தவில்லை. இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய பிறகு, அந்த 12% வரி ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் சானிடரி நாப்கின்கள் துறையில் இரண்டு பிரதான நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. பிராக்டர்&கேம்பிள் நிறுவனத்தின் விஸ்பர், மற்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஸ்டேஃப்ரீ ,கேர்ஃப்ரீ. விஸ்பருக்கு 56% சந்தை பங்கும், ஸ்டேஃப்ரீக்கு 28% சந்தை பங்கும் இருக்கிறது. எகனாமிக் டைம்ஸ் தளத்தில் எழுதும் மோதிலால் ஓஸ்வல், இந்தியாவில் சானிடரி நாப்கின் துறையில் போதுமான ஊடுருவலோ, போட்டியோ இல்லை என்கிறார்.
சானிடரி நாப்கின்கள் தயாரிப்பு செலவைவிட, அவற்றை தயாரிக்க தேவைப்படும் பொருட்களுக்கு கட்டப்படும் சுங்கவரியே நாப்கின்களின் உயர்ந்த விலைக்குக் காரணமாக இருப்பதாக ஓஸ்வல் சொல்கிறார். அதாவது, நாப்கின்களை தயாரிக்க வெகு சில நிறுவனங்களே இருப்பதனாலும், உற்பத்தி செய்யும் செலவு அதிகமாக இருப்பதனாலும் நாப்கின்களின் விலை அதிகமாக இருக்கிறது என்றால், இதை சரி செய்ய என்ன திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என யூத் கி ஆவாஸ் தளத்தில் திருஷ்டி அகர்வால் கேள்வி எழுப்புகிறார்.
40 ஆண்டுகளுக்கு எத்தனை ரூபாய்?
இந்தியாவில் முப்பது ரூபாயில் இருந்து சானிடரி நாப்கின்கள் விற்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் முப்பது ரூபாய் நாப்கின்கள் சரியான சுகாதாரத் தேர்வாக இருப்பதில்லை. உறிஞ்சும் தன்மை, அசௌகரியம், நோய்த் தொற்றுகள் என பல காரணங்களால் ஒரு நபர் அதை விட சிறந்த ஒரு தயாரிப்பை தேர்தெடுக்கிறார் என்று வைப்போம். நாற்பதில் இருந்து எண்பது ரூபாய் வரையிலான சானிடரி நாப்கின் பேக்குகளில் ஒன்றை அவர் தேர்வு செய்யலாம்.
சராசரியாக 60 ரூபாய் என வைப்போம். அவருடைய மாதவிடாய் நாட்களின் நீட்சியை பொறுத்து – இரண்டு நாட்கள் தொடங்கி ஏழு நாட்களுக்கு மேலும் கூட இது நீளலாம் – அவர் இரண்டிற்கும் மேற்பட்ட பேக்குகளை வாங்கலாம். கணக்கிற்காக மூன்று பேக்குகள் என வைப்போம்.
ஒரு மாதத்திற்கு 3 * 60 = 180 ரூபாய்.
ஒரு வருடத்திற்கு 12 * 180 = 2,160 ரூபாய்.
சராசரியாக, மாதவிடாய்க்கு உள்ளாகும் நபர்கள், தங்கள் வாழ்நாளில் நாற்பது ஆண்டுகள் மாதவிடாயை கடக்கிறார்கள். விலை ஏற்ற இறக்கங்களை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் பார்த்தாலும்,
நாற்பது ஆண்டுகளுக்கு 40 * 2160 = 86,400 ரூபாய். யதார்த்தத்தில் இதைவிட அதிகமான தொகையை நாம் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கழிவறை வசதிகள் இல்லாதது, சுத்தமான நீருக்கான வசதி இல்லாதது, மாதவிடாய் காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்துவது, மாதவிடாய் தயாரிப்புகளை வாங்க முடியாமல் துணியையும், மண்ணையும், சாம்பலையும் பயன்படுத்துவது என பல நூறு சுகாதார சிக்கல்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஒரு நபர், தன்னுடைய உடலில் நடக்கும் ஒரு உயிரியல் நிகழ்விற்காக, வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது என்பது மாதவிடாய் சுகாதார பொருட்களை இலவசமாக கொடுக்கப் பெற போதுமான காரணம் தான்.
இது, சானிடரி நாப்கின்கள் தொடங்கி பிற சுகாதார தேவைகளுக்குமே பொருந்துவது. இந்தியாவில், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினைகள், சிறுநீர் பாதை தொற்று, கருக்கலைப்பு, பிரசவம் போன்ற அடிப்படை சுகாதார சேவைகளுக்கு “பெண்களுக்கு” என இயங்கும் “ஸ்பெஷல்” மருத்துவமனைகள் விதித்திருக்கும் விலைகள் அநியாயமானவை. போதுமான பெண்கள் நல மருத்துவர்கள் (கைனகாலஜிஸ்டுகள் – gynecologist) இல்லாமை, இருக்கும் மருத்துவர்களின் பெரும்பான்மையினர் பெண்ணுடலை கட்டுப்படுத்தும் கலாச்சார காவலர்களின் மனநிலையில் சுகாதார பிரச்சினைகளை அணுகுவது என பல காரணங்கள் நியாயமான சுகாதார சேவைகள் மறுக்கப்படுவதற்கு பின்னே இருக்கின்றன.
உலகிலேயே முதல் முறையாக மாதவிடாய் சுகாதார பொருட்களை அனைவருக்கும் இலவசமாக்கியிருக்கும் ஸ்காட்லாந்து நாட்டின் தலைவர் ஒரு பெண் என்பது தற்செயலானது அல்ல. ஆணுறைகள் அத்தியாவசியம் எனும் போது எப்படி சானிடரி நாப்கின்கள் ஆடம்பரம் ஆனது என்பதற்கு இதே தான் பதில் – இந்தியாவில் பெண்ணுடல் சார்ந்த சட்டங்களும், பெண்ணுடலுக்கான கட்டுப்பாடுகளும், பெண்ணுடலுக்கு எதிரான அநியாய விதிமுறைகளும் எல்லாம் யாரால் இயற்றப்படுகின்றன என்பதை யோசித்தால் புரியும்.
– சினேகா பெல்சின்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.