Aran Sei

ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து – சோதனையில் தற்செயலாகக் கிடைத்த வெற்றி

Image Credit : theguardian.com

மெரிக்காவின் ஃபைசர், மடெர்னா ஆகிய இரு நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றியைத் தொடர்ந்து, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட்/அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து சோதனைகளிலும் நம்பிக்கையூட்டும் முடிவுகள் கிடைத்துள்ளன.

கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை முடிவுகள் – விலை கட்டுப்படியாகுமா?

தற்செயலாக நடந்த ஒரு தவறின் விளைவாக ஆக்ஸ்ஃபோர்ட்/அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தின் செயல்திறன் 90% வரை இருக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

திட்டமிட்டபடி, முழு அளவு மருந்து இரண்டு முறை கொடுக்கப்பட்ட ஒரு குழுவில் 62% செயல்திறனுடன் நோய்த்தடுப்பு ஏற்பட்டது. ஆனால், இன்னொரு குழுவில் சோர்வு, தலைவலிகள், கைவலிகள், போன்ற பக்க விளைவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதை மேலும் ஆய்வு செய்து பார்த்தபோது, இந்தக் குழுவில் முதல்முறை மருந்தின் அளவை குறைவாக மதிப்பிட்டு, பாதி அளவுதான் கொடுக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.

இதைத் தொடர்ந்து முதல் முறை பாதி அளவு மருந்தையும், 4 வாரங்களுக்குப் பிறகு முழு அளவு மருந்தை இன்னொரு முறையும் கொடுப்பது என்று சோதனை முறை மாற்றி தொடரப்பட்டு வருகிறது.

“முதல் முறை குறைந்த அளவு மருந்தை கொடுப்பதன் மூலம், உடம்பின் நோய்த்தடுப்பு அமைப்பு தன்னைத் தானே தயாரித்துக் கொள்ளச் செய்கிறோம் என்று நாங்கள் நினைக்கிறோம். முழு அளவு மருந்தை எதிர்கொள்ளும் போது இன்னும் சிறப்பாக எதிர்வினை புரிவதற்கு அதை தயாரித்து விடுகிறோம்” என்று ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்து குழுவின் இயக்குநரும் இந்த மருந்து சோதனையின் முதன்மை ஆய்வாளருமான பேராசிரியர் ஆண்ட்ரூ போலார்ட் கூறியுள்ளார்.

ஃபைசர், மடெர்னா சோதனை வெற்றிகள் தடுப்பு மருந்து தொடர்பான நம்பிக்கையை வலுப்படுத்தினாலும், உலகின் பெரும்பான்மை மக்கள் தமக்கான தடுப்பு மருந்துக்காக ஆக்ஸ்ஃபோர்ட்/அஸ்ட்ராஜெனிக்காவை நம்பியிருப்பதாக என்டிடிவி தெரிவிக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்தும் லாபவெறி அரசியலும்

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள், ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குறை வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகள் ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்தைத்தான் பெறவிருக்கின்றன. உலக அளவில் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 320 கோடி முறைக்கான மருந்து, அஸ்ட்ராஜெனிக்காவிடமிருந்து வரவுள்ளது என்று லண்டனைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அஸ்ட்ரா ஜெனிக்கா தயாரிக்கும் தடுப்பு மருந்து, ஏழை நாடுகளுக்கு வழங்கப்படவிருக்கும் மருந்தில் 40%-ஆக இருக்கப் போகிறது என்று அந்த ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

  • மேலும், ஆக்ஸ்ஃபோர்ட்/அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பு மருந்தின் விலை ஒரு முறைக்கு சுமார் $3 (சுமார் ரூ 225) என்ற அளவிலேயே உள்ளது, ஃபைசர், மடெர்னா மருந்துகள் ஒரு முறைக்கு சுமார் $20-ஐ (சுமார் ரூ 1500) விட அதிக செலவு பிடிக்கின்றன.
  • ஃபைசர், மடெர்னா தடுப்பு மருந்துகளைப் போல மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிப்பதற்கான தேவை இந்த தடுப்பு மருந்துக்கு இல்லை. எனவே, போக்குவரத்து, சேமிப்பு போன்றவற்றில் மிகப்பெரிய சிக்கலை இது தவிர்க்கிறது என்கிறது தி கார்டியன் செய்தி.
  • மேலும், ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்தை இந்தியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் உற்பத்தி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவேக்ஸ் எனப்படும் ஒரு உலகளாவிய திட்டத்தின் கீழ், தடுப்பு மருந்துகளை உலகம் முழுவதற்கும் சமத்துவ அடிப்படையில் வினியோகிப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அஸ்ட்ராஜெனிகா இந்த திட்டத்தில் இணைந்துள்ளது. இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட், குறை மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகளுக்காக இந்தத் தடுப்பு மருந்தை ஒரு முறைக்கு $3 விலையில் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது.

நேற்று வெளியான இடைக்கால சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆக்ஸ்ஃபோர்ட்-அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பு மருந்துக்கான அவசர அடிப்படையில் ஒழுங்குமுறை ஒப்புதலை பெறுவதற்கு சீரம் இன்ஸ்டிட்யூட் விண்ணப்பத்திருக்கிறது என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான ஒப்புதலைப் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அஸ்ட்ராஜெனிகாவின் செய்திறன் சதவீதம், ஃபைசர், மடெர்னா செயல்திறன் அளவுக்கு இல்லை என்றால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று என்டிடிவி கருத்து தெரிவித்துள்ளது.

“ஃபைசர், மடெர்னா தடுப்பு மருந்துகள் mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்தோ வைரஸ் நுண்ணுயிரியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. எனவே, சோதனையில் 95% செயல்திறனை சாதித்த ஃபைசர், மடெர்னா தடுப்பு மருந்துகள் ஆக்ஸ்ஃபோர்ட் மருந்தை விடச் சிறந்தவை என்று நினைத்து விட முடியாது. இந்த இரண்டு சோதனைகளிலும் ஒரே மாதிரியான விளைவுகள் அளவிடப்படவில்லை” என்று இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த பேராசிரியர் சாரா கில்பெர்ட் கூறியிருக்கிறார் என்று தி கார்டியன் செய்தி தெரிவிக்கிறது.

குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி – மருந்து நிறுவனங்கள் நம்பிக்கை

 

ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து – சோதனையில் தற்செயலாகக் கிடைத்த வெற்றி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்