இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில், இதுவரை 12 நாட்களில் ஒன்பது மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான முழு விபரங்களையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவ நெறிமுறைகளுக்கான ஆய்விதழின் ஆலோசனை ஆசிரியர், ஆசிரியர் அமர் ஜெசானி, வழக்கறிஞர் வீணா ஜோஹரி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
scroll.in தளத்தில் வெளியான அவர்களது கட்டுரையில், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், தெலுங்கானா, குருகிராம், ஒடிசா ஆகிய இடங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் இறந்த ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் 27 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருமே கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட 24 மணி நேரத்திலிருந்து ஐந்து நாட்களுக்குள் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அவர்கள் அனைவருமே இருதய பிரச்சினைகள் அல்லது “மூளை செயலிழப்பு” காரணமாக உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த இறப்புகளுக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அவ்வாறு யார் முடிவு செய்தார்கள் என்பதையும், அது தொடர்பான விசாரணையின் விவரங்களையும் அரசு வெளியிடவில்லை என்று இந்தக் கட்டுரை கேள்வி எழுப்புகிறது.
மிகப்பெரிய மருந்தக சோதனை
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு, வரம்புக்குட்பட்ட தரவுகளின் ஆதாரத்தில், அவசரகால அடிப்படையில், வரம்புக்குட்பட்ட பயன்பாட்டுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தடுப்பு மருந்துகளின் ஆபத்துகளை விட பலன்கள் அதிகம் என்ற வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இரண்டு வாரங்களில் இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் 3 கோடி மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை கட்டுரையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த மிகப்பெரிய மருந்து வினியோகம், உண்மையில் ஒரு மிகப்பெரிய மருந்தக சோதனைதான் என்று ஒரு மூத்த மருந்தக மருந்தியலாளர் கூறுகிறார். அத்தகைய மருந்தக சோதனைக்கு வலுவான கண்காணிப்பு வழிமுறை அவசியமாக உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பான இந்த கடுமையான பாதக நிகழ்வுகளை (AEFI) உடனடியாக, முழுமையாக, வெளிப்படைத் தன்மையுடன் புலனாய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்விதழின் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அவர்கள் இது தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
- ஒன்பது இறப்புகள் தொடர்பான விசாரணையின் நிலை (அதே போல் ஊடகங்களில் வெளி வராத மற்றவை பற்றியும்), அனைத்து கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களும் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விபரங்களும் உடனடியாக பொதுவில் வெளியிடப்பட வேண்டும்.
- AEFI விசாரணைக் குழு உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும், அவர்கள் இணைந்துள்ள நிறுவனங்களும் அவர்களது கல்வி தகுதிகளும் பொதுவில் வெளியிடப்பட வேண்டும்.
- இந்த இறப்புகள் தடுப்பூசிக்கு தொடர்பில்லாதவை என்று எந்த அளவுகோல்களால் தீர்மானிக்கப்பட்டன? இது போன்ற கொத்தான AEFI களை விசாரிப்பதற்கான நடைமுறை செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவில்லை.
- கோ-வின் செயலியில் தரவுகளை உள்ளீடு செய்வதிலும், பகுப்பாய்வு செய்வதிலும் உள்ள பிரச்சினைகள் காரணமாக விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதா?
- ஒன்பது மரணங்கள் தொடர்பான விசாரணை முடிவடையும் வரை ஏன் தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்படவில்லை? கடுமையான பாதகமான விளைவுகள் பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகளின் மருந்தக சோதனைகள் குறைந்தது மூன்று முறை இடைநிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கும் கடுமையான பாதக விளைவுகளுக்கும் இடையில் தொடர்பு இல்லை விசாரணையில் தெரிய வந்த பிறகுதான் பரிசோதனை தொடரப்பட்டது.
- இறந்த சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு எந்தத் தவறும் நடக்கவில்லை என்ற அடிப்படையிலான இழப்பீடு வழங்கப்படுமா? கொரோனா தடுப்பூசிகள் வரம்புக்குட்பட்ட தரவுகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்படுவது உண்மையில் மருந்தக பரிசோதனையாக இருந்த போதிலும் அதை போட்டுக் கொண்டவர்களிடம் ஒப்புதல் கேட்கப்படவில்லை.
- தடுப்பூசி போடப்பட்ட இந்த முதல் கட்டத்தில் மேலும் இறப்புகள் குறித்து தகவல்கள் உள்ளனவா? கொரோனா தடுப்பூசி திட்டத்தின் போது பதிவான அனைத்து கடுமையான தீவிர AEFI களின் எண்ணிக்கை, தடுப்பூசி தேதி, AEFI இன் விவரங்கள், இடம், விசாரணை நிலை, முடிவுகள் ஆகியவை பொதுவில் வெளியிடப்பட வேண்டும்.
இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொண்ட மருத்துவ ஊழியர்கள் அந்த மருந்து தம்மை ஒரு தீவிரமான நோயிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் அதை போட்டுக் கொண்டனர். அவர்களின் இறப்புகள் பற்றிய உடனடியான, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை செய்வதும் அந்த விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதும் அவர்களுக்கு குறைந்த பட்ச மரியாதை செய்வதாக இருக்கும் என்று இந்திய மருத்துவ நெறிமுறைகளுக்கான ஆய்விதழின் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.