அலோபதி மருத்துவ முறை மற்றும் விஞ்ஞான மருத்துவத்திற்கு எதிராக அவதூறுகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்தும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் மீது இந்திய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில், பாபா ராம்தேவ் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பேச்சு பொருளானது. அதில், அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல் என்று அவர் கூறுகிறார். அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர் என்றும் ரெம்டெசிவிர், ஃபாவிஃப்லு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் தோல்வியுற்றது என்றும் ராம்தேவ் கூறினார்.” என்று அக்காணொளி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMA HQs Press Release on 22.05.2021 pic.twitter.com/rrc1LXA24n
— Indian Medical Association (@IMAIndiaOrg) May 22, 2021
“அலோபதி மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஒன்றிய சுகாதாரத்துறையின் அமைச்சருமான ஹர்ஷ் வர்தன், இந்த மனிதரின் குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொண்டு, இந்த நவீன மருத்துவத்தை கலைக்க வேண்டும் அல்லது அவரின் சவாலை தைரியமாக எதிர்கொண்டு, வழக்குத் தொடர வேண்டும். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான அவரின்(பாபா ராம்தேவ்) கொடிய வார்த்தைகளுக்காகவும், லட்சக்கணக்கான மக்களை இத்தகைய அஞ்ஞானச் சொற்களிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.” என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தற்போதைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த ராம்தேவ் முயற்சிக்கிறார். இதன் வழியாக, சட்டவிரோதமாகவும் அங்கீகரிக்கப்படாமலும் தயாரிக்கப்பட்ட தனது மருந்துகளை விற்று, பொதுமக்களிடம் இருந்து பெருமளவில் பணம் சம்பாதிக்க முயல்கிறார். அலோபதி மருத்துவர்களின் ஆலோசனைகளை நம்ப வேண்டாம் என்று கூறிவருவதன் வழியாக, பலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். அதற்காக, ராம்தேவ்வின் மேல் வழக்கு தொடர வேண்டும்.” என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது.
கொரோனா பெயரால் ரூ.241 கோடி குவித்த பாபா ராம்தேவ் – நவநீத கண்ணன்
மேலும், அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பொது மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்காகவும், நீதியை பெறவும் நீதித்துறையின் கதவுகளைத் தட்டுவதற்கு தேவையான ஜனநாயக வழிமுறைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்று மருத்துவர்கள் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.