பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ தலைமையிலான பிரேசில் அரசு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தாலும் கூட தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் அதிபர் உறுதியாக இருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது கொரோனா நோய்த்தொற்று பரவலைப் பெருமளவு கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ள அவர் “நான் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள மாட்டேன். இது என் உரிமை.” என்று பேசும் காணொலி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
தொடர் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் – கொரோனாவே காரணம் என்கிறது மத்திய அரசு
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து எனது செல்லப்பிராணிக்குத்தான் தேவை எனக் கடந்த அக்டோபர் மாதம் போல்சானாரோ கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
போல்சானாரோ கொரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதத்திற்காகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
கொரோனாவைப் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருந்தது, கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை உணராமல் அதைக் குறைத்து மதிப்பிட்டது, ஊரடங்கு நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தாமல் இருந்தது எனப் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
கொரோனா நோய்த்தொற்றை ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கட்டுப்படுத்தவில்லை எனப் பல ஆய்வுகள் கூறி வந்த நிலையிலும், அந்த மருந்தைப் பயன்படுத்த மக்களிடம் பிரச்சாரம் செய்தது, கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தவறியதால், அதிபர் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றிற்கு எதிரான சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்தோ, பிரேசிலின் சுகாதார ஒழுங்குமுறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டால் அதை உடனடியாக அவரது அரசாங்கம் கொள்முதல் செய்ய விரும்புவோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை முடிவுகள் – விலை கட்டுப்படியாகுமா?
மேலும் பிரேசிலின் குடிமக்கள் அனைவரும் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் விரும்புவோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா எனும் தடுப்பு மருந்தை 10 கோடி பேருக்கு வாங்க பிரேசிலின் சுகாதார அமைச்சகம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்த தொடக்கத்தில் முகக்கவசம் அணியாமல் பல இடங்களுக்குச் சென்ற இவர் ஜூலை மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். போல்சானாரோவின் குடும்ப உறுப்பினர்கள், அவரது அமைச்சரவையில் உள்ள 7 அமைச்சர்கள், 17 மாநில கவர்னர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர் என்று பிரேசிலின் எஸ்டாடோ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.