Aran Sei

இன்குலாபின் அறமும் அரசியலும் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

2016-ம் ஆண்டு டிசம்பரில் ஒரு  காலை நேரம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அழைத்திருந்தார். வழக்கமாகப் பேசுவதற்காக அழைத்திருப்பார் என்று எடுத்தேன். கவிஞர் இன்குலாப் மறைந்துவிட்டார் என்கிற துயர் மிகுந்த செய்தியைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். என்னுள் ஒரு பெரும் உணர்வெழுச்சியை உண்டாக்கிய ஒரு மனிதன், கவிஞன் இறந்து விட்டார் என்கிற செய்தியை நம்ப மறுத்தது மனம். அவரை ஒருமுறை கூட நேரில் சந்தித்ததில்லை ஆனாலும் அவர்மேல் எனக்கொரு பிணைப்புண்டு. அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் அவரின் உடல் நிலை காரணமாக அதைத் தவிர்த்து வந்தேன்.

இளங்கலை தமிழிலக்கியம் படிக்கும்போது அவரின் அவ்வை நாடகம் என்னுடைய பாடத்திட்டத்தில் இருந்தது. தலித் கலை, இலக்கியம், வரலாறு என்று வாசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தலித் நாடகவியலின் முன்னோடி கரு.அழ. குணசேகரன் பாடிய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்கிற பாடலைக் கேட்க நேர்ந்தது. அப்போதுதான் பாடல் எழுதியது ‘இன்குலாப்’ என்கிற பெயரை அறிந்தேன். புதுச்சேரியில் இருந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்திடம் பேசும்போதெல்லாம் இன்குலாபின் எழுத்து, போராட்டம் குறித்துக் கேட்டறிந்தேன். எனக்குள் ஒரு விருட்சமாய் இன்குலாப் வளர்ந்தார்.

நாம் நேசித்து வாசித்த ஒருவர் மறைந்துவிட்டார்  அவரைக் கடைசியாக வழியனுப்பவாவது போய்விடவேண்டும் என்று துடித்தேன். பெருமழை பெய்துகொண்டிருந்த போது, நுங்கம்பாக்கத்தில் இருந்து ரயில் ஏறி கூடுவாஞ்சேரி சென்றடைந்தேன். அவரின் வீட்டிற்கு வழி தெரியாமல் கேட்டுக் கேட்டு மழையில் நனைந்துகொண்டே சென்றேன்.

அவர் வீட்டை  அடைந்த போது மனம் தகித்தது. சமூகத்தின் ஏற்றத்ததாழ்வுக்கெதிராகச் சமர்புரிந்த ஒருவர் அமைதியாகப் படுத்துறங்கிக் கொண்டிருந்தார். தமிழ் மொழியின் அத்தனை எழுத்துகளையும் ஆயுத எழுத்தாக மாற்றிய ஒருவர், மௌனமாக இருந்தார். கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. பச்சையப்பன் விடுதியில் அவரின் கவிதைகளைக் கூட்டமாக அமர்ந்து படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. மனுசங்கடா கவிதையில் ரௌத்திரம் வளர்த்தது, தாஹிரா கவிதையில் காதல் வளர்த்ததென்றுப் பல்வேறு உணர்வுகளால் சூழப்பெற்றேன். இன்குலாபின் நான்காவது நினைவாண்டில் அவரை நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழ்க் கவிதை வரலாற்றில் இன்குலாபின் இடம் மிக முக்கியமானது. கவிஞர், நாடகாசிரியர், கதையாசிரியர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்ட இன்குலாப்,  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஓர் எளிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவராவார். தன்னுடைய இளம் வயது முதல்கொண்டே சமூக அக்கறையோடு இயங்கியவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

தமிழ் நிலத்தின் அறிவுச் செயல்பாட்டிலும் களச் செயல்பாட்டிலும் பங்காற்றியவர். பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி என்று விரியும் தமிழ்க் கவிதை வரலாற்றில் இன்குலாபின் எழுத்துச் செயல்பாடு எளிய மக்களுக்கானது. பொதுவுடமைச் சமூகத்தைக் கட்டியமைப்பதற்காக, தன் எழுத்தை ஆயுதமாக்கியவர். இடதுசாரித் தத்துவத்தைத் தன் அரசியலில் பின்புலமாகக் கொண்ட அவர் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சமரசமின்றிப் போராடினார்.

’அவ்வை’ என்கிற தமிழ்ப் புலவரை, தொன்மத்தை அவர் நாடகமாக எழுதிப் பார்த்ததென்பது, தமிழ் மண்ணில் வேரூன்றி இருக்கும் முற்போக்கு அறிவு மரபை சமகாலத்தில் எடுத்துக் காட்டி, நம் மரபென்பது ஆணுக்குப் பெண் சரிநிகர் என்பதைச் சொல்வதற்குத்தான் என்று புரிந்துகொள்ளலாம். சங்கப் பிரதியில் இருந்த ’அவ்வையை’ பாட்டும் கூத்துமாய் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தினார் பாடினி வந்தாள் பாடினி வந்தால், பாட்டும் கூத்துமாய்ப் பாடினி வந்தால்என்று அவர் பண் இசைக்கும்போது படிக்கும் நமக்கும் உணர்ச்சி படர்கிறது

பழைய மரபுகளின் மேல் எப்போதும் ஒரு விசாரணையை எழுப்பிக்கொண்டே இருந்தார். தமிழ்ப் பெருமைகள் என்று சொல்லப்படுகின்ற பலவற்றைக் காத்திரமாகக் கேள்விக்கு உட்படுத்தியவர் `ராஜராஜேச்வரியம்’ எனும் கவிதையில் தமிழ் பெருமையாகக் கருதப்பட்டுக்கொண்டிருக்கும் ராஜராஜனை

அடிமை சூடு பொறிக்கப்பட்ட
என் முதுகு இன்னும் ஆறவில்லை
இதன்வழி கொள்ள
பிரமாண்டத்தின் கீழ்
சிறிய தேசங்கள் சிதறிக்கிடக்கின்றன

என்று பிரமாண்டங்களின் பின்னிருக்கும் எளிய மக்களின் வியர்வயை, கண்ணீரை, ரத்தத்தைப் பதிவு செய்தவர்.

பெண் விடுதலை இல்லாமல் சமூக மாற்றம் இல்லை. பழைய மதிப்பீடுகளைத் தகர்க்காமல் விடுதலை பெற முடியாது.

”ஒவ்வொரு தீர்ப்பின் போதும்
மறுபடியும் ஒரு விசாரணை நடக்கும்
பெண்கள் தீர்க்கதரிசிகளாக
மண்ணில் புதிய நியாயம் பிறக்கும்”

என்று அவர் பெண்களின் வருங்காலத்தைக் கணக்கிட்டார்.

கடைசிவரை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர், சர்க்கரை நோயால் சரியாக நடமாடமுடியாத கால கட்டத்திலும்கூட போராட்ட களங்களில் கலந்துகொண்டார். எழுத்திலும் வாழ்விலும் சமரசத்தை ஏற்காத போராளியாகத் தன்னுடைய வாழ்வின் இறுதி வரை இருந்தார்.

1968-ம் ஆண்டுத் தஞ்சையில் நிகழ்ந்த வெண்மணி படுகொலை இந்திய வரலாற்றில் போராட்டத்தின் குறியீடாக இருக்கிறது. அந்தப் போராட்டம் இன்குலாபின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை அவரின் படைப்புகள் வழியே அறிய முடிகிறது. வெண்மணி நிகழ்வு அவரின் பல கவிதைகளில் பிரதிபளிப்பதை நாம் அறியலாம். சாதியும் வர்க்கமும் இணைந்து நிகழ்த்திய கோர நிகழ்வது.

”சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணெய  ஊத்துது
எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும்போது எவன் மசுர  புடுங்கப் போனீங்க
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்ன போல அவனைப்போல
எட்டு சானு ஒசரமுள்ள மனுசங்கடா” என்று வெண்மணிக்காக எழுதியவர்

மேலும்

சுட்டெரித்த ஏழைகளின் சாம்பல் துகள் ஒவ்வொன்றும்
பற்றும் ஊழித்தீயாக நாளையே ! உடல்
துடிக்கப் புகைந்தவர்கள் வெடித்துக் கிளம்பும் வர்க்கப்
படிப்பினைக் காணும் எதிர்காலமே

என்கிற அவரின் பாடல் வெண்மணியில் எரிந்த அப்பாவி உயிர்களுக்காகப் பேரிகை கொட்டி காற்றில் அதிர்கிறது

இன்குலாப் ஒரு பிரச்சாரகர் அவருக்குக் கவிதையின் அழகியல் தெரியாது. அவர் எழுதுவதெல்லாம் கவிதையே அல்ல என்பது தமிழின் சில மோகன எழுத்தாளர்களின் கருத்து. கலையை அரசியலுக்கான ஆயுதமாக்கியவர்.

இயற்கையின் அழகை, வாழ்க்கைப் பாடுகளை இன்குலாப் அளவிற்க்கு பாடியவர்கள் குறைவே.

சூரிய இலைகளில்
பாறைத் தளிர்களில்
ஏழு வண்ணங்களை
நெய்யும் நெசவு

என்று இயற்கையைப் பாடிய அவர்தான்.

புள்ளியில் துளிர்த்த
பூவிதழ் ஒன்று
பூரணமாக முன்
புயலில் விழுந்தது

என்று சமூகத்தைக் கலையாக்கியவர்.

தாஹிரா ஓ-தாஹிரா என்
தாகம் தனித்திரு இசைபொழிந்து
தாஹிரா ஓ-தாஹிரா
உன் தாளங்களால் என்னை ஈடேற்று

என்று அவர் காதலில் குழைகிறார்.

வர்க்கப் போராட்டமே உலக வரலாறு என்கிறது மார்க்சியம். இன்னும் ஒரு பிடி சோற்றுக்காகப் போராட வேண்டியிருக்கிறது, விவசாயச் சட்டங்களை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டம் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

”தொழிலாளர் வர்க்கத்தின் தூய புதல்வர்கள் மேல்
கை வைக்கத் துணிந்த காட்டுமிராண்டிகளே !
இந்த ரத்தத்தின் ஈரம் உலரும் முன்
எங்கள் தோழர்கள் உங்களைச் சூறையாட வருவார்கள்”

என்கிற அவரின் வரிகள் மனித வரலாற்றில் நிகழும் எல்லாப் போராட்டத்திற்கும் வலு சேர்ப்பவை

இடதுசாரி பின்புலத்திலிருந்து சமூகத்தை எழுதியவர். சாதியை, இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனையாகக் கருதி, ஒடுக்குமுறைக்கு எதிரான கலகக் குரலாக ஒலித்தவர். மாயா ஏஞ்சலோ, பாப்லோ நெருடா, லாங்டன் யூஸ், ஏதல்பட்மில்லர் போன்ற உலகு மெச்சும் கவிஞர்களுக்கு இணையானவர் இன்குலாப்.

கசடு பிடித்துச்
சீழ் வடியும் காயத்தைத் தோலின் புன்சிரிப்பென்று
புனையவும்
இன்னமும்
அறுசுவையுடன்
ஒரு கண்ணீர்த் துளியைச் சமைக்கவும்
எனக்குத்
 தெரியவில்லை

என்பதே இன்குலாப்பின் மொத்த வாழ்வின் அறவியலும் அரசியலும்.

 

– சந்துரு மாயவன்

இன்குலாபின் அறமும் அரசியலும் – நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்