நீலகிரி மாவட்டம் மசினகுடியைச் சுற்றியுள்ளப் பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்றை வனத்துறையினர், அதிரடிப்படையினர், காவல்துறையினர், மருத்துவர்கள் கொண்ட குழு தேடி வருகிறது. பல கேமராக்கள் பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். ஆனால், 10 நாட்களுக்கு மேலாக யார் கண்ணிலும் படாமல் வனத்திற்குள் பதுங்கியுள்ளது. அந்தப் புலி ஆட்கொல்லி என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
புலியைச் சுட்டுக்கொல்ல ஆணை வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுத்ததால் தமிழ்நாடு வனத்துறை முதன்மை அதிகாரி சேகர் குமார் நீரஜ், புலியை சுட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார். சில நாட்களுக்கு முன் புலியைச் சுட்டுப் பிடிக்கக் கூடாது என்பதற்காக சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தலைமை நீதிபதி சஞ்ஜெய் பானர்ஜி முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. புலியைக் கொல்லாமல் உயிருடன் பிடிக்க முயற்சி செய்யுங்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். புலியைத் தேடும் பணியில் சீனிவாசன், உதயன் என்கிற இரு கும்கி யானைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. 40 கால்நடைகளுக்கு மேல் கொன்ற புலி 4 மனிதர்களையும் கொன்று ஒருவரைத் தின்றுள்ளது.
கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்
வரலாற்று ரீதியாக புலிகளின் வாழ்விடம் துருக்கியில் தொடங்கி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகள்வரை நீள்கிறது. ஆசியக் கண்டத்தின் கடற்கரை பகுதிகளிலும் வாழ்விடம் கொண்டிருந்தது. இப்போது தெற்கு, தென்கிழக்கு ஆசியா பகுதிகள், சீனா மற்றும் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. புலி மனிதர்களை எப்போது கொல்லும் என்று காட்டுயிர் ஆர்வலரான ஜிம் கார்பெட் புலிகள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். புலி ஒரு அமைதியான மிருகம் பார்க்கும் எல்லாவற்றையும் வேட்டையாடாது என்கிறார் ஜிம் கார்பெட். தனக்கு பசி ஏற்பட்டாலோ அல்லது இடையூறு செய்தாலோ மட்டுமே புலி ஒருவரைத் தாக்குகிறது. மனிதர்களைத் தாக்கும் புலி யாவுமே ஆட்கொல்லி என்று சொல்லிவிட முடியாது என்கிறார் அவர். புலி மனிதர்களைக் கண்டு விலகிப்போகும் என்கிறார் ஜிம் கார்பெட்.
வயோதிகத்தின் காரணமாகவோ உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவோதான் மனிதர்களைத் தாக்குகிறது. காடுகளை அழிப்பதால் வன உயிர்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு நுழைவது தொடர்கதையாகியுள்ளது. இதுவும் தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய காரணமாக அமைகிறது. புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டால் மனிதர்களின் தலை, கை, கால்கள், உடல் மட்டுமல்ல மனித ரத்தம் தோய்ந்த உடைகளைகூட தின்றுவிடும் என்கிறார் அவர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள குமாயுன் காட்டில் 450 பேருக்கு மேற்பட்ட மனிதர்களைக் கொன்று புசித்துச் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலியைக் கொன்றுள்ளார் கார்பெட். புலி ஒரே இடத்தைத் தேர்வு செய்து மனிதர்களை வேட்டையாடாது. தினமும் தன்னுடைய வேட்டைக்கான இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும்.
மனிதரின் பரிணாம வளர்ச்சியால் ஆயுதம், துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதால், மனிதர்களைக் கண்டு அஞ்சியே புலிகள் இருந்துள்ளன. வேட்டை திறனற்று போகும் காலத்தில் பசியின் காரணமாக மனிதனை தாக்கும்போது மனிதன் மிக எளிதாக வீழ்ந்துவிடுகிறான். இதைப் புலி அறிய வரும்போது தொடர்ச்சியாக மனிதனைத்தாக்கி உணவாக்கி கொள்கிறது. செத்த விலங்குகளை புலி உண்பதில்லை. அதனால் வேட்டையாடி மட்டுமே புசிக்கிறது. அதன் காரணமாக ஒரே நாளில் பலரை உணவாக கொல்வதில்லை. பெரும்பாலும் தனியாக இருக்கும் மனிதர்களையே குறிவைத்து தாக்குகிறது. சுள்ளி பொறுக்க காட்டுக்குப் போன பெண்களில் ஒருத்தியை புலி தாக்கிக் கொன்று உண்டுள்ளதை உத்தர பிரதேசத்தில் உள்ள குமாயுன் காட்டின் அடர்ந்த வரலாறு சொல்கிறது. புலி கொன்ற இடத்திலேயே தன்னுடைய உணவைப் புசிப்பதில்லை. தனக்கு தொந்தரவு ஏற்படாதவாறு இரையைத் தூக்கிச் சென்று மறைவான இடத்தில் வைத்தே உண்ணும். ஆட்கொல்லி புலியை மக்கள் ஒன்று கூடி விரட்டியதெல்லாம் நடந்திருக்கிறது. ஆட்கொல்லி புலியை விரட்டி அடிப்பது மிகவும் ஆபத்தானது. புலி பிற இடங்களுக்குப் பெயர்ந்து செல்லுமானால் அங்கும் மனிதர்களைக் கொல்லும். ஆக அது சுற்றித்திரியும் வனத்திற்குள்ளே பிடிப்பதுமட்டுமே நேரும் ஆபத்திலிருந்து தப்பிக்கும் ஒரே வழி.
இந்தியாவின் தேசிய விலங்காக அறியப்படும் புலி அருகிவரும் உயிரினங்களில் ஒன்று. புலிகளைக் காப்பதற்காக 1973 ஆம் ஆண்டு இந்திராகாந்தி புலிகள் திட்டம் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. காட்டின் எல்லைகளை விரிவாக்குவது, காப்பகம் அமைப்பது தொடர்பான திட்டத்தை வகுத்து நிதியளிக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 519 உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்களால் காட்டு வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது என்கிறது இந்தியா ஸ்பெண்டின் ஆய்வு. 2015 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கில் ஒரு பகுதி புலிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்தன என்கிறார் புலிகள் ஆய்வாளர் ரகு சுந்தாவத். மே 2019 இல், 13 ரயில் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் ஒப்புதல்களில் இருந்து மோடி அரசு விலக்கு அளித்தது; இதில் நான்கு திட்டங்களால் தேசியப் பூங்கா, புலிகள் சரணாலயம், புலி நடைபாதை உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படையக்கூடும் என்கிறார்கள் வன உயிர் ஆர்வலர்கள். அரசே வன சட்டங்களை மீறுவதால் காட்டுயிர்களால் மனிதர்களுக்கு ஆபத்து நேருகிறது. 2012 முதல் 2018 வரை இந்தியாவில் 657 புலிகள் இறந்துள்ளதாகவும் அதிகமாக வேட்டையாடப்பட்டு இறந்துள்ளதாகவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது. புலிகளுக்கான வாழிடத்தை உறுதி செய்யும்போது அது மனிதர்களைச் சீண்டுவதில்லை.
தற்போது ஆட்கொல்லி என்று சொல்லப்படும் T23 புலியைப் பிடிப்பதற்காக ட்ரோன்களும் காமிராக்களை காடுகளில் பொருத்தப்பட்டும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் எதற்கும் சிக்காமல் மறைந்திருக்கிறது. புலியைச் சுட்டுக்கொன்றால் மட்டுமே தங்களுடைய வாழ்வுவும் உயிரும் காப்பாற்றப்படும் என்று மசினகுடியை சுற்றியுள்ள மக்கள் போராடி வருகின்றனர். போராட்டம் வலுத்திருக்கும் சூழலில் காவல்துறையினர் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆட்கொல்லி புலியாக இருக்கும் பட்சத்தில் அதைச் சுட்டு வீழ்த்தப்படுமா அல்லது உயிருடன் பிடிக்கப்படுமா என்பது வனத்துறையே அறியும். காடுகளைப் பாதுகாப்பது மட்டுதான் காட்டுயிர்களைப் பாதுகாக்க ஒரே வழி. காட்டில் வாழும் பழங்குடிகளால் பிரச்சினைகள் எழுவதில்லை. தண்டகாருன்யா காடு, கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைக்காடு இன்னும் பல காடுகளைப் பெருமுதலாளிகளிடமிருந்தும் சாமியார்களிடமிருந்தும் காப்பதுதான் வன உயிர்கள் வாழ ஒரே வழி.
கட்டுரையாளர் – சந்துரு மாயவன், முனைவர் பட்ட ஆய்வாளர்
பயன் பட்ட நூல்கள் – குமாயுன் புலிகள், எனது இந்தியா – ஜிம் கார்பெட் (காலச்சுவடு பதிப்பகம்)
இணையதளம்: www. indiaspend.com, www.india.gov.in
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.