ஆளுநராகவோ, துணைவேந்தராகவோ ஒருவர் பதவியேற்க விரும்பினால், வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை ஆர்எஸ்எஸ்காரராக இருந்தால்போதும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இவ்வாண்டு கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாகக் கேரளா சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 28) அவர் வயநாட்டில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்டு, உரையாற்றியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி
அப்போது, “எந்தவொரு உரையாடலோ கலந்துரையாடலோ இல்லாமல் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கொள்கை மாணவர்களுக்கு நல்லதுதானா என்று ஆசிரியர்களிடம் கூட இதுபற்றிக் கருத்து கேட்காமல் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் சோகமானது. இது நம் மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
“இது இந்தியாவின் நிறுவன கட்டமைப்பு மற்றும் நமது கல்வி முறைமீதான கருத்தியல் தாக்குதல் ஆகும். அங்குள்ள ஒருவருக்கும் இதுகுறித்த எந்தப் புரிதலும் தேவைப்படவில்லை. ஒருவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தால்போது, நீங்கள் துணைவேந்தராகவும், ஆளுநராகவும் நாட்டில் எந்தப் பதவியை நீங்கள் வகிக்க விரும்புகிறீர்களோ அதை நீங்கள் பெறலாம்.” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும், “இது துயரமானது, இதை நாம் எதிர்த்து நமது முழு பலத்துடனும் போராட வேண்டும். பலவிதமான கருத்துக்கள் ஒன்றுக்கொன்று அமைதியாகச் சவால் விடுவதற்கான சுதந்திரம் இருந்தால் மட்டுமே இந்தியாவின் கல்வி வலுவானதாக இருக்க முடியும். மத்திய அரசு கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி என்பது நம் மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.