Aran Sei

” அறிவியல் விரோத பசு தேர்வை பரிந்துரைக்க முடியாது ” – மேற்கு வங்க பல்கலைக் கழகங்கள் முடிவு

Image Credit : thewire.in

தேசிய காமதேனு ஆயோக் நடத்தவுள்ள பசு தேர்வில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற பல்கலைக் கழக மானியக் குழுவின் உத்தரவை மேற்கு வங்காளத்தின் அரசு நடத்தும் பல்கலைக் கழகங்கள் ஏற்க மறுத்துள்ளன.

“காமதேனு காவ் விக்யான் பிரச்சார் பிரசார் தேர்வும் போட்டியும்” என்ற அந்த இணையவழி தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்திருந்தார்கள், அந்தத் தேதி இப்போது தள்ளி போடப்பட்டுள்ளது என்று தி வயர் கூறுகிறது. பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறவிருந்த ஒத்திகை தேர்வும் நடக்கவில்லை.

” பசு விஞ்ஞான ” தேர்வை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் – யுஜிசி வலியுறுத்தல்

இந்தத் தேர்வில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கும்படி பல்கலைக் கழக மானியக் குழு நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.

ஜாதவ்பூர் பல்கலைக் கழகம், பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரை தொடர்பாக எதுவும் செய்யப் போவதில்லை என்ற முடிவு பிப்ரவரி 20-ம் தேதி எடுக்கப்பட்டதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது. பல்கலைக் கழக நிர்வாகிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் கூற விரும்பாத ஒரு பேராசிரியர் கூறியிருக்கிறார்.

“ஜாதவ்பூர் சமுதாயம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறதாக தி வயர் கூறுகிறது.

அறிவியல் மாநாட்டில் மத பிரச்சார அமைப்புகளா? – சு.வெங்கடேசன் கேள்வி

“ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் தொடங்கியதிலிருந்தே எப்போதுமே அறிவியல் மற்றும் மதச்சார்பற்ற கல்வியை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. பசு தேர்வை நடத்துவது இந்த நிரந்தரமான தத்துவத்துக்கு எதிராக இருக்கும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“நாட்டின் கல்வி முறைக்கு இந்த தேர்வு வழங்கவிருக்கும் அறிவியல் விரோத பார்வை குறித்து பிற கல்லூரிகளும், பல்கலைக் கழக மானியக் குழுவும் சிந்திக்க வேண்டும் என்று ஜாதவ்பூர் சமுதாயம் கேட்டுக் கொள்கிறது”

நடத்தப்படவிருக்கும் பசு அறிவியல் தேர்வு, “ஒரு குறிப்பிட்ட அறிவியல் விரோத தத்துவத்தை இன்றைய மாணவர் தலைமுறை மீது சுமத்துகிறது” என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தயாரித்துள்ள, தேர்வுக்கான பாடங்களில் உள்ள அறிவியல் விரோத தகவல்களுக்கு உதாரணமாக, “போபால் விஷவாயு பேரழிவின் போது வீட்டுச் சுவர்களின் மீது சாணியை பதித்திருந்தவர்கள் பாதிக்கப்படவில்லை” என்று கூறப்பட்டிருப்பதையும், “சில ஆண்டுகள் பசுக்கள் தொடர்ந்து கொல்லப்படும் ஒரு இடத்தில் நிலநடுக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறப்பட்டிருப்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அறிக்கை நிர்வாகத்தாலோ, ஆசிரியர் சங்கத்தாலோ வெளியிடப்படவில்லை என்றாலும் அது ஆசிரியர் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக ஜாதவ்பூர் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் பார்த்தா பிரதிம் ரேய் கூறியுள்ளார்.

“நிதி வழங்கப்படாததால் ஏப்ரல் மாதம் முதலே 250 ஆராய்ச்சித் திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன. ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற (பசு) தேர்வில் கலந்து கொள்ளும்படி மாணவர்களை ஊக்கப்படுத்துவது எங்கள் வேலை இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவின் ரபீந்திர பாரதி பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், வடக்கு வங்காளத்தில் உள்ள கௌர் பெங்கால் பல்கலைக் கழகம், தென்மேற்கு வங்காளத்தில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகம் ஆகியவையும், பசு தேர்வை நிராகரித்திருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்திருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

” அறிவியல் விரோத பசு தேர்வை பரிந்துரைக்க முடியாது ” – மேற்கு வங்க பல்கலைக் கழகங்கள் முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்