திருமண வாழ்வின் போது மனைவி செய்த வீட்டு வேலைகளுக்கு ஊதியம் வழங்கும்படி சீனாவின் பெய்ஜிங்-ல் உள்ள ஒரு விவாகரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சென் (ஆண்) என்பவருக்கும் வாங் (பெண்) என்பவருக்கும் 2015-ம் ஆண்டில் திருமணம் நடந்திருக்கிறது. 2018 முதல் அவர்கள் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றனர். சென்ற ஆண்டு சென் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.
தொடக்கத்தில் விவாகரத்துக்கு உடன்படாத வாங், பின்னர் தன் கணவன் வீட்டு வேலைகளிலும் குழந்தை வளர்ப்பிலும் எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி நிதி நிவாரணம் கோரியுள்ளார்.
பெய்ஜிங்கின் ஃபாங்ஷான் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கூறியுள்ளது. அதன்படி கணவரான சென், மனைவி வாங்-க்கு 50,000 யுவான் (சுமார் ரூ 5.5 லட்சம்) ஒருமுறை ஊதியமாகவும், மாதம் தோறும் 2,000 யுவான் (சுமார் ரூ 22,000) ஜீவனாம்சமாகவும் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
“வீட்டு வேலை புலப்படாத சொத்து மதிப்பை உருவாக்குகிறது” என்று நீதிபதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான ஹேஷ்டேக் சீனாவின் டிவிட்டருக்கு நிகரா வெய்போ செயலியில் 57 கோடி பார்வைகளை பெற்றிருக்கிறது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகள் வேலை செய்வதற்கு இந்த நிவாரணம் மிகக் குறைவானது என்று பலர் கருத்து சொல்லியிருக்கின்றனர். “பெய்ஜிங்கில் முழு நேர வீட்டு வேலை செய்பவருக்கான ஒரு ஆண்டு சம்பளமே 50,000 யுவான்” என்று ஒருவர் கருத்து தெரிவித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் வழங்கப்பட்ட குறைவான தொகையை எதிர்த்து வாங் மேல்முறையீடு செய்யவுள்ளார். அவர் 1.6 லட்சம் யுவான் (சுமார் ரூ 17.6 லட்சம்) நிவாரணம் கோரியிருந்தார்.
சீனப் பெண்கள் ஆண்களை விட தினமும் 2.5 மடங்கு அதிகமாக 4 மணி நேரம் ஊதியமில்லாத உழைப்பில் ஈடுபடுகிறார்கள் என்று பொருளுதாரா ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.