Aran Sei

டெஸ்லா எனும் மாமனிதனும், எடிசன் என்ற சூழ்ச்சிக்காரனும் – கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

உலகின் சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டால் அதற்கு மின்சாரம் என்றுதான் பதில் சொல்வார்கள் அறிவாளிகள். உலகின் மிகச்சி சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மின்சாரம் என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

ஒரு அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல நூறு கிலோமீட்டர்களை கடந்து ஒரு குக்கிராமத்தில் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்று நாம் சிந்தித்ததில்லை. நீண்ட தூரம் மின்சாரம் கொண்டு செல்வது  எளிதாக சாத்தியமான காரியமல்ல. அந்த சாதனைக்குப்பின் துரோகம், சூழ்ச்சி, உழைப்பு, தியாகம் என எல்லாமும் இருக்கிறது. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு சில நூறு ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த மின்சாரத்தை சில மைல்கள் மட்டுமே கொண்டு செல்ல இயலும். அதற்கு நேர் மின்சாரம் [Direct Current (DC)] என்று பெயர். இந்த வகை மின்சாரம் தான் பேட்டரியில் இருந்து கிடைப்பது. அதாவது செல்போன் பேட்டரியில் இருந்து செல்போனின் ஸ்பீக்கருக்கு போகும், அவ்வளவு தான். பெரிய மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து நேர் மின்சாரத்தை சில மைல்களுக்கு எடுத்துச் செல்லலாம். அப்படி பல மின்னுற்பத்தி நிலையங்களை நடத்தி அதன் மூலம் பொருள் ஈட்டி வந்தார் தாமஸ் ஆல்வா எடிசன். ஏற்கனவே குறிப்பிட்டது போல, எடிசன் தயாரித்த மின்சாரத்தை நீண்ட தூரம் எடுத்துச் செல்ல முடியாது. அந்த சமயத்தில் நிக்கோலா டெஸ்லா என்ற ஆராய்ச்சியாளர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம், எடிசன் ஒரு மோட்டரை உருவாக்கச் சொன்னார். அப்படி உருவாக்கினால் ஒரு பெரிய தொகையை பரிசாக தருவதாகச் சொன்னார் எடிசன். உற்சாகமான டெஸ்லா, இரவு பகலாக வேலை செய்து அந்த மோட்டரை உருவாக்கினார். அதை பார்த்த எடிசன், டெஸ்லாவை பாராட்டி விட்டு மோட்டரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ஏழையான டெஸ்லா தனக்கு பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தார். எடிசனிடம் இருந்து எந்த பரிசும் வரவில்லை. இறுதியில் எடிசனிடம், அவருடைய வாக்குறுதியை நினைவூட்டினார் டெஸ்லா. அதை கேட்டு சிரித்த எடிசன், அமெரிக்காவில் அப்படித்தான் ஜோக்கடிப்போம், அதை உண்மை என நம்பியிருக்கிறாயே என்று சொல்லி சிரித்தார். கோபமும், வருத்தமும், இயலாமையும் ஒன்று சேர்ந்த டெஸ்லாவை வருத்த, அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.

வயிற்று பிழைப்பிற்கு அமெரிக்க வீதிகளில் சிறு வேலைகளை செய்து வந்தார், டெஸ்லா. அச்சமயத்தில், நீண்ட தூரம்  மின்சாரத்தை கொண்டு செல்ல ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அன்றைக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலதிபர் எடிசன். அவர் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். அதே நேரத்தில் ஜார்ஜ் வெட்டிங்ஹவுஷ்  என்ற தொழிலதிபர் தனது விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தார். வெட்டிங்ஹவுஷின் விண்ணப்பத்திற்கு மூளையாக இருந்தது டெஸ்லா. டெஸ்லாவின் மேன்மையான அறிவு வெற்றி பெற்றது. ஒப்பந்தம் வெட்டிங்ஹவுஷிற்கு கிடைத்தது.

அன்றைக்கு வரை, குறைகள் இருந்தாலும், எடிசனின் நேர் மின்சாரம் தான் புகழ்பெற்றது. டெஸ்லா எதிர்மின்சாரத்தை உற்பத்தி செய்தார். அதை நீரின் மூலம் உற்பத்தி செய்தார். செய்யப்பட்ட இடம் அமெரிக்க கனடா நாட்டு எல்லையில் உள்ள நயாகரா அருவி. அங்கிருந்து ஐம்பது மைல் தொலைவில் உள்ள பஃபல்லோ (Buffalo) நகருக்கு மின்சாரத்தை கொண்டு சென்று சாதனை செய்தார் டெஸ்லா. அந்த தொழில்நுட்பத்தால் தான் இன்றைக்கும் உலகில் பல்வேறு இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து மதுரைக்கு அருகில் உள்ள அலங்காநல்லூருக்கு மின்சாரம் கொண்டுவரும் தொழில்நுட்பத்திற்கு பின்னர் உள்ள உழைப்பு திறமை டெஸ்லாவினுடையது.

டெஸ்லாவின் எதிர்மின்சாரம் புகழ்பெற ஆரம்பிக்கவும், எடிசனின் நேர்மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நஷ்டமடைய ஆரம்பித்தது. எடிசனுக்கு பல அமெரிக்க அரசியல்வாதிகள் பழக்கம். அவர்கள் மூலம் ஒரு குரூரமான திட்டத்தை ரகசியமாக செயல்படுத்தினார் எடிசன். மரணதண்டனை கைதிகளுக்கு மின்சார சேர்கள் மூலம் தண்டனை நிறைவேற்றலாம் என்ற யோசனையை சொன்னார். அரசும் எடிசனால் தூண்டிவிடப்பட்டவர்கள் சொன்ன யோசனையை  ஏற்றுக்கொண்டது. அந்த மின்சார நாற்காலியில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் டெஸ்லாவின் எதிர் மின்சாரம்.

அரசியல்வாதிகள் மூலம் எடிசன் மக்களுக்கு சொன்ன தகவல், எதிர்மின்சாரம் பயன்படுத்தினால் மரணம் ஏற்படும்! அது தவிர தன்னுடைய வேலை ஆட்கள் மூலம், தெருநாய்கள் பூனைகள் போன்ற விலங்குகளுக்கு எதிர் மின்சாரம் பாய்ச்சி கொல்லச் செய்தார் எடிசன். அதை பார்க்கும் மக்கள் டெஸ்லாவின் மின்சாரத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்பது எடிசனின் எண்ணம். ஆனால், டெஸ்லாவின் எதிர்மின்சாரம் புகழ்பெற்று உலகெங்கும் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.

மனித குலத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய டெஸ்லாவின் சிலை, அவர் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்திய நயாகரா அருவியில் உள்ளது. நயாகரா செல்பவர்கள் அந்த சிலைக்கு அஞ்சலி செலுத்துவது, பல சூழ்ச்சிகளையும் துரோகங்களையும் வென்ற அந்த ஆராய்ச்சியாளனுக்கு செய்யும் மரியாதையாக பார்க்கப்படுகிறது.

(கட்டுரையாளர் கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி மும்பையில் ஐஐடியில் (IIT-Bombay) முனைவர் பட்டம் பெற்று பின்னர், அமெரிக்காவின் மசாச்சுஸட்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Massachusetts-Amherst) ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது, புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் (CSIR-National Chemical Laboratory) மூத்த முதன்மை விஞ்ஞானியாக (Senior Principal Scientist) பணியாற்றுகிறார்.)
டெஸ்லா எனும் மாமனிதனும், எடிசன் என்ற சூழ்ச்சிக்காரனும் – கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்