இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிஷல் பஷ்லே தெரிவித்துள்ளதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கிடைத்துள்ள ஆவணம் உறுதி செய்துள்ளது.
17 பக்கம் கொண்ட அந்த அறிகையில், புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில், உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம், அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றும் மிஷல் குற்றம்சாட்டியுள்ளதாக ஏஃஎப்பி தெரிவித்துள்ளது.
“பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்ட முயற்சிகள், தொடர்ச்சியாக பலனைத் தர தவறிவிட்டன… மேலும், அமைப்பின் (அரசு) மீதான, பாதிக்கப்பட்டவர்களின் அவநம்பிக்கை அதிகரித்துள்ளது” என்று தங்களிடம் கிடைத்துள்ள ஆணவத்தில், மிஷல் பஷ்லே தெரிவித்திருப்பதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கோத்தயா ராஜபக்ஷே, அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அதற்கு முந்தைய அரசு மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட சில நடவடிக்கைகளை திரும்ப பெற்றுள்ளதாகவும், மனித உரிமை ஆர்வலர்களை கண்காணிப்பதும், அரசுக்கு எதிரான மக்களின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும், மிஷல் குற்றம்சாட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை – இந்தியா கடும் கண்டனம்
இலங்கை ராணுவம், மருத்துவமனைகளின் மீது குண்டு வீசியதாகவும், கண்மூடித்தனமாக வன்வெளித் தாக்குதல் நடத்தியதாகவும், சரணடைந்த புலிகளை சுட்டுக்கொன்றதாகவும், ஆயிரக்கணக்கான தமிழ் சிறுபான்மையினர் காணாமல் போக காரணமாக இருந்ததாகவும், கசிந்துள்ள அந்த அறிக்கையில் இலங்கை அரசின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் உட்பட, போர்க்குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர்கள் மீது, சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று, மிஷல் பஷ்லே தெரிவித்துள்ளதாக கூறியுள்ள ஏஃஎப்பி இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையம் இந்த பரிந்துரையை வழங்குவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளது.
“(ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்) உறுப்பு நாடுகள், சர்வதேச குற்றங்களை நிகழ்த்தியுள்ள, இலங்கையின் அனைத்து தரப்பினர் மீதும் (புலிகள் மற்றும் இலங்கை ராணுவம்) தங்கள் நாட்டு நீதிமன்றத்தில் தீவிர விசாரணை நடத்திய தண்டனையளிக்கலாம்” என்று அந்த அறிக்கையில் மிஷல் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வு எனும் பெயரில் இலங்கையில் இடிக்கப்பட்ட இந்து கோயில் – வைகோ கண்டனம்
போர்க்குற்ற முகாந்திரம் உள்ள நபர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பயணத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள மிஷல், ஜெனரல் ஷவேந்திரா சில்வாவுக்கு, பதவி உயர்வு வழங்கியது மற்றும் ஜெனரல் கமல் குணரத்னேவை பாதுகாப்புத்துறை செயலாளராக நியமித்தது குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு, பிரெஞ்ச் தன்னார்வலர்கள் 17 பேர் கொல்லப்பட்டது மற்றும் 2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் லசாந்தா விக்ரமசிங்கே கொல்லப்பட்டது போன்ற முக்கிய வழக்குகள் தொடர்பான முக்கிய ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகளுக்கு மிஷல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2000, ஏப்ரல் மாதத்தில், நான்கு குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ராணுவ அதிகாரிக்கு, 2020ஆம் ஆண்டு அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பொது மன்னிப்பு வழங்கியதை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிஷல் பஷ்லே, அறிக்கையில் விமர்சித்துள்ளதாக ஏஃஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம், ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே, சில குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று கடந்த வாரம் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு, புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்ற சமயம், தற்போதைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே, இலங்கை பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்தது குறிப்பிட்டத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.