Aran Sei

1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி

டெல்லி எல்லையில் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வரும் விவசாயிகள், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று (26.01.21) டெல்லியில் மிகப்பெரிய டிராக்டர் அணிவகுப்பை நடத்தவுள்ளனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று, விவசாயிகளின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்தால், அவர்களோடு, விவசாயிகள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும், தோல்வியில் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் திட்டமிட்டபடி, குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பை நடத்துவோம் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், காவல்துறை சார்பாக, விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக, டிராக்டர் பேரணிக்கு தடையில்லா சான்றிதழ் அளித்துள்ள காவல்துறையினர், பேரணி தொடர்பாக 37 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டிராக்டர்களுக்கு டீசல் தர மறுக்கும் பங்க்குகள் – விவசாயிகள் பேரணியைத் தடுக்க உ.பி., அரசு சூழச்சி

அவற்றில், பேரணியில் ஐந்தாயிரம் டிராக்டர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், மதியம் தொடங்கும் பேரணியை மாலை 5 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும், சாலையின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் மட்டுமே பேரணி செல்ல வேண்டும், பேரணியை இடையில் நிறுத்தக் கூடாது, பேரணி ஒரே திசையில் மட்டுமே செல்ல வேண்டும் ஆகியவை முக்கிய நிபந்தனைகளாகும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், தடையில்லா சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும், காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

இந்நிலையில், பேரணியில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்று, விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

“காவல்துறையினருடன் தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்பதை தெளிவாக கூறிவிட்டோம். போராடும் விவசாயிகளில், நீங்கள்தான் அந்த ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரத்தில் ஒருவர் என்று தேர்வு செய்ய முடியாது” என்று மஹிலா கிசான் அதிகார் மன்ச் அமைப்பின் தலைவர், கவிதா குருகந்தி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு

சம்யுத் கிசான் மோர்ச் (போராட்டக் குழு) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இந்த பேரணியில் 1.5 லட்சம் டிராக்டர்களும், ஐம்பதாயிரம் இதர வாகனங்களும் கலந்துகொள்ளும் என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிசான் மஸ்தூர் சங்கார்ஷ கமிட்டி, காவல்துறை அனுமதியளித்துள்ள பாதையை தாண்டி, டெல்லி வெளிப்புறச் சுற்று சாலையில், பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று போராட்டக் குழு அவர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தி இந்து கூறுகிறது.

சுமார் 2500 தன்னார்வலர்கள், பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்யும் வகையில், இருபுறமும் கைகோர்த்து நிற்க அவர்களுக்கு மத்தியல் டிராக்டர் பேரணி நடைபெறவுள்ளது. பேரணியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்கு வழிநெடு தண்ணீர், உணவு மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ உதவி வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

பேரணியில். மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில், அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்கள் இடம்பெறவுள்ளதாகவும், பெண் விவசாயிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும், அலங்கார அணிவகுப்பு நடைபெறவுள்ளதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் டிராக்டர் அணிவகுப்பு – அரசுக்கு நிகராக பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

அதேபோல், விவசாயிகள் தங்கள் கோரிக்கை விளக்கும் வகையிலும், இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களை விளக்கும் வகையிலும், அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்கள் அணிவகுப்பில் இடம்பெறவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக் கொடிகளுக்கு அணிவகுப்பில் இடமில்லை என்று அறிவித்துள்ள விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களின் நிலை, உலக வங்கி மற்றும் ஐஎம்ஃஎப்-ன் சுரண்டல் திட்டங்களை விளக்கும் பதாகைகளை ஏந்தி அணிவகுப்பு செல்லும் என்றும் தெரிவித்துள்ளதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்த குடியரசு நாட்டின் குடிமகன்கள் இதுபோன்ற ஒரு பேரணியை, குடியரசு தினத்தன்று நடத்துகிறோம். இந்த பேரணியின் மூலம் நாட்டிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நாங்கள் படும் துன்பத்தை தெரிவிக்க விரும்புகிறோம்” என்று போராட்டக் குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நம்முடைய லட்சியம் டெல்லியை வெற்றி கொள்வதல்ல, மக்களின் மனங்களை வெல்வதே” என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்