Aran Sei

“வன்முறையில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்” – விவசாயிகள் போராட்டத்தின் நேரடி சாட்சி

டந்த செவ்வாய்கிழமை டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தான் நான் முதன்முதலில் ஒரு டிராக்டரில் உட்கார்ந்தேன், இதற்கு முன் உட்கார்ந்ததில்லை. கூடவே. ஹரியானாவின் பதேஹாபாத்தை சேர்ந்த நான்கு இளம் விவசாயிகள் இருந்தது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் தான் கடந்த இரண்டு மாதங்களாக டிக்ரி எல்லையின் 757ம் மெட்ரோ தூண் அருகே, விவசாயிகளுக்காக லங்கார் என்றழைக்கப்படும் கூட்டுசமையலை கவனித்துக் கொண்டிருப்பவர்கள்.

அதில் லக்விந்தரை (அவருக்கு அவரது நண்பர்களிடையே மகிழ்ச்சி என்ற இன்னொரு பெயரும் உண்டு) ஜனவரி முதல் வாரத்தின் ஒரு குளிர்ச்சியான மழைநாளில் நேர்க்காணலுக்காக சந்தித்தேன். டெல்லி மக்களான நாங்கள், தங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என நான் அவரிடம் கேட்ட போது அவர் “தயவு செய்து எங்களது குரலை அரசிடம் கொண்டு சேருங்கள் அது போதும். மழையில் உட்கார்ந்து கொண்டிருப்பதை நாங்கள் யாருமே விரும்பவில்லை, ஆனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்காரத் தயார்” என்றார்.

நேர்க்காணலுக்கு பிறகு தான், தனது இரண்டு வயது மகனுக்கு உடல்நலமில்லாததால் தனது கிராமத்திற்கு திரும்புவதாகவும், ஓரிரு வாரங்களில் டிக்ரி திரும்பியவுடன் தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஜனவரி 24 அன்று திரும்பவும் அழைத்தார்.

“நான் கிராமத்திலிருந்து திரும்பிவிட்டேன், எப்போது வருகிறீர்கள்?”

“நாளை” என்றேன்.

குடியரசு தினத்திற்கு முந்தைய தினமான ஜனவரி 25 அன்று டிக்ரி பரபரப்பாக இருந்தது.

லக்விந்தர் மற்றும் அவரது நண்பர்கள் டெல்லியில் நுழைவது குறித்து ஆர்வமாக காணப்பட்டார்கள்.

லங்காரை பார்த்துக்கொள்ளும் குழுவில் ஒருவரான குல்விந்தரிடம் பேரணிக்கு நீங்கள் தயாரா எனக் கேட்டேன்.

“உண்மையை சொல்ல வேண்டுமானால் பேரணியின் போது ஏற்படப்போகும் சிரமங்களை எதிர்கொள்வதற்காக, எங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களில் நாங்கள் பயிற்சி எடுத்திருக்கிறோம். டெல்லிக்கோ, டெல்லியின் மக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படக்கூடாது, யாருக்கும் எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என்பது தான் நோக்கம், எங்களது டிராக்டர்களில் மூவர்ண கொடி மற்றும் எங்களது விவசாய சங்கக்கொடி இரண்டும் பறக்கும். ஆனால் மூவர்ண கொடி சற்று உயரே பறக்கும்” என்றார்.

“ஒருவேளை காவல்துறை அடித்தால் வாங்கிக்கொள்வோம், ஆனால் மூவர்ணகொடிக்கு எந்தவித சேதமும் ஏற்பட விடமாட்டோம்” என்றார் லக்விந்தர்.

அவரது வார்த்தைகள் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்தது போலிருந்தது.

பேரணியின் போது டிராக்டரில் நானும் பயணிக்கலாமா என்று இருவரிடமும் கேட்டேன், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதுடன், அடுத்த நாள் காலை 8:30 க்குள் லங்காருக்கு வந்துவிடும்படி தெரிவித்தனர்.

அன்று நான் பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களைத் தாண்டி லங்காரை விட்டு வெளியேறிய போது, நிறைய விவசாயிகளிடம் பேரணி குறித்து எப்படி உணர்கிறீர்கள் என கேட்டேன், அனைவரும் அதை எவ்வளவு எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்பதை தெரிவித்ததுடன், நிறைய பேர் சொன்னது இதைத்தான்…

“நாங்கள் டெல்லியை வெற்றிக்கொள்ளப் போவதில்லை, மனங்களை வெற்றிக்கொள்ளப்போகிறோம்”

பிறகு நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது.

ஒரு விவசாயி சொல்ல சொல்ல, நீண்ட வரிசையில் நின்றிருந்த தன்னார்வலர்கள் பின்வரும் உறுதிமொழியை ஏற்றார்கள்

“எது நடந்தாலும் எங்களது கடமையை சிறப்பாக நிறைவேற்றுவோம் என்றும்

நாங்கள் அன்புடனும், சகோதரத்துவத்துடனும் செயலாற்றுவோம் என்றும்

இது எங்களது நாடு, அனைவரும் எமது மக்கள் என்றும்

அமைதியில் தொடங்கிய இந்த இயக்கம், இறுதி வரை அமைதியாக இருக்கும் என்றும்

நாங்கள் சந்திக்கும் அனைத்து மனங்களையும் வெற்றிக்கொள்வோம் என்றும்

நாங்கள் உறுதியேற்கிறோம்

ஜெய்ஹிந்த்”

உறுதிமொழியை வழிநடத்தியவரிடம் இது எதற்காக என்று கேட்டேன். மறுநாள் பேரணியில் கலந்துக்கொள்ளப்போகும் தன்னார்வலர்களுக்கு “நோக்கம் சரியானதாக இருந்தால், வேலை சரியாக இருக்கும்” என்பதை நினைவூட்டுவதற்க்காகத் தான் என்றார்.

உறுதிமொழியின் உள்ளர்த்தத்தை வியந்துகொண்டிருந்த அதேவேளை, நமது பாராளுமன்ற உறுப்பினர்களை ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுக்கு முன்பும் இந்த உறுதிமொழியை எடுக்க வைத்தால் என்ன, என்று நினைத்துக்கொண்டேன்.

மறுநாள் குடியரசு தினத்தன்று தூண் 757 அருகே எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு சென்று விட்டேன், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு டிக்ரி எல்லை ஆண்கள், பெண்கள் மற்றும் டிராக்டர்களால் நிரம்பியிருந்தது. இத்தனை தேசியக்கொடிகளை ஒரேயிடத்தில் நான் இதற்குமுன் கண்டதில்லை.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை நின்றிருந்த டிராக்டர்கள் தடுப்பரண்களை நீக்கியவுடன் ரோதாக் சாலையில் நகர்வதற்கு தயாராக இருந்தன. என்ஜின்களின் உறுமல் சத்தம் விண்ணைப் பிளந்துக்கொண்டிருந்தது.

இவை எல்லாவற்றையும் காணும் ஆர்வத்தில் அருகேயிருந்த சுவர்கள் மற்றும் வீட்டுக்கூரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நின்றிருந்தனர். அப்போது கூட்டத்திலிருந்து ஆரவார சத்தம் கேட்டது. காவலர்கள் தடுப்பரணை நீக்கிவிட்டார்கள் என்பதற்கான சமிக்ஞை அது.

நாங்கள் எங்களது, வெளிர்பச்சை நிற ‘ஜான் டீர்’ டிராக்டரில் தொற்றி ஏறிக்கொண்டோம்

லக்விந்தர் டிராக்டர் வரிசையின் நடுவே இருந்த சிறு இடைவெளியை கண்டுகொண்டு வரிசையில் எங்கள் டிராக்டரை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

டிக்ரி மெட்ரோ நிலையத்திலிருந்து. ரோதாக் சாலையில் நாங்கள் நுழைய நுழைய சுற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்த்துகள் மற்றும் கைதட்டல்கள் விண்ணைப்பிளந்தன. அந்த காட்சியை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

பல டிராக்டர்களில் இசைப்பெட்டி, முழு சப்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.

சுற்றுவட்டாரத்திலிருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவசாயிகளை உற்சாகப்படுத்துவதற்காக வந்திருந்தனர். சிலர் எங்கள் மீது பூ கூட தூவினர். திடீரென டிராக்டர் வரிசையை தாண்டி வேகமாக குதிரைகளில் முன்சென்ற நிஹாங்க் சீக்கிய குழு சீக்கியர்களின் புனித வாசகமான “போலோ சோ நிஹால்” என்று முழக்கமிட, கூட்டம் “சாட் சிரி அகால்” என்று முழங்கியது.

டிராக்டரில் அமர்ந்திருந்த நான் மற்றும் எனது நண்பர்கள், பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் பொழிந்துக் கொண்டிருந்த அன்பு மழையை எண்ணி ரசித்துக்கொண்டிருந்தோம்.

“ஒரு டிராக்டரின் மேலிருந்து உலகம் வித்தியாசமாக தெரிகிறது இல்லையா?” என்று லக்விந்தர் என்னிடம் கேட்டார். நானும் அதை ஆமோதித்தேன். டிராக்டரில் எனக்கு எந்த சிரமமும் இல்லையென்பதை நண்பர்கள் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார்கள். நான் முன்பகுதியில் அமரவேண்டுமென்பதற்காக ஒரு நண்பர் பின்புறமாக நின்று கொள்ள முன்வந்தார்.

டிராக்டர்கள் சீரான நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்தன, மருத்துவ அவசர ஊர்தி செல்லும் அளவுக்கு சாலையில் நிறைய இடம் மீதமிருந்தது. தாங்கள் இந்த பேரணிக்காக பயிற்சி எடுத்துக்கொண்டதாக குல்விந்தர் சொன்னது மிகைப்படுத்தியது அல்ல என்பதை அப்போது உணர்ந்தேன்.

ரோதாக் சாலையில் ஒன்றரை மணிநேர பயணத்திற்கு பிறகு, நண்பர்களின் உபசரிப்பிற்காக நன்றி தெரிவித்த பிறகு, நாங்லோய் மெட்ரோ நிலையம் அருகே நான் இறங்கிக்கொண்டேன். அவர்கள் தொடர்ந்து முன்னேறி செல்ல, நான் சாலையோரம் கூடியிருந்த மக்களிடம் அவர்கள் எதற்காக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறார்களென தெரிந்து கொள்ள பேச்சு கொடுத்தேன்.

பெரும்பாலானவர்களின் பதில்கள் ஒருமித்ததாக இருந்தன.

“ஏனென்றால் இந்த மூன்று சட்டங்களும் அவர்களை அழித்து விடும்”,

“ஏனென்றால் அரசு ஒரு பெருந்தொற்று காலத்தின் மத்தியில் இந்த சட்டங்களை பிறப்பித்துள்ளது”,

“ஏனென்றால் அரசு விவசாயிகளுடன் சட்டங்களைப் பற்றி கலந்தாலோசிப்பது குறித்து சிந்திக்கவில்லை”,

குறிப்பாக டிராக்டர்களில் ஹூக்கா புகைத்துக்கொண்டிருந்த முதியவர்களை மக்களுக்கு பிடித்துவிட்டது. முதியவர்களும் ஆர்வத்துடன் மக்கள், புகைப்படங்கள் எடுக்க ஒத்துக்கொண்டனர். ஒரு முதியவர் மக்கள் கூட்டத்தை மகிழ்ச்சிப்படுத்த டிராக்டரிலேயே நடனமாடினார்.

காற்றெங்கும் நட்புணர்வு கமழ்ந்தது. கிட்டதட்ட ஒரு மணிநேரம் கழித்து எனது அலைபேசியை எடுத்து சமூகவலைதளங்களை பார்த்தபோது தான், நகரில் பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இரண்டு மெட்ரோ நிலையம் தள்ளியிருக்கும் நாங்லோயில் காவல்துறை விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியிருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.

உடனடியாக குல்விந்தரை அலைபேசியில் அழைத்து, அவரும் நண்பர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா எனக்கேட்டேன். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்ததுடன், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படும் காணொளி ஒன்றையும் அனுப்பினார்.

காவல்துறையினர் நகரெங்கும் அமைத்திருந்த தடுப்பரண்களை சிரமப்பட்டு தாண்டி மாலையில் நான் வீடு வந்து சேர்ந்தபோது, தடுப்பரண்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன, போராட்டக்காரர்கள் மீது லத்தியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன, ஒரு விவசாயி இறந்துவிட்டார் என்று வந்த செய்திகள் கவலையளிப்பதாக இருந்தன.

நீண்ட பெருமூச்சுடன் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன், டிராக்டர் பேரணி நன்றாகத்தான் சென்றது. குறைந்தபட்சம் நான் உடனிருந்தவரைக்கும் நன்றாக இருந்தது என்ற முடிவுக்கு தான் வரவேண்டியிருக்கிறது. நான் கண்ணியமான மற்றும் ஒழுக்கமான மனிதர்களுடன் டிராக்டரில் பயணித்திருக்கிறேன். இது தான் பேரணியில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் அனுபவமும் கூட என்று என்னால் உறுதியாக் கூற முடியும்.

மாறாக தேசிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், விவசாயிகள் மீது வீசப்படும் அவதூறுகள் வேதனையளிப்பதாக இருக்கின்றன. நகரின் ஒரு சில பகுதிகளில் நடந்த பிரச்சினைகள் கவலை தரும் செய்தி என்பது உண்மை தான். ஆனால் இதைக்கொண்டு இந்த போராட்ட இயக்கத்தை ஒட்டுமொத்தமாக நாம் எடை போட முடியாது.

நான் எத்தனை முறை எல்லையில் விவசாயிகளை சந்திருப்பேன் என்பது கணக்கில் இல்லை, ஒவ்வொரு முறையும் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ எந்த பிரச்சினையும் ஏற்படாமலிருக்க, குடியரசு தினத்தன்று விவசாயிகள் வரையறுக்கப்பட்ட பாதைகளில் தான் செல்வார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்கள்.

உண்மை என்னெவென்றால் நாட்டின் குறிப்பிட்ட பிறரைப்போன்று, லட்சக்கணக்கான விவசாயிகள் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட பிறர் கடந்தகாலத்தில் சொத்துகளுக்கு தீயிட்டு, கொள்ளையடித்து, கலவரம் செய்ததைப் போல இவர்கள் செய்யவில்லை, புராதான சின்னங்களை சேதப்படுத்தவில்லை, அவர்கள் அமைதியாக டிராக்டர்களில் பயணித்தார்கள்.

குறிப்பிட்ட சிலர்தான் வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள், அவர்கள் நிச்சயம் வெளியிலிருந்து வந்தவர்களாக, தூண்டி விடப்பட்டவர்களாகத் தான் இருக்க முடியும் அல்லது அரசின் மெத்தனப்போக்கால் பொறுமையிழந்தவர்களாகவும் இருக்கலாம், குறைந்தபட்சம் இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒரு விவசாயி இறந்திருப்பது துயரமானது, வன்முறை நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடியது.

அது விவசாயிகளிடம் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பறித்துக் கொள்ள முயலும் மூன்று வேளாண் சட்ட வன்முறையாகட்டும்,

இரண்டு மாதங்களாக டெல்லியின் உறை குளிரில் 150 பேர் இதுவரை இறந்தும் கூட விவசாயிகளை இன்னமும் போராட வைத்துக்கொண்டிருக்கும் வன்முறையாகட்டும்,

முதன்முதலில் டெல்லியில் விவசாயிகள் நுழைய முற்பட்டபோது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீரங்கி அல்லது இம்முறை நிகழ்த்தப்பட்ட வன்முறையாகட்டும்,

அல்லது ஒவ்வொருநாளும் ஊடகங்கள் அவர்களை காலிஸ்தானிகள் மற்றும் தீவிரவாதிகள் என்றழைக்கும் வன்முறையாகட்டும்,

விவசாயிகள் மீது வன்முறை உடல்ரீதியாகவும், சொற்கள் வாயிலாகவும் லாவகமாக திணிக்கப்பட்டது என்பதே உண்மை.

“நகரின் முக்கியப்பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள்” (அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?)

“செங்கோட்டையில் ஏறிவிட்டார்கள்” என்றெல்லாம் விவசாயிகளை திட்டுவதற்கு முன் நகர்ப்புற இந்தியர்களான நாம் இந்த நாளைத் தாண்டி கடந்த சில மாதங்களாக, வருடங்களாக, பத்தாண்டுகளாக விவசாயிகள் சந்தித்த துயரங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்போது தான் ஜனவரி 26, 2021 அன்று டெல்லியில் நடந்த சம்பவங்கள் குறித்த ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வர முடியும்.

கட்டுரையாளர் ரோஹித் குமார், பள்ளி குழந்தைகளுக்கு, வளர் பருவ பிரச்சனைகள் தொடர்பாக, பயிற்றுவிக்கும் மனோதத்துவ நிபுணர். அவரை தொடர்புகொள்ள: [email protected].

(www.thewire.in இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

“வன்முறையில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்” – விவசாயிகள் போராட்டத்தின் நேரடி சாட்சி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்