திருமணம் ஆகாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகி 23 வாரங்கள் முடிவடைந்த நிலையில், அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
25 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் விருப்பத்தின் அடிப்படையில் உடலுறவு வைத்துக்கொண்டுதான் விளைவாக அவருக்கு கரு உருவாகி உள்ளது. இந்நிலையில் அவரது ஆண் நண்பர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்ட நிலையில், தனது 23 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பெண் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கருக்கலைப்பு உரிமைக்கான சட்டம் – அர்ஜென்டினாவில் நிறைவேற்றம்
இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
அந்த மனுவில் “திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெறுவது எனக்கு உளவியல் வேதனையையும் சமூக களங்கத்தையும் ஏற்படுத்தும். மேலும் நான் ஒரு தாயாக இருக்கும் அளவிற்கு மனதளவில் தயாராக இல்லை” என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
“மனுதாரர் திருமணமாகாத பெண்ணாகவும், விருப்பத்துடன் உடலுறவு வைத்து கொண்டு கர்ப்பம் தயாரித்துள்ளார். மருத்துவ கருக்கலைப்பு விதிகள் 2003 இன் கீழ் எந்த உட்பிரிவுகளிலும் மேற்கண்ட அம்சங்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை” என்று டெல்லி உயர்நீதிமன்றம் ஜூலை 15 தெரிவித்துள்ளது.
“மருத்துவ கருக்கலைப்பு விதிகள், 2003 இன் விதி 3 பி பிரிவில் திருமணமாகாத பெண்கள் சேர்க்கப்படவில்லை. இதனால் உயர்நீதிமன்றம் தனது உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தும் 226 வது பிரிவின் கீழ் கூட அரசியலமைப்பு சட்ட விதிகளை மீற முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆகவே திருமணம் ஆகாத பெண்ணின் கருவை 20 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் கலைக்க அனுமதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
24 வார கருவை கலைப்பதற்கு அனுமதி அளிக்கும் சட்ட விதிகளிலிருந்து திருமணம் ஆகாத பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆகவே இக்குழந்தையை கலைக்க அனுமதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதம் தேசபக்தி பெயரால் பெண்கள் உரிமை மறுப்பு – போலந்தில் பரவும் போராட்டம்
இதனையடுத்து, திருமணமாகாத பெண்கள் தங்களது 24 வார வரை கருவை மருத்துவ கருக்கலைப்புக்கு உட்படுத்தப்படுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவது பாரபட்சமானது என்று தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் கருத்திற்கு ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் விருப்பமில்லாத அக்குழந்தை வளர்க்கும்படி மனுதாரரை நாங்கள் வற்புறுத்தவில்லை. அவர் ஒரு நல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். அந்த குழந்தையை பிரசவித்த பின்பு அக்குழந்தையை அவர் எங்கு வேண்டுமானாலும் விட்டுப் போகலாம். குழந்தையில்லாத பலர், ஓர் குழந்தையை தத்தெடுப்பதற்காக காத்திருக்கின்றனர் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எங்களது பரிந்துரையை மனுதாரர் நிராகரித்தாரெனில், இந்த மனு மீதான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து தொடர்பாக Development consultant and researcher கீதா நாராயணன் அவர்களிடம் பேசினோம், “கருவை கலைக்க விரும்பும் பெண்ணை குற்றவாளியாக்குவது தவறு. கருக்கலைப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு இந்த அனைத்து பெண்களுக்கும் அத்தகைய உரிமைகளை வழங்குவதே சரியானது. கருவை கலைக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அதற்காக அனைத்து பெண்களும் தங்களது கருவை கலைத்து விடுவார்கள் என்று அர்த்தம் கிடையாது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையை அடையவில்லை என்று நினைப்பவர்கள், முடிந்தவரை கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது நல்லது. அதனால் பாலியல் கல்வியை நாம் பள்ளிக்கல்வியிலிருந்தே பெண்களுக்கும் முக்கியமாக ஆண்களுக்கும் வழங்க வேண்டும். ஒரு ஆண் எளிதில் ஒரு உறவை முறித்துக் கொண்டு வெளியில் செல்வது எளிது. ஆனால் பெண் தனக்கு உருவான குழந்தையை வளர்ப்பது என்று குழந்தையை சுற்றியே பெண்ணின் வாழ்க்கை முடிந்து விடும். அவளால் அதன் பிறகு வேறு ஒரு உறவை ஈடுபடுத்தி கொள்வதும் கடினம்” என்று கூறினார்.
“ஒரு பெண் தனது பழைய வாழ்வை மறந்து புதிய வாழ்வை தொடங்குவதில் குழந்தை எப்போதுமே ஒரு தடைதான். அந்நிலையில் கருவை கொள்வது உயிரை கொள்வது என்று பேசாமல், அந்த பெண்ணிற்கு கருவை கலைக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த பெண்ணால் தனது வாழ்க்கையை மீண்டும் புதிதாக துவங்க முடியும். கருக்கலைப்பு செய்வது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. அதனால் அந்த பெண் கடுமையாக பாதிக்கப்படுவாள். அத்தகைய நிலையை தடுக்க பாலியல் கல்வி அவசியம். கருத்தடை சாதனைகளை பயன்படுத்துவது குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள்: ஸ்காட்லாந்தை ஏன் பின்பற்ற வேண்டும்? – சினேகா பெல்சின்
நமது சமூகத்தில், குழந்தையை வைத்து கொண்டு ஒரு ஆண் இன்னொரு திருமணம் செய்து கொள்வது எளிது. ஆனால் குழந்தையை வைத்துள்ள பெண்கள் இன்னொரு திருமணம் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஆகையால் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்வதற்கான அடிப்படை உரிமையை வழங்கி அதற்கு தகுந்த வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என்று கீதா நாராயணன் கூறினார்.
இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம் என்ன சொல்கிறது:
இந்தியாவில் இந்திய குற்றவியல் சட்டம் ஐபிசி 312-ன் படி, ஒரு பெண்ணின் உயிரைக் காக்கும் காரணத்திற்க்காக செய்யப்படும் கருக்கலைப்பை தவிர பிற கருக்கலைப்புகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றமாகும். இது சம்பந்தமாக 1971 ஆம் ஆண்டு கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தை இந்திய அரசு உருவாக்கியது.
அச்சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மருத்துவக் காரணங்களுக்காகக் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின்றி ஒரு பெண்ணால் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியாது. இந்த சட்டத்தில் 2002-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அறுவை சிகிச்சையின்றி கருக்கலைப்புக்கு உதவும் மாத்திரைகள் மூலமும் கருக்கலைப்பு செய்யலாம் எனும் ஷரத்து அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் கருவுறுதல் விகிதம் கடும் சரிவு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்
2002 ஆம் ஆண்டிற்கு பிறகு 2003 மற்றும் 2021 ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மருத்துவரின் பரிந்துரையின்படி 20 வாரங்கள் வரை உள்ள கருவை கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்யலாம். பாலியல் வன்முறையால் கருவுற்றவர்கள் குடும்பத்தில் உள்ள ரத்த சொந்தங்களால் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டு கருவுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று இந்த சட்டத் திருத்தம் தெரிவித்துள்ளது.
மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், கருப்பைக்குள் இருக்கும் சிசு பிறவி குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டால் கர்ப்பத்தின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்துகொள்ள ஏதுவாக இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.