Aran Sei

மக்களை நேசித்த மாபெரும் விளையாட்டு வீரன் மரடோனாவுக்கு அஞ்சலி

லகின் மிகச் சிறந்த கால்பந்து வீரரான அர்ஜெண்டினாவின் டியெகோ மரடோனா காலமானார்.

நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில், ப்யூனோஸ் ஏர்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில், மூளையில் இருந்த இரத்த உறைவை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட மரடோனா, நேற்று, அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மறைந்தார் மரடோனா – ரசிகர்களின் நினைவில் வாழ்கிறார்!

கால்பந்து உலகின் நாயகனான மரடோனா, அக்டோபர் 30, 1960 அன்று ப்யூனோஸ் ஏர்ஸில், வில்லா ஃபியோரிட்டோ எனும் சேரிப்பகுதியில் பிறந்தார். சிறு வயதிலேயே அவருக்கு இருக்கும் திறமை பலராலும் அடையாளம் காணப்பட்டது. அந்தச் சிறுவன் பந்தை சுலபமாகக் கையாண்டு, களத்தில் இருந்த மற்றவருக்கு வித்தை காட்டியதை அந்த ஊரே வேடிக்கை பார்த்தது. தன்னுடைய பதினாறு வயதிற்கு முன்னரே, பல கால்பந்து கிளப்புகளுக்கு விளையாடத் தொடங்கிய மரடோனா, பிறகு சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் ராஜாவாக வலம் வரத் தொடங்கினார். 1986-ம் ஆண்டு அர்ஜென்டினாவைக் கால்பந்து உலகக் கோப்பையை வெல்ல வைத்ததே மரனோடா என்றால் அது மிகையாகாது.

கால்பந்து களத்தில் இருந்த ஆக்ரோஷமான, சுறுசுறுப்பான மரடோனவை மக்களுக்கு உடனேயே பிடித்துப் போனது. போர்களை வென்ற தளபதிகளுக்குக் கொடுப்பது போல ஒரு அந்தஸ்தும் மரியாதையும் மரடோனாவிற்குக் கொடுக்கப்பட்டது. “கால்பந்து வீரர்களிலேயே சிறந்தவர் மரடோனா என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. கடவுளால் செய்ய முடியுமா எனச் சந்தேதிக்கப்படுபவற்றை மரடோனா செய்வதை நான் பார்த்தேன்” என பிரேசில் கால்பந்தாட்ட வீரர் ஸீகோ 2005-ம் ஆண்டு மரடோனவைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லியிருந்தார்.

பாமர மக்களுக்கு மத்தியில் பிறந்து, வளர்ந்த மரடோனாவின் பேச்சுத் தொனி, பலரும் அவரை நேசித்ததற்குக் காரணமாக இருந்தது. வெற்றிகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் கடந்து அவர் வாழ்விலும் மேடு பள்ளங்கள் வரவே செய்தன. மரடோனா அவருடைய வாழ்க்கைமுறை, உறவுகள், அரசியல் தேர்வுகள் எனப் பல காரணங்களுக்காக சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.

சே குவேராவின் படத்தைக் கையிலும், ஃபிடெல் காஸ்ட்ரோவின் படத்தைக் கால்களிலும் பச்சை குத்தியிருந்த மரடோனா, தன் அரசியல் மக்களுக்கானது என்பதில் உறுதியாக இருந்தார். ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கும் மரடோனாவுக்கும் இடையே ஓர் ஆழமான உறவும் இருந்தது. உலகக் கோப்பை கால்பந்து வெற்றிக்குப் பிறகு, கியூபாவிற்குச் சென்று ஃபிடலைச் சந்தித்தார் மரடோனா. போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த மரடோனா, அதிலிருந்து மீள, க்யூபாவின் மருத்துவமனையைப் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார் ஃபிடெல். நான்கு வருடங்கள் ஹவானாவில் தங்கியிருந்து, அங்கிருந்த தலை சிறந்த மருத்துவர்களின் உதவியோடு போதை பழக்கத்தில் இருந்து மீண்டார் மரடோனா.

இந்த இடைப்பட்ட காலத்தில், மரடோனா மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த ஃபிடெல் காஸ்ட்ரோவைத் தன்னுடைய அப்பாவாக நினைப்பதாகப் பல இடங்களில் மரடோனா சொல்லியிருக்கிறார்.

ஃபிடெலின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைப் பின்பற்றிய மரடோனா, அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சித்துக்கொண்டே இருந்தார். ஜார்ஜ் புஷ் அரசை வெகுவாக விமர்சித்த மரடோனா, பராக் ஒபாமா மீதும், அவர் அரசின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். கியூபாவின் அரசியல் கொள்கைகளை மதித்த மரடோனா, மக்கள் புரட்சியை உண்மையாக நேசித்தார். அதைப் போன்ற கொள்கைகள் கொண்ட லத்தீன் அமெரிக்க அரசுகளுக்கு ஒரு போர் வீரராகவே செயல்பட்டார்.

2005-ம் ஆண்டு, ஹ்யூகோ சாவேஸைச் சந்திக்க வெனிஸ்யூலா சென்ற மரடோனா, உடனேயே அவரோடு நட்பாகிவிட்டார். “நான் ஒரு நல்ல மனிதனைச் சந்திக்க இங்கே வந்தேன். ஆனால், ஒரு மாமனிதனைச் சந்தித்திருக்கிறேன்” என அந்தச் சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார். சாவெஸ் லத்தீன் அமெரிக்கா எப்படி யோசிக்கிறது என்பதையே மாற்றிய தலைவர் எனப் பாராட்டியிருக்கிறார். “நான் சாவேஸை நம்புகிறேன். சாவேஸ் என்ன செய்தாலும், ஃபிடெல் என்ன செய்தாலும், எனக்கு அதுதான் சிறந்த ஆட்சியாக இருக்கும்” என்றும் சொல்லியிருக்கிறார். சாவேஸின் மரணத்திற்குப் பிறகு, நிகோலஸ் மதுரோ தலைமையில் நடந்த பொலிவேரியன் புரட்சியை முழுமையாக ஆதரித்தார்.

2013-ம் ஆண்டு சாவேஸின் கல்லறைக்குச் சென்ற மரடோனா, சோசலிச ஆட்சிக்காக மக்கள் மதுரோவைப் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மரடோனாவின் அரசியல் உரைகளில் எல்லாம் சே குவேரா எப்போதுமே இடம் பெற்றிருந்தது உண்டு. சே, சொர்க்கத்தில் இருந்து வழிநடத்துவதாகவும், ஃபிடெல் இறந்தால், அவர் சே குவேராவுடனும், சாவேஸுடனும் அங்கே இணைந்து கொள்வார் என்றும் சொல்லியிருக்கிறார்.

மரடோனாவின் வாழ்க்கைமுறை, போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டிருந்த அவரை மீண்டும் அப்பழக்கத்திற்குள் தள்ளியது. இரண்டு முறை மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் இதற்கென அனுமதிக்கப்பட்டார்.

மரடோனாவின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த செர்பிய இயக்குநர் எமிர் கஸ்டுரிகா, “ யார் இந்த மனிதர்? கால்பந்து வித்தைக்காரன், கொக்கைன் பழக்கத்தைத் தூக்கி எறிந்த சர்வதேசக் கால்பந்தாட்டக்காரன், பார்ப்பதற்கு ஃபல்ஸ்டாஃப் போலவும், நூடுல்ஸைப் போல பலவீனமாகவும் இருக்கும் இவன் யார்? என நான் என்னைக் கேட்டதுண்டு. ஆண்டி வார்ஹோல் உயிரோடிருந்தால், நிச்சயமாக மரடோனாவை மர்லின் மான்ரோவிற்கும் மாவோ சே-துங்கிற்கும் அருகில்தான் வைத்திருப்பார். கால்பந்தாட்டக்காரர் இல்லை என்றால், நிச்சயம் புரட்சிப் போராளியாகவே இருந்திருப்பார்” என மரடோனாவைப் பற்றிச் சொல்கிறார்.

கால்பந்தாட்டக்காரராகவும் போராளியாகவும் பலருக்கும் நம்பிக்கையளித்த மாபெரும் மனிதன் மரடோனாவிற்கு அஞ்சலிகள்.

மக்களை நேசித்த மாபெரும் விளையாட்டு வீரன் மரடோனாவுக்கு அஞ்சலி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்