Aran Sei

கற்கை நன்றே காமம் – குறுநகை

காமம் என்ற சொல் வழக்கு பொதுப்படையான வெளிகளில் வழக்கிழந்ததாக உள்ளது. காமமும் காமம் சார்ந்த சொல்நிலைகளும் நான்கு சுவர்களுக்குள்ளான நாகரீகமாக பார்க்கப்படுகின்றது. காமம் இல்லாமல் போனால் உயிர் உற்பத்தி நின்றுவிடும். காம செயல்பாடுகள் இல்லாமல் வானத்திலிருந்து குதித்த குழந்தைகள் போல சில மனிதர்கள் பொது வெளிகளில் பகிரப்படும் காம சிந்தனைகளை முகம் சுழித்தவாறு அணுகுகின்றனர். ஆனால் உள்ளுக்குள் வக்கிரம் நிறைந்த உளவியலோடே காமத்ததை அணுகி கிளர்ச்சி அடைந்து கொள்கின்றனர். சமூகத்தால் எந்தவொறு இயற்கை செயல்பாடு புறக்கணிக்கப்படுகின்றதோ அச்செயல்பாடு சமூகத்தின் பெருங்குற்றமாக மாறும். ஆரோக்கியமான காமச் சிந்தனைகள் புறக்கணிக்கப்படுவதால் பாலியல் சுரண்டல்களும், வக்கிரங்களும் பொது வெளிகளில் சாதாரணமாகிவிட்டன. காதல் என்ற சொல்லே மிகக் கொடூரமான சொல்லாக அணுகப்படும் காலத்தில் காமம் காதலிலிருந்து மிகவும் அந்நியப்படுத்தப்பட்டுள்ளது. காமத்தை விவாதிப்பது காமம் என்ற சொல்லை எடுத்தாள்வது காம உணர்வுகளை பொது வெளிகளில் பகிர்வது தழிழர் பண்பாட்டுக்குரியதல்ல என்ற கருத்தும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காதல் வாழ்வியலைக்குறிக்க காமம் என்ற சொல்லே அதிகமுறை எடுத்தாளப்பட்டுள்ளது என்பதிலிருந்தே தமிழர்களின் பண்பாடு தொடங்கிவிடுகின்றது. வள்ளுவன் வகுத்த காமத்துப்பாலைக்கூட இன்பத்துப்பால் என்று குறிப்பிடுவதே நாகரீகமாக பார்க்கப்படுகின்றது.

காதல் வாழ்க்கை முறையானது மனிதர்களிடத்தில் காமம், ஈர்ப்பு, பிணைப்பு என்னும் மூன்று நிலைகளில் ஏற்பட்டு உறவுநிலையாகின்றது. காமத்தை பற்றி மட்டும் இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நம்மில் பொதுவாக பலர் காமத்தை நன்கு அனுபவித்து இன்புற்றாலும், விரும்பினாலும்; காமத்தை முழுமையாகக் கெண்டாடக்கூடிய உளவியலை வெளிப்படையாகக் கொண்டிருக்க மாட்டோம். நிறைகுறைகளை கடந்த அனுபவங்கள் பொதுவெளிக்கு வராமல் பார்த்துக்கொள்வோம். ஆனால் அந்தக் காமம் மிகவும் சாதாரணமான ஒன்று. தழையுணவை மென்று தின்ற யானைக்கு இயற்கையாகவே ஏற்படுகின்ற மதத்தினைப் போல் கண்டவுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோரைக் காணின் காமமும் இயற்கையிலேயே தோன்றும் தன்மை கொண்டது என்பதனை,

 காமம் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

கருத்தலுந் தணிதலும் இன்றே யானை

குளகுமென் றாள்மதம் போலப்

பாணியும் உடைத்து காணுநர்ப் பெறினே

 

என்ற குறந்தொகை செய்யுள் பதிவு செய்துள்ளது. ஆனால் நாம் இன்னும் காமத்தை குற்றத்தை போல நோய்வாய்ப்பட்ட சிந்தனையாகவே காட்டி வருகின்றோம்.

உடல் நலம் மற்றும் சமூக நலம் சீராக இருக்கின்றபொழுது ஏற்படுகின்ற காதலில் காதலர்கள் துய்க்கின்ற காம இன்பத்தினை விடவும் சிறந்ததொரு இன்பம் இவ்வுலகில் இல்லை. உண்டபொழுது மட்டுமே மகிழ்ச்சிதரும் கள்ளைவிட நினைக்கும் பொழுதே இன்பம் தரும் காமம் இனிதென்று

      உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

            கள்ளினும் காமம் இனிது

இக்குறள் குறிப்பிடுகின்றது. இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வரைமுறைகளுக்கு அப்பாட்பட்ட காமத்தை இரண்டு வழிகளில் புரிந்து கொள்ளலாம். அறிவியல் விளக்கங்களையும் மானுட அனுவங்களையும் கொண்டு காமத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடியும்.

டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் காம நிலையைத் தூண்டுகின்ற ஹார்மோன்களாகும். இவற்றுள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆண்களின் உடலில் அதிக அளவில் இடம்பெற்றிருக்கும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் சரிவிகித சுரப்பை அடிப்படையாகக் கொண்டே  எடை மேலாண்மை, எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியம் அமையும். பொதுவாகவே 50 வயதிற்கு மேல் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பு குறைந்து பாலியல் நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள் ஏற்படும். இம்மாற்றத்தினை மருத்துவத்தில் ஆண்டரோபாஸ் என்று குறிப்பிடுவர். டெஸ்டோஸ்டிரோனின் சரிவிகித சுரப்பே ஆண்களின் கட்டுக்கோப்பான உடலைப் பேணுகின்றது. மேலும் டெஸ்டோஸ்டிரோனின் சீரான நிலை ஆண்களின் மன அழுத்தம் மற்றும் உடற் சோர்வினைத் தணிக்கும் தன்மை கொண்டது.

ஈஸ்ட்ரோஜன் பெண்களின் உடலில் அதிகளவில் இடம்பெறும் ஹார்மோன் ஆகும். வலிமையான எலும்பு, ஆரோக்கியமான இதயம், இளமைப்பொலிவு போன்றவற்றிற்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பே அடித்தளமாக அமைகின்றது. மாதவிடாய் சூழற்சிக்கு காரணமாய் அமையும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு பெண்களுக்கு இயற்கை  வழங்கிய கொடையாகும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைகின்ற பொழுது பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) ஏற்படுகின்றது. மேலும் பெண்களின் காம இன்பத் திறவுகோலாக ஈஸ்ட்ரோஜன் செயல்படுகின்றது. இவ்விரண்டு ஹார்மோன்களே ஆரொக்கியமான காம இன்பத்திற்கு முதன்மைக் காரணிகளாகும்.

காதலிற்குரியவர்களைக் காணும் பொழுது டெஸ்டோஸ்டிரோன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதனால் புணர்ச்சிக்குரிய உறுப்புகளான புணர்புழை, ஆண்குறி போன்ற உறுப்புகள் கிளர்ச்சி அடைந்து காம இன்பமானது உயிர்களுக்கிடையே பல்வேறு விதங்களில் பல்வேறு கோணங்களில் நுகரப்படுகின்றது. காமம் பல்வேறு பயன்களை மனிதர்களுக்குத் தருகின்றது.

காம இன்பம் மன அழுத்தநிவாரணியாக செயல்பட்டு மன இறுக்கத்தினை தளர்க்க வல்லது. காம இன்பம் இதயத்தினை பலப்படுத்தி வாழ்நாளை நீட்டிக்க வல்லது. இருதய  பாதுகாப்பில் காம உறவு பெரும் பங்காற்றுகின்றது. நலமான மற்றும் அமைதியான வாழ்வினை ஏற்படுத்தக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியினை பலப்படுத்தக்கூடியது.

இதன் மூலம் காதலர்களுக்கு ஆரோக்கியமான உடல்நிலை ஏற்படுகின்றது. வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. ப்ரோஸ்டேட் புற்றுநோயிடமிருந்து உடலினைப் பேணும் திறன் கொண்டது. காதலர்களிடத்தே சீரான தூக்கம், இளமையான மற்றும் பிரகாசமான தோற்றம்  போன்றவை நிலைபெற்றிருக்க உதவுகின்றது. நலமான மனநிலையைத் தரவல்லது. மேலும் பல நலன்களை காம நிலை மனிதர்களுக்கு வழங்குகின்றது.

காமம் அற்ற அன்பே புனிதமானது; காமம் கசந்தபின் வருகின்ற அன்பே பரிபூரணமானது போன்ற மூடநம்பிக்கைகளலெல்லாம் இன்றளவும் நிலவுகின்றன. காமம் கசந்தநிலை ஒருவரிற்கு உண்டாகின்றதெனில் அவர் உடலில் ஏதோ குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள முடியும். உதாரணத்திற்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றவர்களுக்கு பாலியல் உறவில் ஈடுபாடின்மை உண்டாகின்றது. மேலும் காமமற்ற அன்பு என்பது காதலுக்கு அப்பாற்பட்ட நட்பு, சகோதர உறவு போன்ற உறவு நிலைகளிலேயே சாத்தியமாகும். காதலுக்கு அப்பாற்பட்ட உறவுகளின் தன்மையை காதல் உறவுக்குள் ஒப்பிட்டுப் பார்ப்பதும் தவறான அணுகுமுறைகளாகும்.

காமம் தோன்றும் நிலைகளை மானுட அனுபவங்களைக் கொண்டு புரிந்துகொள்ள முற்படுவதன் மூலம் காமத்தின் வேர்களை உணரமுடியும். மானுட வாழ்வியலை சமூக அரசியல் சூழல்களின் தாக்கங்களுடன் பதிவு செய்திருக்கின்ற  இலக்கியங்களை சற்று அறிவியலாடு பொருத்திப் பார்த்து சீர்திருத்தி காமத்தின் மானுட அனுபவங்களை அறியலாம்.

காமம் மூன்று நிலைகளில் தோன்றுவதாக பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவை சமகாலத்தோடும் பொருந்தக்கூடிய அளவிற்கு நேர்த்தியாக உள்ளன.

  • கைக்கிளை (ஒருதலைக் காமம்)
  • ஐந்தினை (அன்புடைக் காமம்)
  • பெருந்திணை (வரையறைகளற்ற காமம்)

என்ற மூன்று நிலைகளில் காமம் மனிதர்களிடத்தில் ஏற்படுகின்றது.

கைக்கிளை என்பது ஒருதலையாக ஏற்படுகின்ற வேட்கையாகும். ஓன் சைடு லவ் என்று இன்று இளைஞர்கள் வழங்கக் கூடிய காதலை ஒத்தது கைக்கிளை ஆகும்.

காமம் நுகர்வதற்குரிய நபரை சந்திக்கின்ற பொழுது வேட்கை ஏற்பட்டு தனக்குள் ஏற்பட்ட விருப்பினை தனக்குத்தானே கூறிக்கொள்வது கைக்கிளையாகும் என்பதை அகப்பொருள் இலக்கண நூலான நம்பி அகப்பொருள்,

                           காமம் சான்ற இளமையேன் வயின்

                             குறிப்பறிகாறும் குறுகாது நின்று

                             குறிப்படு நெஞ்சோடு கூறல் ஆகும்

என்று குறிப்பிடுகின்றது. ஒருதலையாக ஏற்படுகின்ற கைக்கிளை காமமானது பாலின பாகுபாடுகளின்றி ஆண்களுக்குள்ளும் தோன்றும். பெண்களுக்குள்ளும் தோன்றும். இவற்றை முறையே ஆண்பாற்கைக்கிளை என்றும் பெண்பாற்கைக்கிளையென்றும் அக இலக்கிய ஆவணங்கள் வகைப்படுத்துகின்றன. ஒருதலையாக உண்டாகின்ற காமம் வெளிப்பட்டு இருதலையாக பரிணமிக்கின்ற பொழுது காமம் அடுத்த கட்டத்தை அடையும். அடுத்த கட்ட நிலைகள் ஐந்திணை என்று வழங்கப்படுகின்றது. பள்ளிப் பருவங்களில் நாமெல்லாம் படித்து மணனம் செய்துள்ள குறிஞ்சி – பாலை திணைகளின் உரிப்பொருள்களே காமத்தின் படிநிலைகளாகும்.

  1. புணர்தலும் புணர்தல் நிமித்தமும். காம வயப்பட்ட காதலர்களுக்குள் புணர்ச்சியானது உள்ளப்புணர்ச்சியாகவும் மெய்யுறு புணர்ச்சியாகவும் இரண்டு வகைகளில் தொடரும்.
  2. இருத்தலும் இருத்தல் நிமித்தமும். ஒருவருக்கொருவர் அனைத்துவிதமான சூழல்களிலும் ஒருவரை ஒருவர் ஆற்றி இருக்கும் நிலையாகும். காத்திருத்தல், காத்திருந்த பெழுதுகளிலும் காமம் குறையாதிருத்தல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். லாங் டிஸ்டன்ஸ் ரிலேசன்சிப்பில் இருப்பவர்களுக்கு காமத்தின் இருத்தல் பொருந்தும்.
  3. ஊடலும் ஊடல் நிமித்தமும். ஊடல் இல்லாத காமம் என்பது ஒருவகையில் முழுமை பெறாதக் காதலாகவே இருக்கும். காதலர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வாய்ப்புகள் மிகமிக குறைவு. காதலர்களுக்குள் கருத்து முரண் இல்லாமல் இருக்கும் சூழல் என்பது ஒடுக்குமுறை உறவுகளிலேயே வாய்க்கப்பெறும். ஊடல் காம இன்பத்தை வலுப்படுத்தக் கூடியது. ஊடல் காமத்திற்கு பேரின்பம் என்றும் அப்பேரின்பம் ஊடலிற்குப் பின்னான கூடலால் ஏற்படும் என்றும் கீழ்கண்ட திருக்குறள்

கூடல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்                         

என்று குறிப்பிடுகின்றது. பொதுவாக காதலர்களுக்குள் சண்டை ஏற்படுகின்ற பொழுது சண்டையை இடைநிறுத்தி அரவணைத்துக்கொண்டு அடுத்தடுத்த இன்பங்களை அடையும் கலையைக் காதலர்கள் பழகிக்கொள்ள வேண்டும். காமத்தின் பொழுதுகளில் பூனைகளை போல பிராண்டிக் கொள்வது, நகக்கீரல்களை அடையாளமாக்குவது என அன்புமிகுதியில் ஏற்படும் சிறு காயங்களை காமம் ஏற்கும். சண்டை என்பது பாலினப் பாகுபாட்டுடன் கூடிய வன்முறையாக வளர்வதையெல்லாம் காமம் ஒருபோதும் அனுமதிக்காது.

  1. இரங்கலும் இரங்கல் நிமித்தமும். காமத்தில் சில சமங்களில் இரங்குதலும் (இரங்கல் – வருந்துதல்) வேண்டும்.
  2. பிரிதலும் பிரிதல் நிமித்தமும். பிரிதல் என்பதும் நியாயமான செய்கை ஆகும். பிரிவு என்பது நிரந்தரத்தன்மையிலானது மட்டுமல்ல. நீண்ட கால மற்றும் குறுகிய கால இடைவெளிகளையும் பிரிவு உள்ளடக்கியது. பிரிவு விலகலுக்கானது. சில சமயங்களில் புரிதலுக்கானதும்கூட. ஆதிக்கங்களையும் சுரண்டல்களையும் மையப்படுத்தி அறமற்ற பாதையை காமம் தீர்மானிக்கின்ற வேளைகளில் பிரிவு நியாயமானது.

மேற்குறிப்பிட்ட ஐந்து நிலைகளில் காமம் நுகரப்படுவது ஐந்தினை காமமாகும். எவரும் அறியா வண்ணம் காமம் கொள்வது களவென்றும், பின்னர் ஊருக்கு அறிவுருத்தி வெளிப்படையாக இல்லறத்துடன் காமம் கொள்வது கற்பென்றும் பகுக்கப்பட்டு காமத்தின் ஐந்து நிலைகளையும் காதலர்கள் அனுபவிப்பதை பண்டைய இலக்கியங்கள் நமக்கு கற்பிக்கின்றன.

கைக்கிளை மற்றும் ஐந்திணையிலிருந்து சற்று மாறுபட்ட காமம் பெருந்திணையாகும். காமம் என்பதற்கு நாம் வைத்திருக்கின்ற அல்லது வகுத்திருக்கின்ற சூத்திரங்களுக்கு அப்பாற்பட்ட நிலை பெருந்திணையாகும். பொது உளவியலில் நாம் அறிந்திருக்காத அல்லது அங்கீகரிக்கத காமம் பெருந்திணையாகும். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்றோர்களை காம வாழ்வியலுக்கு வெளியில் வைத்தே வரையறைகளைத் தீர்மானிக்கும் வழக்கம் பெரும்பாலான சமூகங்களுக்கு உண்டு.  இதுதான் காதல், இவர்களுக்குள் மட்டும் காதல் மலர வேண்டும் என்ற செல்நெறிகளுக்குள் இல்லாமல் காதல்வயப்படுகின்ற மனிதர்களுக்குள் ஏற்படுகின்ற காமத்தை பெருந்திணை என்றே குறிப்பிடலாம்.

 

உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு

மனித வாழ்வியலின் தொடக்கமும் முடிவும் காமத்தால் நிறைந்தது. காமத்தை ஒளிவுமறைவுகளற்று கொண்டாடப் பழக முயற்சிக்கையில் காமம் இயல்பானதாகக்கூடும். அறிவியல் சிந்தனைகளின்படியும் பண்டைய மானுட அனுபவத்தின்படியும் காமம் இயல்பானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான காம நிலையை காதலர்கள் இறுதிநாள் வரையிலும் பின்பற்றி மகிழ்ந்திட வேண்டும்.

கற்கை நன்றே காமம் – குறுநகை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்