Aran Sei

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் “இயல்பு நிலை” – காதில் பூ சுற்றிக் கொண்டு புறப்பட்ட வெளிநாட்டு தூதர்கள்

2019, ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள “குறிப்பிடத்தக்க மாற்றங்கள்” பற்றி, அயல்நாட்டு தூதர்களுக்கு விளக்க, புதன்கிழமை காலை (17/1/2021)  புட்கம் மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் தலைவர் நாசிர் அகமது கான் மேடை ஏறினார்.

நாசிர் அகமது கானின் உதவியாளர் நாசிர் அகமது ஜஹ்ரா, அந்த சமயத்தில் மூன்றாவது நாளாக காவலில் வைக்கப்பட்டிருந்தார். தேசிய மாநாட்டுக் கட்சி உறுப்பினரான ஜஹ்ரா, “மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் (DDC)  உறுப்பினர்கள், குற்றவாளிகள் போல் நடத்தப்படுகின்றனர்” என வியாழக்கிழமை (18/1/2021) தி வயர்-யிடம் தொலைபேசியில் தெரிவித்தார். “என்னுடைய சக உறுப்பினர்கள் எட்டு பேர் பல்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். எங்களில் சிலரை எவ்வித கைது ஆணையும் இன்றி, எங்கள் வீட்டில் வைத்து கைது செய்து ஓட்டலில் வைத்துள்ளனர். தூதர்கள் தற்போது ஜம்முவில் இருக்கும் போதும் கூட, எங்களை விடுதலை செய்யவில்லை” என அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்

இந்நிலையில், இரண்டு நாட்கள் பார்வையிடலுக்காக ஜம்மு காஷ்மீர் வந்துள்ள, ஏறத்தாழ 12 பேர் கொண்ட வெளிநாட்டு தூதர் குழு கூடி இருந்த, பட்கம் மகம் அரசுக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில், நாசிர் இந்த உரையை நிகழ்த்தினார். எனினும், ஜஹ்ராவும், பிறரும் நடத்தப்பட்ட விதம் குறித்து கான் தனது உரையில் எதுவும் கூறவில்லை. அதற்கு மாறாக, “பாஜக அரசு அதிகார பரவல் மூலம் சாமானிய மனிதனை வலிமை உள்ளவனாக மாற்ற வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றி வருவதாக” அந்தக் கட்சியை பாராட்டிப் பேசினார். அவருக்காகவே  தயாரிக்கப்பட்டது போல் இருந்த ஒரு தாளிலிருந்து “கடந்த சில ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக கடந்த 2019 ஆகஸ்ட்டிலிருந்து, மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில் களத்தில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்று அந்த உரையைப் படித்தார்.

இந்த மாத துவக்கத்தில், புட்கம் மாவட்ட வளர்ச்சி மன்றத்தின் தலைவராக, எதிர்பாராத விதமாக அவர் வெற்றி பெற்றார். ஆனால் அந்தத் தேர்தல் மோசடி மற்றும் பாகுபாட்டுடன் நடந்ததாகக் கூறப்படுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சி பட்கம் மாவட்டத்தில் உள்ள 14 இடங்களில் 8 இடங்களை வென்று, தனிப் பெரும்பான்மையை பெற்றது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் அது எளிதாக தலைவர் பதவியை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அரசு அங்கு சமநிலை நிலவியதாக அறிவிக்கப்பட்டது.  இந்ற்கு எந்த விளக்கத்தையும் அரசு தரவில்லை. இதனால் “சீட்டுக்குலுக்கிப் போட்டதில்” “சுயேட்சையாக”  நின்று வெற்றி பெற்ற நாசிர் கான் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவர் முன்னதாக மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்ததாகவும், அண்மையில் பாஜகவின் ஆசி பெற்ற உள்ளூர் கட்சியால் கவர்ந்திழுக்கப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

தோல்விக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, தனது கட்சியைச் சேர்ந்த மாவட்ட வளர்ச்சி மன்ற உறுப்பினர்கள் எட்டு பேரின் புகைப்படத்தையும், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது கட்சி, நாசிர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுக்க இருப்பதாக அறிவித்தார். “ஜம்மு காஷ்மீரில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைப் பற்றிப் பேசுங்கள். நான் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களையும் சந்தித்தேன். குறைந்தது கூட்டணியைச் சேர்ந்த மேலும் ஒரு உறுப்பினரை சேர்த்தால், மொத்தமுள்ள 14 இடங்களில் 9 இடங்கள் வரும். இருப்பினும் “தேர்தலில்” சுயேட்சை உறுப்பினர் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

இந்த கூட்டம் நடைபெற்ற மகம் கல்லூரிக்கு வெளியே குண்டூசியைப் போட்டால் சத்தம் வரும் அளவிற்கு அமைதி நிலவியது. தாங்களாகவே, அறிவிக்கப்படாத கடையடைப்பை மேற்கொண்ட மகம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், அன்றை தினம் தூதர்கள் குழு, ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்ட பிறகு, மதிய நேரத்தில் கடைகளை திறந்தனர்.

காஷ்மீர் அமெரிக்க தினம் – நியூயார்க் சட்டமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்

ஸ்ரீ நகரிலிருந்து புறப்பட்ட தூதர்கள் குழு, ஜபர்வான் மலையின் மடியில் கட்டப்பட்டுள்ள அழகிய, மயக்கும் லலித் கட்டிடத்திற்குச் சென்றது. அங்கிருந்து ஸ்ரீ நகரின் அடையாளச் சின்னமான தால் ஏரியின் பரந்து விரிந்தக் காட்சி தெரியும். அங்கு ஒரு வட்டமேசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பார்வையாளர்கள் தூதர்களுடன் அமர்ந்து  “காஷ்மீரின் நிலை” குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீநகரின் மேயர் ஜூனாயத் ஆசிம் மட்டு, அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட வளர்ச்சி மன்றத் தேர்தல்கள் குறித்து தூதர்களுக்கு விளக்கினார்.

தூதர்கள், மிக முக்கியமான நேரத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்ததாக ஒப்புக் கொண்டார்கள் என்றும் ஜூனாயத் ஆசிம் கூறினார். “அவர்கள் கள உண்மைகளை அறிந்து கொள்ள விரும்பினர். அனைத்து அரசியல் கருத்து கொண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பங்கெடுத்துக் கொண்டனர். அதிகாரப் பரவல் குறித்தும், அடிமட்ட பிரதிநிதிகளை வலிமையுடையவர்களாக்கத் திட்டமிடுவது குறித்தும்  முக்கியமாகப் பேசப்பட்டது,” என்று ஜூனாயத் ஆசிம் கூறினார். முன்னாள் அமைச்சர் அல்தாஃப் புகாரியின், அப்னி கட்சியில் அண்மையில் தன்னை இணைத்துக் கொண்டார் ஜூனாயத் ஆசிம் மட்டு.

பத்திரிகைச் சுதந்திரம்

இந்த வட்ட மேசை மாநாட்டில், ஸ்ரீ நகர் மற்றும் பிற பகுதிகளின் மாவட்ட வளர்ச்சி மன்றம் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களும், அரசு நிர்வாக அதிகாரிகளும், மேலும் 12ற்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் தேசிய செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைகாட்சி நிறுவனங்களின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆசிரியர், “ஜம்மு காஷ்மீரில் பத்திரிகைச் சுதந்திரம் மீட்கப்பட்டு விட்டதாக அவர்களிடம் கூறினோம். அத்துடன் விரைவில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என அடிக்கோடிட்டுக் காட்டினோம்,” என்றும் கூறினார்.

ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா – ஒருமனதாக மாநிலங்களவையில் நிறைவேறியது

“தேர்ந்தெடுக்கப்பட்ட” செய்தியாளர்கள், தங்கள் சுதந்திரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, தூதர்களை சந்திக்க ஓட்டலுக்கு வெளியே காத்திருந்த இன்னொரு பத்திரிகையாளர் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. “பொதுவாக காவல்துறையினர் எங்களை ஓட்டலில் வாயிலிலேயே நிறுத்தி விடுவார்கள். ஆனால் இம்முறை வாயில் வரை கூட அனுமதிக்கவில்லை. நாங்கள் படமெடுக்கக் கூட முடியாத அளவு 300 மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டோம்,” என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் சஜத் பட். அந்த வட்டமேசை மாநாடு நடந்த இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில், ஸ்ரீ நகரின் பாதுகாப்பு காரணமாக வேலையிழந்து நிற்கும் பல படகுக்காரர்கள், மதிய வெயிலில் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.

அந்த சமயம், “காஷ்மீருக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தயவு செய்து இப்போது உங்கள் நாட்டில் இருந்து சில உண்மையான சுற்றுலாப் பயணிகளை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்புங்கள்,” என்று ஒமர் அப்துல்லா தனது டிவிட்டரில் பதிவிட்டார்.

“உண்மை நிலவரம்”

அரசு பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்களிடம் தங்கள் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு தூதர்கள், ஹோட்டலை விட்டு ஹஜ்ரத்பால் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்றனர். சில மணி நேரத்திற்கு முன்புதான் அந்த இஸ்லாமியர்களின் மிகவும் மதிப்பிற்குரிய முகம்மது நபியின் நினைவுச் சின்னம் இருக்கும் வழிபாட்டுத் தலம் உள்ள தெருக்களில், மலைபோல் குவிந்திருந்த பனியை அகற்றும் பணியில், பல நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த தலமும் அங்கு பணிபுரியும் சில பணியாளர்கள் தவிர, குறிப்பிட்ட செய்தியாளர்களும், உள்ளூர்வாசிகளும் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தலைவர் தேர்தல்கள் – ” எல்லா நெறிமுறைகளையும் மீறுகிறது பாஜக “

மாலையில் தூதர்களின் கடைசி கட்ட திட்டமாக ஷேர்-இ- காஷ்மீரி பன்னாட்டு மாநாட்டு மையத்தில், ஒரு சிறிய அளவிலான கைவினைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருடன் சந்திப்பு, உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களின் பட்டியல் பாதுகாப்பு முகமைகளால் இரகசியமாக ஆராயப்பட்டதாக, ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

“கேள்வி கேட்பதை விடுங்கள், அவர்களை நெருங்கக் கூட எங்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தில்லி  ஊடகக்குழுவுடன் வந்தனர். தொலைக்காட்சி களுக்கு அவர்களே பதிவுகளைக் கொடுத்தனர். எங்கள் தொலைக்காட்சிகள் நாங்கள் அனுப்பிய பதிவுகளை பயன்படுத்தவே இல்லை,” என்கிறார் ஒரு  பெயர் வெளியிட விரும்பாத தொலைகாட்சி செய்தியாளர். இது வியப்பிற்குரியதல்ல.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதஸ்தை நீக்கிய பின், மோடி தலைமையிலான அரசு செய்துள்ள ” முன்னேற்றங்கள்” குறித்து எடுத்துக்காட்ட, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த இரண்டுநாள் பார்வையிடல் திட்டத்திற்கு முன்பே, பல ஆர்வமூட்டும் நிகழ்வுகள் காஷ்மீரில் நடந்தன.

வீட்டு சிறையில் காஷ்மீர் தலைவர்கள்: ‘இதுதான் உங்கள் புதிய மாடல் ஜனநாயகம்’ – உமர் அப்துல்லா விமர்சனம்

முதலாவதாக, ஜம்மு காஷ்மீரில் உயர்வேக இணைய சேவை, அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்றுள்ள பைடனின் அழுத்தத்தால், மீண்டும் தரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தூதர்கள் ஸ்ரீ நகரில் வந்திறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகிய இருவருக்கும் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை ஆணைகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால் இவர்களில் யாரும் தூதர்களை சந்திக்க அழைக்கப்படவில்லை.

காஷ்மீரில் எதிர்ப்புக் கிளர்ச்சி ஆரம்பித்த போதே, காஷ்மீரை விட்டு  வெளியேறி, ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் காஷ்மீரி பண்டிட்டுகள் குடியேறிவிட்டதால், இதுநாள் வரை  மூடப்பட்டிருந்த ஷீத்தல் நாத் கோவில், தூதர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பு திறக்கப்பட்டது.

ஸ்ரீ நகர் சிவில் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ நகருக்கு வருபவர்களை கொண்டு வரும் சாலையின் முக்கிய இடத்தில், கடந்த மூன்றாண்டுகளாக இருந்த மத்திய ஆயுதப்படையின் பதுங்கு குழி இடித்துத் தள்ளப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டங்களைக் கட்டாயப்படுத்தியதாகச் செய்தி வெளியிட்ட விவகாரம் – ஊடகவியலாளர்களுக்கு இடைக்கால ஜாமீனை மறுத்த ஜம்மு & காஷ்மீர் நீதிமன்றம்

புதன்கிழமை காலை தூதர்கள் காஷ்மீரில் வந்திறங்கிய உடனே, குப்கார் சாலையில் எங்கிருந்தோ ஒரு கருணைச் சுவர் வந்தது‌. அது  “ஐரோப்பிய ஒன்றிய தூதர்களுக்கு இதமான ஆடைகளை வழங்குவதற்காக வந்ததா!” என்று ஒமர் அப்துல்லாவின் சகோதரி சஃபியா அப்துல்லாவை வியப்புடன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முரண்பாடுகள் எல்லாம் காஷ்மீரிகள் சமூக வலைதளத்தில் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் வரை நீடிக்கவில்லை. முகநூலைப் பயன்படுத்தும் காஷ்மீரைச் சேர்ந்த யூனிஸ் பாஷிர்,” பதுங்கு குழிகள் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வருமா? கேட்கிறேன்.,” என தனது வியப்பைத் பதிவிட்டார்.

இதே வேளையில், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இயல்பாக இயங்கிய போதும், ஸ்ரீநகரில் ஒரு முழு கதவடைப்பு அனுசரிக்கப்பட்டது. பள்ளத்தாக்கின் மிகப் பெரிய சந்தை இடமான லால் சௌக் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்த வணிக நிறுவனங்களும், தூதர்களின் பார்வையில் படாத வகையில் மூடியே கிடந்தன.

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றச்சாட்டு – 3 ராணுவ வீரர்களை கைது செய்த  ஜம்மூ & காஷ்மீர் காவல்துறை

வியாழனன்று தூதர்கள் ஜம்முவை விட்டு, ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் இந்திய இராணுவம், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடனான சந்திப்பிற்காக புறப்பட்டுச் சென்ற உடனே, காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது.

இது, கடந்தகால நடைமுறைகளின் மறு செய்கைதான். இது காஷ்மீர் மக்களின் கவனத்தை ஈர்க்க தகுதியற்றவை என்கிறார் ஜம்மு காஷ்மீர் அமைச்சரும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான ஆகா ருஹுல்லா. “நிதி உதவி பெற்றுக் கொண்டு, கட்டுப்பாடுடன் கூடிய பார்வையிடலுக்காக வந்துள்ள தூதர்கள், கள உண்மைகளை மறைத்துவிட்டு, தவறான காட்சிகளை முன்வைக்க தங்களைத் தாங்களே எவ்வாறு அனுமதிக்க முடியும் என்பதை, அவர்களே திரும்பிப் பார்க்க வேண்டும்,” என்று கூறுகிறார் ருஹுல்லா.

(www.thewire.in இணைய தளத்தில், ஜஹாங்கிர் அலி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் “இயல்பு நிலை” – காதில் பூ சுற்றிக் கொண்டு புறப்பட்ட வெளிநாட்டு தூதர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்