Aran Sei

அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன் – வரலாறு படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ்

ஜோசப் ராபினெட் பைடன் ஜூனியர் (அல்லது சுருக்கமாக ஜோ பைடன்) புதன்கிழமையன்று அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் ஆகியவை நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சி, அமெரிக்க சமூகத்தின் நல்லிணக்கத்தை கிழித்தெறிந்துள்ள சமயத்தில், ஒற்றுமையை நிலைநாட்டுவேன் என்ற உறுதிமொழியுடன் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

தன்னுடைய குடும்பத்தால், 128 ஆண்டுகளாக பாதுகாத்து வரப்படும், 5 அங்குல தடிமன் கொண்ட பைபிள் மீது தனது கையை வைத்து, “அரசியல் சாசனத்தை பாதுகாப்பேன்” என்ற 35 வார்த்தைகளை கொண்ட உறுதிமொழியை பைடன் வாசித்தார். முந்தைய அதிபரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு சரியாக 11 நிமிடங்கள் இருந்த சமயத்தில், அதாவது அமெரிக்க நேரம் நண்பகல் 11.49 மணிக்கு, தலைமை நீதிபதி ஜான் ஜி.ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்துவைக்க, ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

அடுத்தபடியாக, நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்துவைக்க, மனித உரிமை ஆர்வலரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான துர்கூட் மார்ஷலுக்கு இதற்கு முன்னர் சொந்தமாக இருந்த பைபளின் மீது கை வைத்து, கமலா தேவி ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க அரசியலில், மிக உயரிய பதவியைப் பெற்ற, முதல் பெண்மணி என்ற பெயரைப் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ். அதேபோல், கருப்பினத்தை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர், அமெரிக்காவின் இரண்டாவது உயரிய பதவியை பெறுவதும் இதுவே முதல்முறையாகும்.

தேர்தல் முடிவுகளை மாற்ற வேண்டும் என்று கோரிய மற்றும் தேர்தலில் கடைசிகட்ட எண்ணிக்கையின் போது, தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் செய்த டிரம்ப்பின் முயற்சி பலிக்காதுபோன நிலையில், அதிபராக பொறுப்பேற்றவுடன், ஜோ பைடன் தன் முதல் உரையில் “ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமெரிக்கர்கள் தங்களுக்குள்ளான கசப்பான பிரிவினையை தள்ளிவைத்து விட்டு, பெருந்தொற்று, பொருளதார நெருக்கடிகள் மற்றும் இனவாதத்தை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர்

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை – அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது

“சிகப்பிற்கும் நீலத்திற்கும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும், பழமைவாதிகளுக்கும், தாராளவாதிகளுக்கும் இடையிலான, இந்த நாகரீகமற்ற போரை நாம் நிறுத்த வேண்டும்” என்று, ஆழ்ந்த அர்த்தம் கொண்ட மற்றும் எல்லோர் மனதையும் தொடக்கூடிய, 21 நிமிட உரையில், பைடன் இதைக் கூறியுள்ளார். மேலும் “நம் இதயத்தை கடுமையாக்குவதற்கு பதில் நம் மனங்களை திறப்பதன் மூலமும், சிறிதளவு பொருமையையும், மனிதாபிமானத்தையும் காண்பிப்பதன் மூலமும் இதை சாதிக்க முடியும். என் தாய் சொல்வார், அடுத்தவருடைய நிலையிலிருந்து ஒரு நிமிடம் சிந்தித்துப் பார் என்று. அவ்வாறு செய்வதன் மூலம் இதை சாதிக்க முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஒற்றுமை” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்திய பைடன், சிலருக்கு இது முட்டாள்தனமான படோபடமாக தோன்றலாம் என்றும் இதற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் முந்தைய பிரிவினையிலிருந்து நாம் ஒன்றாக மீண்டெழலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஒற்றுமையில்லையேல், அமைதியிருக்காது, கசப்பும் கோபமும்தான் மிஞ்சும். முன்னேற்றம் இருக்காது, சீற்றம்தான் மிஞ்சும். குழப்பமான நிலையில் மட்டுமே எந்த நாடும் இருக்க முடியாது. பிரச்சனைகளும், சவால்களுமான வரலாற்று தருணத்தில் நாம் இருக்கிறோம். ஒற்றுமையே நமது முன்னேற்றத்திற்கான ஒரே வழி” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தென்றலுடன், குளிரான, சிறிய அளவில் பனி பெய்த, அதேவேளையில் சூரிய ஒளியும் நிறைந்திருந்த ஒரு பொழுதில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வு, புயலோடு முடிந்த, டிரம்பின் நான்கு ஆண்டுகால பிரிவினை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. அவருக்கே உரித்தான குணாம்சத்தின்படி, தோல்வியை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், மறுபடியும் பாரம்பரியத்தை மீறி, பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன், டிரம்ப் வாஷிங்டனை விட்டு புறப்பட்டுவிட்டார். ஆனால், அவருடைய துணை அதிபர் மைக் பென்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

புளோரிடாவில் உள்ள மர்-அ-லகோ பண்ணை வீட்டில் குடியிருக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால், தேர்லின் கடைசி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில், அதை சீர்குலைக்கும் நோக்கத்தில், தன்னுடைய ஆதவாளர்களை தூண்டிவிட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிடச் செய்த குற்றத்திற்காக, அவருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பதவி நீக்க தீர்மானம் தொடர்பான விசாரணை, இன்னும் சில நாட்களில் அமெரிக்க செனட்டில் நடைபெறவுள்ளது.

(www.nytimes.com இணையதளத்தில் வெளியான செய்தியின், சுருக்கமான மொழியாக்கம்)

அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன் – வரலாறு படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்