Aran Sei

அம்பேத்கர் மீது பாசம் பொழியும் இந்துத்துவா: அம்பேத்கர் மீதான திரிபுகளை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

ம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அவரை காவி உடையில் விபூதி பட்டையுடன் சித்தரித்து கும்பகோணத்தில் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது பலத்த எதிர்ப்பை சந்தித்தது. மேலும், சென்னை உட்பட அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த முயன்ற இந்துத்துவர்கள் தடுக்கப்பட்டார்கள். அம்பேத்கரை அவமதிப்பு செய்தவர்களுடன் சமரசமின்றி களத்தில் மோதினார்கள் அம்பேத்கரிய உணர்வாளர்கள். இதுபோன்று, அம்பேத்கரின் கருத்தியல்களை திரிபுபடுத்துவதும் அவதூறான பிரச்சாரங்கள் வழி வரலாற்றை மடைமாற்றம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன், ஒரு பகுதியாகவே அம்பேத்கர் பற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நினைவுரை அமைகிறது.

நினைவு தினத்தன்று தமிழ்நாடு ராஜ்பவனில் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றிய ஆளுநர், ‘அம்பேத்கரைக் காங்கிரஸ் தோற்கடித்தது, பாகிஸ்தான் பிரிவினையை அவர் எதிர்த்தார், காஷ்மீர் பிரச்சனையில் நேரு ஐநாவை நாடியதை அம்பேத்கர் எச்சரித்தார்’ என்று ஒரு சாரார் கூறும் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே தொட்டுச் சென்றார். தேசியவாதியான அம்பேத்கர் தேசிய மதம் என்பதாலேயே புத்த மதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று ஆளுநர் கூறியதில் எவ்வித பொருள் அடிப்படையுமில்லை.

கும்பகோணம்: காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆளுநர் பேசியது கவனம் செலுத்த வேண்டியது. ‘இந்தியர்களின் ஒற்றுமை உணர்வைக் கண்டு அச்சமடைந்த பிரிட்டிஷ் அரசு தனிவாக்காளர் முறை (Separate Electorate) மூலம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தது. ஜின்னா இதற்கு இணங்கிப்போனார். மேலும் பல ஜின்னாக்களை உருவாக்க அம்பேத்கரை நாடினர். ஆனால், மகாத்மா காந்தியுடன் செய்துகொண்ட பூனா ஒப்பந்தத்தின் மூலம் தனிவாக்காளர் முறையை மறுத்தார் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனிவாக்களர் முறை வழங்கியிருந்தால் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா முழுவதுமாக சிதைந்திருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

தனிவாக்காளர் நடைமுறை பிரிட்டிஷ் சூழ்ச்சியின் ஒரு பகுதி, ஜின்னாவின் உதவியால் அது சாத்தியமானது, அம்பேத்கர் அந்த முறைக்கு எதிரானவர். ஆதலால், பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று மூன்று முக்கிய விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார் ஆளுநர். ஒவ்வொன்றுக்கும் தொடர்பில்லாத உணர்ச்சிப்பூர்வமான இந்த செய்திகளின் உண்மைத் தன்மையை சிறிது அறியலாம்.

காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்

1920களின் மத்தியில் ஆலய நுழைவு, மகர் சத்தியாகிரகம் போன்ற கலாச்சார உரிமைகளுக்குப் போராடிய அம்பேக்த்கர், இந்து சமூகத்தின் சாதிய மனநிலையை போக்குவது எளிதல்ல என்பதை உணர்கிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் உரிமைகளின் மூலமே தங்களுக்கான விடுதலையை அடைய முடியும். அதற்கு, சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக தங்களுக்கான தனித்த அதிகாரத்தை அரசியல் பிரதிநிதித்துவம், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியின் மூலம் கண்டடைய வேண்டும். இந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக, ‘இந்துக்கள், முஸ்லிம்களுக்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்களைத் தனித்த சமூகமாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கான அதிகார பகிர்வு அன்றி பூரண விடுதலை சாத்தியப்படாது’ என்ற முடிவுக்கு வருகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான அம்பேத்கரின் குரல் வட்ட மேசை மாநாட்டில் தீர்க்கமாக எதிரொலிக்கிறது, ‘ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசியல் அதிகாரத்திலும் சட்டமன்ற மற்றும் நிர்வாக அலகுகளிலும் அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மத்திய கவுன்சில் மற்றும் மாகாண சட்டமன்றங்களிலும் போதுமான பிரதிநிதித்துவத்தைத் தேர்தல் சட்டத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அவை, அவர்களின் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை, முதல் பத்து ஆண்டுகளுக்கு தனிவாக்காளர் முறை (separate electorates), பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்புதலுடன் பொது வாக்கெடுப்பு மற்றும் தொகுதி இட ஒதுக்கீடு (Reseverd Seats) ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.

ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு – அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

அம்பேத்கரின் ஆதார கோரிக்கையினை 1932ம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிரிட்டிஷ் அரசு ஏற்றது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த மதிப்பு வாய்ந்த ஆயுதமாக அதனை அம்பேத்கர் பார்த்தார். ஆனால், பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் திட்டத்தின் சதி என்று தனிவாக்களர் உரிமையைக் குறிப்பிடும் தமிழக ஆளுநர் பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிக்குள் சிக்கியவர் என்ற அர்த்தத்தில் அம்பேத்கரின் போராட்டங்களை மதிப்பிழக்கச் செய்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தனிவாக்காளர் உரிமையை எதிர்த்த காந்தி, தானே இந்திய மக்களின் ஒற்றை பிரஜை என்று கூறி அம்பேத்கரின் நிலைப்பாட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார். காந்தி தங்கள் நலனில் நியாயமற்று நடக்கிறார் என்றார் அம்பேத்கர். போராட்டத்தில் இருக்கும் காந்தியின் உயிரைக் காக்கும் பொருட்டே கையறுநிலையில் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒடுக்கப்பட்ட தனித்தொகுதி வாக்காளர்கள் தங்கள் தலைவர்களை தாங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து வாக்களிப்பர்’ என்று கூறியது ஒப்பந்தம். ‘சாற்றை முழுக்க சாதி இந்துக்கள் எடுத்துக்கொண்டு வெறும் சக்கையை எங்களுக்கு வழங்கிவிட்டார்கள்’ என்றே இதனை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஆனால், அம்பேத்கர் விருப்பப்பட்டு பூனா ஒப்பந்தத்தினை ஏற்றார் என்பது எந்த நியாயமுமற்ற வரலாற்றுப் புரட்டு.

நாட்டில் நடக்கும் கொடுமைகளை ஏற்காமல்தான் டாக்டர் அம்பேத்கர் புத்த மதம் தழுவினார் – சரத் பவார்

விடுதலைக்கு பிறகான இந்தியாவில் எவ்வித அவதூறுக்கும் ஆளாகும் நபராக ஜின்னாவை கூறலாம். பிரிவினைவாதி என்ற ஒற்றை வசைச் சொல் அதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்பே முஸ்லிம்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்கு தனிவாக்களர் உரிமையை வழங்கியிருந்தது பிரிட்டிஷ் அரசு. முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிந்து சலுகை பெற ஜின்னா பகடைக்காயாகச் செயல்பட்டார் என்ற கூற்றில் எந்தளவிற்கு அறம் உள்ளது.

ஜின்னா முஸ்லீம் லீகில் இணைந்தது 1913ம் ஆண்டு. அதற்கு முன் காங்கிரஸ் கட்சியின் நாடறிந்த தலைவராக இருந்தார். கோபால கிருஷ்ண கோகலேவின் மிதவாத ஆதரவாளர், மேற்கத்தியக் கல்வி பயின்ற நவீனவாதி, சரோஜினி நாயுடு கூறியது போல் ‘இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதுவர்’ என்பதே ஜின்னாவின் அன்றைய அடையாளம். சொல்லப்போனால், முஸ்லீம் லீக் தோற்றத்திற்கு முன்பே முஸ்லீம்களின் தனிவாக்க்காளர் போராட்டம் தொடங்கியது. 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையின் விளைவாக இந்து-முஸ்லீம் அரசியல் கூர்மையடைகிறது. 1906ம் ஆண்டு வைஸ்ராய் மிண்டோ தலைமை தாங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ‘சிம்லா பிரதிநிதிகள்’ (Simla Deputation) என்றே குழுவே முதலில் முஸ்லிம்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை எழுப்பியது. இதற்குப் பின்னாளில் லீகின் நிறுவனர்களில் ஒருவராக இருந்த ஆகா கான் தலைமை தாங்கினார்.

ஒடிசாவில் அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது பஜ்ரங் தளம் தாக்குதல் – தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாத காவல்துறை

ஜின்னா இந்த கோரிக்கையைக் கடுமையாகச் சாடினார். பிரிட்டிஷ் அரசு முஸ்லிம்களுக்குச் சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்து முஸ்லீம் உறவில் சிக்கலை ஏற்படுத்த முயல்கிறது என்றார். சிறுபான்மையினருக்கு எதிரான சமூக பதற்றம் அதிகரித்த அன்றைய சூழலில் அரசியல் திரட்சியடைந்த முஸ்லிம்களின் இந்த முதன்மை கோரிக்கையை எதிர்த்த ஒரே முஸ்லீம் தலைவராக ஜின்னா இருந்தார்’ என்கிறார் ஜின்னா வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஐயான் வெல்ஸ். ஜின்னா லீகில் இணைய ஒப்புக்கொண்டது கூட வெகுஜன அரசியலில் முஸ்லிம்களை இணைத்துச் செயல்படும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

காந்தியின் எழுச்சி ஆன்மீக அடையாளங்களை முன்னிறுத்துவது, சிறுபான்மையினர் என்ற பெயரில் முஸ்லிம்களுக்குத் தனித்த கரிசனம் ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பதாக முரண்பட்டார் ஜின்னா. அரசியலுக்குள் மதத்தை கொண்டுவரும் காந்தியை எதிர்த்த ஜின்னா, காந்தியின் ‘கிலாபத் இயக்க’ ஆதரவில் உச்சபட்ச கோபமடைகிறார். 1920ல் நடந்த நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் கிலாபத்தை உயர்த்திப் பிடித்த காந்தி மற்றும் முஸ்லிம் தலைவர்களை எதிர்த்து ஆதரவின்றி காங்கிரசை விட்டு வெளியேறினார். கிட்டத்தட்ட 1940 வரையிலும் கூட லக்னோ ஒப்பந்தத்தில் (1916) பிகடனப்படுத்தப்பட்ட இந்து முஸ்லீம் ஒருங்கிணைந்த தேச விடுதலையே முதன்மை குறிக்கோள் என்ற எண்ணத்தில் அவர் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அம்பேத்கருக்கு நிகராக மோடியை புகழ்ந்துள்ள இசைஞானி இளையராஜா – மோடி, அம்பேத்கர் குறித்த புத்தகத்திற்கு முன்னுரை

சமூக அரசியலில் ஈடுபாடு கொள்ளாத தாராளவாத தேசியவாதியாக இருந்த ஜின்னா, பிறகு முஸ்லீம் சமூக அரசியலைப் பேசத் தொடங்கியதும், அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் உரிமைக்காகப் போராடத் தொடங்கியதும் ஒரே காலத்தில் நடந்தேறியது. இருவரும் எதிர்க்கும் புள்ளியாகக் காங்கிரஸ் மைய ஆதிக்கச் சாதி அரசியல் இருந்தது. இந்நிலையில், முஸ்லிம்கள் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே பெற்று வந்த தனிவாக்காளர் உரிமைக்காக ஜின்னா பிரிட்டிசாருக்கு இணங்கினார், அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார் ஆகிய கருத்தில் அவதூறை கடந்த அரசியல் இருக்கிறது.

ஆளுநரின் கருத்தை வெறும் தகவல் பிழையாகச் சுருக்கிவிட முடியாது. பிரிட்டிசார் பிரித்தாளும் கொள்கையை (Divide and Rule) தங்கள் நலனிற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், காங்கிரசை மையப்படுத்திய தேசியவாத அரசியலைத் தவிர்த்து அனைத்து வரலாறுகளையும் புறம் தள்ள நவீன தாரளவாதிகள் இந்த பதத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சமூக நீதி அரசியல், மாகாண சுயாட்சி, சிறுபான்மையினர் உரிமை என அனைத்தும் ஒற்றை வார்த்தையில் அர்த்தமிழக்கச் (Cancel) செய்யப்படுகிறது. அம்பேத்கரின் போராட்டங்களை அரசியல் நீக்கம் செய்வதற்குப் பின்னும் இது செயல்படுகிறது. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு, சமூக விடுதலை போராட்டமானது நிலவும் ஆதிக்கத்தின் எதிர்ப்பில் உயிர்பெற்றிருந்தது. மாறாக, ஒரு சாரார் அதிகார பெருந்தேசியத்தின் அடையாளமாக மட்டும் சித்தரிப்பதன் மூலம் அம்பேத்கருக்கு மற்றொரு பூனா ஒப்பந்தம் பரிந்துரைக்கப்படுகிறது.

கட்டுரையாளர்: மு. அப்துல்லா

Sangathamizhan reacts to Gayathri Raghuram Resignation | Annamalai | Honey Trapping | KT Raghavan

அம்பேத்கர் மீது பாசம் பொழியும் இந்துத்துவா: அம்பேத்கர் மீதான திரிபுகளை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்