Aran Sei

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தில் துறைமுகம் அமைக்கலாம் – நடாளுமன்றத்தில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பிரகாஷ் ஜாவ்டேகர் - Image Credit : thewire.in

2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின்படி, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தில் (CRZ),  துறைமுகம் மற்றும் அதை சார்ந்த கட்டமைப்பை உருவாக்க அனுமதி உள்ளது என்று, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிகாஷ் ஜவடேகர், நாடாளுமன்றத்தில் பதில்அளித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னைக்கு அருகே விரிவாக்கம் செய்யப்படவுள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் குறித்து எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், கடல் அரிப்பு அதிகமாக உள்ள கடற்கரைப் பகுதியில், துறைமுகம் அமைப்பதற்கு அனுமதியளிக்கப்படாது என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பள்ளி துறைமுகம், தனியாரிடம் ஒப்படைக்கப்படவில்லை – கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திலும், அதிக அளவு கடல் அரிப்பு ஏற்படும் பகுதியிலும், சரணாலயங்களுக்கு அருகிலும், துறைமுகங்கள் அமைப்பதற்கு தடை உள்ளதா என்ற கேள்விக்கு “இந்த முன்மொழிவு, தற்போது உள்ள துறைமுகத்தை விரிவுபடுத்தவே. தற்போது உள்ள துறைமுகத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியும், கடற்கரை ஒருங்குமுறை மண்டல அனுமதியும், உரிய சரிபாப்பிற்குப் பிறகு, 03.07.2009 அன்று அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. அத்துடன், புலிகாட் ஏரி, திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதியின் வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது” என்று, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்அளித்துள்ளார்.

ஆய்வுப் பணிகளை (Term of Reference) மேற்கொள்வதற்காக, 15.10.2019 அன்று, அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அனுமதியில், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதும் அடங்கும் என்று கூறியுள்ள பிரகாஷ் ஜவடேகர், ஆனால் இதுவரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

துறைமுக விரிவாக்கத் திட்டத்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகுமா? தண்ணீர் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமா? நிலத்தடி நீருடன் உப்புநீர் கலந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது உண்மை என்றால், இந்த திட்டம் குறித்து, தவறான தகவலை தரும் நிறுவனத்தின் மீது, அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்றும் கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள பிரகாஷ் ஜவடேகர் “தற்போது வரை அதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

மேலும், ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் படி (ToR), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் (i) தற்போது உள்ள கட்டமைப்புகளின் வளர்ச்சி குறித்த ஒருங்கிணைந்த ஆய்வு, (ii) கழிமுகப் பகுதியில் ஏற்படும் பாதிப்பு, (iii) எண்ணூர் கழிமுகம் முதல் புலிகாட் ஏரி வரையில் கடற்கரைப் பகுதியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்த திட்டம், (iv) தற்போது செயல்படுத்தவுள்ள திட்டம், சுனாமி மற்றும் புயல்களிலிருந்து கடற்கரையை காப்பாற்றும் எண்ணூர் சோலைகளில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பு, (v) எண்ணூர் கழிமுகம், புலிகாட் ஏரி, பங்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் வடிநிலங்களின் தன்மை குறித்த ஆய்வு, (vi) பல்லுயிர் பெருக்கம் குறித்த ஆய்வு, (vii)சுற்று வட்டார கிராமங்களின் சமூக-பொருளாதார ஆய்வறிக்கை, ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரகாஷ் ஜவடேகர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட, சுற்றுச் சூழல்தாக்க ஆய்வறிக்கை அறிவிப்பாணையின் படி, உண்மைகள் மறைக்கப்படும் பட்சத்தில், திட்டத்திற்கான அனுமதி ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தில் துறைமுகம் அமைக்கலாம் – நடாளுமன்றத்தில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்