ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும், பேரறிவாளன் உட்பட, 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகுறித்து, மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக, அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி, 3 அல்லது 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்” என்று தமிழக ஆளுநர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் மேத்தா, நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வின் முன்பு தெரிவித்துள்ளதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்துவருவதை குறித்து, பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில், இன்று ஆளுநர் தரப்பில் இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜனவரி 20) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பாக ஆஜரான வக்கறிஞர் கே.எம்.நட்ராஜ், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில், விடுதலை மற்றும் மன்னிப்பு தொடர்பான விவகாரங்களை ஆளுநர் முடிவு செய்ய முடியாது, மாறாக குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறினார்.
பேரறிவாளன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், ஆளுநரையோ அல்லது குடியரசுத்தலைவரையோ அணுகுவது குறித்த சுதந்திரம், தண்டனை பெற்றவர்களுக்கு உண்டு என்று வாதிட்டார்.
அதேபோல், 2015ஆம் ஆண்டு ஸ்ரீஹரன் வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்பில், கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம், குடியரசு தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2018ஆம் ஆண்டு, மத்திய அரசு கருணை மனுவை நிராகரித்துள்ள நிலையில், மனுதாரர் (பேரறிவாளன்), அரசியல் சாசன பிரிவு 161ன் படி, ஆளுநரை அணுக உரிமை உள்ளது என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகேஸ்வரவராவ்,ஆளுநரின் தாமதம் “அசாதாரணமான” செயல் என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அரசில் சாசன அமர்வு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரித்த வழக்கில், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், விடுதலையோ அல்லது தண்டனை குறைப்போ செய்ய முடியாது என்று உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, 2016ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
அந்த கடிதம் தொடர்பாக இரண்டு ஆண்டுகள் காலம் தாழ்த்திய மத்திய அரசு, இறுதியாக, விடுதலை செய்ய அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி, இந்த வழக்கில் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் கழித்து, தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர் பயாஸ் ஆகியோரை விடுதலை செய்ய முடிவெடுத்தது.
அமைச்சரவையின் அந்த பரிந்துரை, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பரிந்துரை மீது, தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.