Aran Sei

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் – பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் பாஜக

டந்த சில ஆண்டுகளாக, தவறான தகவல்களை பரப்பியதற்காக பாஜகவின் மாநில பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் இணை பொறுப்பாளர் அமித் மால்வியா உட்பட, பாஜக வங்காளப் பிரிவின் மூத்த தலைவர்கள் பலமுறை விமர்சிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள வங்காளத்தில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

போலி தகவல்களை பரப்பியதற்காக பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் அலுவலக பொறுப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட ஏராளமான வழக்குகளையும் மீறி, வங்காள பாஜக பரப்பும் தவறான தகவல்களின் அளவு கடந்த சில நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இப்போது நடந்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில், வெறுப்பைத் தூண்டுவதற்காக பாஜக பரப்பிய ஐந்து முக்கிய போலி செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட கதைகளை பட்டியலிட்டுள்ளொம்.

விவசாயிகள் போராட்டம் – கொச்சைப் படுத்திய அமித் மால்வியா – எச்சரித்த டிவிட்டர்

ஜெய் ஸ்ரீராம் Vs லா இலாயிலாஹா இல்லல்லாஹ்.

ஜனவரி 23 அன்று, விக்டோரியா நினைவிடத்தில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவின் போது, பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களுடன் மம்தா பானர்ஜியை வரவேற்றதையடுத்து, நிகழ்ச்சிநிரலின் படி உரையாற்ற மம்தா மறுத்துவிட்டார். அந்த காணொளி விரைவில் காட்டுத்தீ போல பரவியது.

மோடி தன் உரையில் அந்த நிகழ்வு குறித்து எதுவும் குறிப்பிடாமல், ஜெய்ஹிந்த் மற்றும் ஜெய் பங்க்ளா முழக்கத்துடன் உரையை முடித்துக்கொண்டாலும், அமித் மால்வியா மற்றும் பாஜக மாநிலத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட தலைவர்கள், ஜெய் ஸ்ரீராம் கோசத்தை அவமானமாக எடுத்துக்கொண்டதற்காக மம்தாவை கடுமையாக விமர்சித்தனர்.

அடுத்த நாள், வங்காள பாஜகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் இரண்டு காணொளிகளை பதிவேற்றி, “ஏன் இத்தகைய பாசாங்குத்தனம், மம்தா பிஷி? இஸ்லாமிய வாசகங்களை வரவேற்கிறீர்கள் ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் கசக்கிறதா?” என எழுதியது.

(பிஷி எனும் வங்காள சொல்லுக்கு ‘தந்தையின் சகோதரி’ அல்லது ‘அத்தை’ எனப் பொருள். பெரும்பாலும் இது மம்தா பானர்ஜியைக் குறிக்க பாஜகவால் பயன்படுத்தப்படும் சொல். ஏனெனில் இந்த சொல் அவரது அண்ணன் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, மிரட்டி பணம் பறித்ததை நினைவுப்படுத்தும் வகையில் இருப்பதாக பாஜக நினைக்கிறது)

மேற்கு வங்கத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் அமித் மால்வியா

1.13 நிமிடங்கள் நீளும் அந்த காணொளியில், முதல் 12 வினாடிகள் ‘லா இலாஹா இல்லல்லாஹ் மொஹம்மத்’ என மம்தா வழிபடுவது காட்டப்படுகிறது, அடுத்து விக்டோரியா நினைவிட நிகழ்வு காட்டப்படுகிறது.

ஆனால் அந்த காணொளியின் 12 வினாடிகள், மம்தா பானர்ஜியின் நீண்ட உரை ஒன்றிலிருந்து வெட்டப்பட்டது என தெரிகிறது.

1.35 நிமிடங்கள் நீளும் அந்த முழுக் காணொளியில் இந்து மந்திரங்களைக் கூட மம்தா உச்சரிக்கிறார். அதில் துர்க்கையின் மந்திரங்களை 25 வினாடிகளுக்கு ஓதும் மம்தா, அல்லா, இயேசு மற்றும் குரு நானக் ஆகியோரையும் வழிபடுவதோடு மதநல்லிணக்கம் குறித்தும் பேசுகிறார்.

பாஜகவின் வங்காள பிரிவின் ஃபேஸ்புக் பக்கம், 12 விநாடிகள் கொண்ட மற்றொரு காணொளியை பதிவேற்றி, “வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு அரசாங்க நிகழ்வில் இஸ்லாமிய பிரார்த்தனைகளை உச்சரிக்க முடியும் என்றால், ஜெய்ஸ்ரீராம் என்று வரவேற்கப்படுவதில் அவருக்கு என்ன பிரச்சினை? இஸ்லாமிய சார்பா? நேதாஜியின் ஆண்டுவிழாவில் அவர் செய்த இந்த செயலால் நேதாஜியையும் அவரது மரபுகளைத் தாங்கியவர்களையும் அவமதித்துள்ளார்” என்று எழுதியுள்ளது.

நிவாரணம் மற்றும் மதச்சார்பு

வட வங்காளத்தின் துப்குரியில் ஜனவரி 19ல் நடந்த சாலை விபத்தில் இறந்த 17 பேருக்கு, தலா 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக ஜனவரி 20 அன்று காலை 10:37க்கு பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டது.

மதியம் 2:04 மணிக்கு மேற்கு வங்க அமைச்சர் கௌதம் தேப், இறந்தவர்களுக்கு தலா 2.5 லட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்குவதாக ட்விட்டரில் அறிவித்தார்.

’என்னை நோக்கி துப்பாக்கியை காட்டினால், என்னுள் இருக்கும் ஆயுதகிடங்கையே உங்களுக்கு காட்டுவேன்’ – மம்தா பானர்ஜி

பாஜக மாநிலத்தலைவர் திலீப் கோஷ் அடுத்தநாள் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், மாநில அரசு விபத்து நிவாரணம் வழங்குவதில் கூட மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

“நிவாரணம் வழங்குவதில் கூட இஸ்லாமிய சார்பு. மால்டாவில் தொழிற்சாலை விபத்தில் 6 இஸ்லாமியர்கள் இறந்தபோது ஜனப் பிர்ஹாத் ஹக்கிம் உடனடியாக நிவாரண காசோலைகளுடன் ஹெலிகாப்டரில் பறந்து சென்றார், ஆனால் துக்புரி சாலை விபத்தில் 14 பேர் (இந்துக்கள்) இறந்தும் மாநில அரசை காணவில்லை, பிரதமர் தான் நிவாரணம் அறிவிக்கிறார். சார்புடைய இந்த அரசாங்கம் இனியும் தேவையில்லை” என கோஷ் பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

கோஷ் குறிப்பிடும் அந்த விபத்து நவம்பர் 19 அன்று மால்டா மாவட்டத்தின் சுஜாபூரில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை இயந்திரம் வெடித்ததால் ஏற்பட்டது. அதை வெடிகுண்டு விபத்து என குறிப்பிட்ட வங்காள பாஜக தலைவர்கள், உடனடியாக தேசிய புலனாய்வு முகமையின் (NIA) விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரினர்.

விபத்து நிகழ்ந்தவுடன், நகர் வளர்ச்சித்துறை அமைச்சர் பிர்ஹாத் ஹக்கிமை நிகழ்விடத்தை பார்வையிட மம்தா பணித்தார். மாலையில் அதை விபத்து என குறிப்பிட்ட அரசு, இறந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் அறிவித்தது.

அதேவேளை, நிகழ்வு நடந்த போது தெற்கு வங்காளத்தின் பர்ட்வான் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த கோஷ், என்ஐஏ மாதிரியான மத்திய அமைப்பின் விசாரணை தேவை என கோரினார். மேலும், அதீத இஸ்லாமிய சார்பு காரணமாக மாநில அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், அதன் மூலம் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஊடுருவாளர்கள் அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சாவர்க்கர் குறித்த நேதாஜியின் நம்பகமில்லாத கூற்று.

இந்துத்துவ சாவர்க்கர் குறித்து, நேதாஜி புகழ்ந்ததாக ஒரு மேற்கோளை எந்தவித ஆதாரமுமில்லாமல் கோஷ் பகிர்ந்தார்.

“திடீர் அரசியல் காரணங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையின்மை காரணமாக பெரும்பாலும் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்களை அந்நிய கைக்கூலிகள் என்று அழைக்கும் போது, இந்திய இளைஞர்கள் படையில் சேருவதற்கு வீர் சாவர்க்கர் பயமின்றி ஊக்கமளிக்கிறார் என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் அதிகரிக்க உதவுவார்கள்”

இது குறித்து ஆய்வு செய்த போது, இந்த மேற்கோள் 2013 ல் ஸ்வராஜ்யா இதழில் இருந்து எடுக்கப்பட்டு பரவியது தெரிய வருகிறது. இந்த கட்டுரையை எழுதியவர் இந்த மேற்கோள் தனஞ்செய் கீர் எழுதிய சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த புத்தகத்தின் 350வது பக்கத்தில் இதை கீர் குறிப்பிட்டிருந்தாலும் எந்தவித ஆதாரத்தையும் குறிப்பிடவில்லை.

ஜூன் 25, 1944ல் நேதாஜி நடத்திய உரை, நேதாஜியின் சேகரிக்கப்பட்ட எழுத்துகள், உரைகள் எவற்றிலும் இந்த மேற்கோளை கண்டுபிடிக்க கீர் தவறிவிட்டார்.

அதேவேளை, இந்து மகாசபை, முஸ்லீம் லீக், சாவர்க்கர் மற்றும் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் குறித்த நேதாஜியின் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் படையின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த போஸ், அதற்கான ஆதரவு வேண்டி முகம்மது அலி ஜின்னா மற்றும் சாவர்க்கரை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு, சாவர்க்கர் உலக நிலைமை குறித்த பிரக்ஞை இருந்தபோதும் பிரிட்டன் படைகளோடு இணைவதன் மூலம் இந்துக்கள் எப்படி ராணுவ பயிற்சி பெற முடியும் என்பதை மட்டுமே அவர் சிந்தித்தார் என எழுதியுள்ளார்.

இந்த நேர்க்காணல்கள் மூலம், முஸ்லீம் லீக் மற்றும் இந்து மகாசபை இரண்டிடமிருந்தும் எதையுமே எதிர்பார்க்க முடியாதென்ற முடிவுக்கு வர வேண்டியிருப்பதாக போஸ் எழுதியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31, 1942 ஜெர்மனியின் ஆசாத் ஹிந்த் வானொலியில் பேசிய போஸ்,

மாவோயிஸ்டுகளை விட பாஜக மிகவும் ஆபத்தானது: மம்தா பானர்ஜி

“பிரிட்டனோடு இன்னமும் சமாதானத்திற்கு காத்திருக்கும் ஜின்னா, சாவர்க்கர் ஆகியோருக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளை பிரிட்டன் பேரரசு என்ற ஒன்றே உலகில் இருக்காது. இன்றைக்கு சுதந்திரப்போரில் பங்கெடுக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் கட்சிகள் சுதந்திர இந்தியாவில் சிறப்பிக்கப்படுவார்கள். அதேவேளை பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கு துணை நிற்பவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் எந்தவொரு மதிப்புமில்லாமல் போகும்” என்று தெரிவித்தார்.

சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை

ஜனவரி 25 ல், வங்காள பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில், “கலியாசக்கில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது, முங்கரில் இருந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்” என தெரிவித்தது. இந்த பதிவு, “தொழில்துறை பகுதியா அல்லது ஆயுதக் களஞ்சியமா? மாநில அரசு வங்காளத்தை தொழில்துறை மையத்திலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை மையமாக மாற்றியுள்ளது. ஆளும் கட்சி தொழில்துறைக்கு பதிலாக ஆயுதங்கள் மூலம் மாநிலத்தை ஆள முயற்சிக்கிறதா?” எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மால்டா மாவட்ட காவல்துறையுடன் இணைந்து சிஐடியின் மாநில சிறப்பு பணிக்குழு காவல்துறையினரால் இந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது உண்மை தான்.

வங்காள பாஜகவின் பேஸ்புக் பக்கம் ஜனவரி 25ல் மால்டா சம்பவம் மற்றும் ஹவுரா மாவட்டத்தில் இருந்து வெடிபொருட்களை மீட்டது குறித்த மற்றொரு இடுகையில். “பிஷியின் ஆட்சியின் கீழ், வங்காளம் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான பகுதியாக மாறியுள்ளது. பிஷி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கும்போது, ​​வங்காளம் பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தது.

ஜனவரி 9ல் ஹவுராவிலிருந்து மாநில காவல்துறையால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதும் உண்மை தான்.

ஜிகாதி அமைச்சர்

டிசம்பர் 15 அன்று, திலீப் கோஷ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், மாநில வெகுஜன கல்வி விரிவாக்க மற்றும் நூலக சேவை அமைச்சர் சித்திகுல்லா சவுத்ரி, ஒரு கையில் மூங்கில் குச்சியுடன் தடுப்பூசிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் நிற்கும் ஒரு சித்திரத்தை வெளியிட்டார். “மூங்கில் குச்சிகளைக் கொண்டு அடித்து வங்காளத்தை கட்டியெழுப்புவேன்” என்று அமைச்சர் சொல்வது போல எழுதியிருந்தது, பொதுமக்களுள் ஒருவர் “தடுப்பூசியை மறந்துவிடுவோம், முதலில் என்னை ஜிகாதி அடியிலிருந்து காப்பாற்றிக்கொள்கிறேன்” என சொல்லிக்கொண்டே வாகனத்திடமிருந்து தப்பி ஓடும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

சித்திரத்தில் மற்றொரு கருத்தாக, “நூலக அமைச்சர் சித்திகுல்லா சவுத்ரி கையில் மூங்கில் குச்சியைக் கொண்டு போராடுகிறார், தடுப்பூசிகளைக் கொண்டு செல்லும் காரைத் தடுக்கிறார்.” மேலும் இதற்கு “வங்கத்தில் ஜிஹாதி போராட்டத்தின் புதிய வடிவம்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

பாஜகவின் வங்காள பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் இதே போன்றதொரு குற்றசாட்டை வைத்திருந்தார்.

டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக, ஜனவரி 13 ம் தேதி கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் ஒரு தேசிய நெடுஞ்சாலையைத் தடுத்து,சவுத்ரி முன்பே திட்டமிடப்பட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்பது உண்மை தான். சாலை முற்றுகை காரணமாக தடுப்பூசி கொண்டு சென்ற கார் தடைபட்ட போது, ​​சவுத்ரி ஒரு மூங்கில் குச்சியை எடுத்து, போராட்டக்காரர்களை கலைத்து கார் செல்ல வழி ஏற்படுத்தினார் என வங்காள ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

முற்றுகையை கலைக்க அமைச்சர் ஒரு மூங்கில் குச்சியைக் கொண்டு போராட்டக்காரர்களை விரட்டியடித்தார் என்று டிவி 9 பங்களாவின் மற்றொரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயவர்கியா பகிர்ந்த காணொளியில் , சவுத்ரி தனது கையில் மூங்கில் குச்சியைக் கொண்டு சாலையைத் தடுப்பவர்களை விரட்டிய பிறகு கூட்டத்தில் உரையாற்ற ஒரு காரில் ஏறியதைக் காட்டுகிறது. ஆனாலும் விஜய் வர்க்கியா அமைச்சர் ஏன் மக்களை அடிக்கிறார் எனத் தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனந்தபஜார் பத்ரிகாவின் அறிக்கையில், வாகனத்திற்காக வழி ஏற்படுத்தும் முயற்சியில் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த அமைச்சர் குச்சியை எடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கையில் ஒரு குச்சியுடன் சவுத்ரி வாகனத்தில் நிற்கும் புகைப்படத்தையும் அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது, “சவுத்ரி எதிர்ப்பாளர்களை கையில் ஒரு குச்சியைக் கொண்டு அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. முஸ்லிம்களைத் தவிர, பல சீக்கியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுரையை எழுதிய ஸ்னிக்தெண்டு பட்டாச்சார்யா, கொல்கத்தாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் – பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் பாஜக

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்