இதுவரை பார்த்தேயிராத வகையில் ஒரு குடியரசு தினத்தைக் கொண்டாடியிருக்கிறது இந்தியா. தலைநகர் டெல்லி இரண்டு அணிவகுப்புகளுக்கும், இரண்டு கொடியேற்று நிகழ்வுகளுக்கும் சாட்சியாகியிருக்கிறது. முதலாவது இந்திய குடியரசின் பெருமைகளைப் பறைசாற்ற அரசு நிகழ்த்திய அணிவகுப்பு, இரண்டாவது குடியரசு நாட்டில் குடிமக்களின் உரிமைகள் பறிபோவதைக் கண்டித்து நடந்த அணிவகுப்பு.
முதலாவது, விமான தயாரிப்புக்குச் சம்பந்தமே இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, முறைகேடாக வாங்கப்பட்டதாக எதிர்கட்சிகளால் குற்றச்சாட்டுக்கு அரசே ஆளாகி பின்பு நீதி மன்றத்தால் அது மறுக்கப்பட்ட, ரபேல் விமானங்களைக் கொண்டு நடத்தப்பட்ட அணிவகுப்பு; இரண்டாவது ட்ராக்டர்களைக் கொண்டு நடத்தப்பட்ட சாமானியர்களின் அணிவகுப்பு. அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அரசின் சர்வாதிகாரம் எல்லை தாண்டி ஜனநாயகத்தின் கோவில்களாகச் சொல்லப்படும் சட்ட மன்றங்கள், நாடாளுமன்றங்களிலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத சூழலில் நடத்திய போட்டி சட்டமன்றங்களையும், நாடாளுமன்றங்களையும் பார்த்த வரலாறு முதன் முதலாகச் சாமானிய மக்கள் போட்டி குடியரசு தின பேரணி நடத்தியதை பார்த்திருக்கிறது.
இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தலைநகரில் போராடி, பல விதமான இன்னல்களுக்கு நடுவிலே உயிர் பலிகளையும் சித்ரவதைகளையும் தாண்டி அமைதிவழியில் வந்த விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தி செங்கோட்டையில் கொடியேற்றியிருக்கிறார்கள்.
முஸ்லீம் லீக்கின் கொடியையும் முஸ்லிம மத அடையாள தர்காக்களின் கொடிகளையும், பாகிஸ்தான் கொடி என்று பொய் குற்றாச்சாடை முன்வைத்துப் போராடும் மக்களின் மீது அவதூறு பிரச்சாரங்கள் முன்வைக்கப்டுகின்றன. சர்வதேச சதியின் கைக்கூலிகளாகவும் இந்திய தேசத்தின் விரோதிகளாகவும் உழைக்கும் உழவர்களின் உரிமை மீட்பு போராட்டம் சித்தரிக்கப் படுகின்றது. அதைப்போலவே தேசியக் கொடி இல்லாமல் காலியாக இருந்த மாடத்தில் ஏற்றப்பட்ட சீக்கியர்களின் மத அடையாள கொடியையும், விவசாய சங்க கொடியையும் காலிஸ்தான் கொடி என்ற பொய் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் தொடக்கத்திலேயே, தடை செய்யப்பட்டவர்கள் நுழைந்திருப்பதாக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அப்படி ஊடுருவல் இருந்தால் அறிக்கையாக அரசை அன்றே தாக்கல் செய்யச் சொன்னது உச்சநீதிமன்றம். கடந்த காலங்களில் இதைப் போன்ற குற்றச்சாட்டுகளை ஜல்லிக்கட்டு, ஜேஎன்யூ போராட்டம், சிஏஏ போராட்டங்களின் போதும் அரசு போராட்டக்காரர்கள்மீது வைத்ததோடு இல்லாமல் அரசு இயந்திரங்களின் உதவியுடன் அதிகாரிகளை வைத்துக் கலவரங்களைப் போராட்டங்களுக்குள் நடத்தப்பட்டதும் மக்கள் அறிந்தது தான். கூடவே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் களத்தில் உண்மை கண்டறியும் குழுக்கள், சமூகவலைதளங்களில் செயல்படும் உண்மை கண்டறியும் குழுக்கள் கண்டறிந்து ஆய்வு செய்து வெளியிட்ட ஆதாரங்கள் ஏராளம் உள்ளன.
விவசாயிகள் செய்தது தவறு என்ற புள்ளிக்கு நகர்பவர்கள் யாரும், இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடந்தும் சட்டத்தைத் திரும்பப் பெற முன்வராத அரசுகுறித்து பேசுவதேயில்லை. ஊடகங்கள் கூட எப்படி போராட்டம் நடத்த வேண்டும் என்று விவசாயிகளுக்குப் பாடம் எடுத்தார்களே தவிர அரசின் அலட்சியம் குறித்து எதுவும் பேசவில்லை.
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட முறைகுறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நெறிமுறைகள் மீறப்பட்டதாக மாநிலங்களைவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். சட்டத்தை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இவை எல்லாவற்றையும் மீறி மேற்கண்ட சட்டங்கள் விவசாயிகளுக்கு உறுதியாக நலம் பயக்கும் எனச் சத்தியம் செய்கிறது மத்திய அரசு. ஆனால் விவசாயிகளுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை. குறைந்த பட்ச ஆதார விலைக்கான உத்தரவைச் சட்டத்தில் சேருங்கள் என்று விவசாயிகள் கேட்டனர். அரசோ சட்டத்தில் அல்ல வெறும் காகிதத்தில் எழுதித் தருகிறேன் என்றது. சட்டத்தில் இருந்தால் தான் அநீதி இழைக்கப்பட்டால் கூட நீதிமன்ற கதவுகளைத் தட்ட முடியும் என்று மன்றாடினர். இதையடுத்து உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. அந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் ஏற்கனவே வெளிப்படையாக வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள். அவர்களிடம் விவசாயிகள் கோரிக்கைகள் எடுபடுமா என்ற விமர்சனங்கள் எழுந்தன.
போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்
வேளாண் சட்டம்குறித்து ஆராய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவை ஏற்க முடியாது என விவசாயிகள் நிராகரித்தனர். நிர்வாகம், சட்டம் என அரசின் எல்லா அங்கங்களின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் என்றால் குடியரசின் நோக்கம் கேள்விக்குறியாக்கப் படுகிறது என்பதே பொருள். கடைசி நம்பிக்கைகள் மக்கள் போராட்டங்கள் என்ற முடிவின் விளிம்பைத் தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுப்பது மனித இயல்பு.
அதன் நீட்சியே நேற்று டெல்லியில் நடந்த போராட்டங்கள் என மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது. ஓரு போராட்டம் வீரியமாக நடந்து கொண்டிருக்கும்போது அரசு முறையாகக் கையாள தெரியாமலோ அல்லது சர்வாதிகார போக்குடன் நடந்துக் கொண்டாலோ அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு அதிகரிப்பது இயல்பானதே. அதைக் கலைக்க காவல் துறை கையில் எடுத்த உத்திகளைச் சென்னை மெரினா போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், டெல்லி சாகின் பாக் போராட்டங்கள் போதுமான சான்றாகவே இருக்கின்றன.
தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணிகள் தடைகளைத் தகர்த்து செங்கோட்டை நோக்கி நகர ஆரம்பித்தபோது கண்ணீர் புகை குண்டுகள், தடியடி கூச்சல் குழப்பம் என இதுவரை இந்தியா பார்த்திராத குடியரசுத் தினத்தைச் சர்வதேச ஊடகங்கள் தொடங்கி தேசிய ஊடகங்கள்வரை வெளிச்சம் போட்டுக் காண்பித்து கொண்டிருந்தன.
இவ்வளவுக்கும் மத்தியில் தலைநகரின் மறு முனையில் காது கேட்கும் தூரத்தில் இருந்த ராஜ்கோட்டில் குடியரசு தின விழாவில் உற்சாகமாகக் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டார். விவசாயிகள் பிரச்னைகுறித்து வெவ்வேறு இடங்களில் எல்லாம் பேசிய பிரதமர், விவசாயிகளுக்குப் புரியாத மொழியில் மன் கி பாத்தில் பேசினார். டெல்லியில் நேற்று நடந்த நிகழ்வுகுறித்து எந்தக் கருத்தையும் பிரதமர் இதுவரை தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடியின் நீண்ட மவுனம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அமெரிக்க தலைநகரில் நடந்த வன்முறை குறித்தெல்லாம் கருத்து தெரிவித்தவர் செங்கோட்டையில் விவசாயிகள் கொடியேற்றியது குறித்து கருத்து தெரிவிக்காததன் மர்மம் ஊரறிந்தது.
ஒரு மேம்பட்ட ஜனநாயக சமூகத்தில் வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதே நேரம் ஒரு பெருந்திரள் போராட்டத்தில் சிலர் வழிதவறிச் செல்லும் சமபவங்கள் நடக்கும். ஒட்டுமொத்த போராட்டத்தில் ஆத்திரத்தில் சிலர் அத்துமீறியதற்கு பெயர் வன்முறை என்றால், தொடர்ந்து அலட்சியப்படுத்தி அவர்களை அந்தத் திசை நோக்கி நகர்த்திய அரசு செய்ததற்கு பெயர் என்ன? கடும் குளிரை பொருட்படுத்தாது, உயிர் இழந்த விவசாயிகளைப் பார்த்தும் போராட்டங்களைக் கைவிடாது தொடர்ந்து போராடியவர்களை பொருத்தது போதும் என்னும் நிலைக்குத் தள்ளியது என்பது குறித்து பேச மறுக்கிறது அரசும், ஆளுங்கட்சியும். அதன் செல்லப்பிள்ளைகளான ஊடகங்களின் அரசின் ஊதுகுழல்களாக இருக்கின்றன.
சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தால் இந்த வன்முறையைத் தடுத்திருக்கலாம். வன்முறை செய்தவர்களைக் கண்டிக்கின்ற அரசியல்வாதிகள் அரசின் இந்தப் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்க தவறியது ஏன்? நாடு என்பது அரசும், எழுதி வைத்த சட்டங்களும் மட்டும் அல்ல. அங்கு வாழும் மக்களையும் உள்ளடக்கியது. குடிகளுக்கான அரசாகச் செயல்படும் போது தான் ஒரு நாட்டைக் குடியரசு என்று அழைக்க முடியும்.
இந்தியாவை இப்போது எப்படி அழைப்பது?
(கட்டுரையாளர் பொதுநல மற்றும் நீரிழிவு மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.